கட்டுரைகள்பிரதான செய்திகள்

‘மாகாணசபை தேர்தல்; தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்’

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முன்பாக அதில் திருத்தங்களை கொண்டு வருவதில் அவசியம் உள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் வைத்து இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டிய தேவையுள்ளது.

என்ன திருத்தம் என்பது தொடர்பான பிரேரணையினை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கின்ற போது அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவிப்பார்கள்.

அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படும்போது அது தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பில் கட்சி ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போல் தீர்மானம் எடுக்கும். தேர்தல் முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்பட வேண்டும்.

முதலாவதாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு இந்த அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும். ஐ.நா மனித உரிமை பேரவையில் கூட அது சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் பல பிழைகள் காணப்படுகின்றன. எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது.

எதை அரசாங்கம் முன்வைக்கப் போகின்றது என்பதை அறிந்த பின் அது தொடர்பில் ஆராய்ந்து எங்களது நிலைப்பாட்டினை வெளிப்படுத்துவோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலினால் பல உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டின் மீது பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை தொடர்பில் பலரும் பலவிதமான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது, சொல்லப்படவில்லை என்பது இன்று விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பல குறைபாடுகளை கண்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து உண்மையான விடயங்களை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதனை நாங்களும் ஏற்றுக்கொண்டு அதில் என்ன தவறு இருக்கின்றது, எது திருத்தப்பட வேண்டும், உண்மை என்ன என்பது தொடர்பில் ஆண்டகையின் வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரிக்கின்றது.

அந்த அறிக்கை முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளதா?, முழுமையாக முன்வைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விகள் நாடாளுமன்றத்திலேயே எழுப்பப்பட்டுள்ளது.

அது தொடர்பிலான குறைபாடுகளை எமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அது தொடர்பான விவாதத்தின் போது கருத்துகளை முன்வைப்பார்கள் என கூறியுள்ளார்.

Related posts

ரணிலுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை! ஜே.வி.பி

wpengine

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

wpengine

நல்லாட்சியில் இனவாத கைதுகள்

wpengine