Breaking
Sun. Nov 24th, 2024

(எம்.ஐ.முபாறக்)

முழு உலகமும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விடயம்தான் சர்வதேசத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் .ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அஸ்தமனம்.அவர்களை முற்றாகத் துடைத்தெறியும் படை நகர்வுகளின் முன்னேற்றம் சர்வதேசத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முழுமையான வெற்றியுடன் அந்த நகர்வுகள் அனைத்தும்முடிவடைய வேண்டும் என உலக நாடுகள் அனைத்தும் விரும்புகின்றன.

குறிப்பாக,உலக முஸ்லிம்களுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ள-முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ள இந்த ஐ.எஸ் இயக்கம் முற்றாக ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற விருப்பம் முஸ்லிம்களிடம்தான் அதிகம் உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம் இளைஞர்கள்  இந்த இயக்கத்தில் இணைவதாலும் ஐரோப்பிய நாடுகளையே இந்த இயக்கம் அதிகம் குறி வைத்துத் தாக்குவதாலும் அந்நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்கள் உடல் மற்றும் உளரீதியாக அதிக தொல்லைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.ஐ.எஸ் பயங்கரவாதிகளைத் தேடும் சாக்கில் பொலிஸார் நடத்தும் நாடகத்தால் ஐரோப்பிய முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் ஐ.எஸ் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது முஸ்லிம்கள்  பல துன்பங்களை அனுபவித்தனர்.

வன்முறை என்றால் என்ன-ஆயுதக் கலாசாரம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து வரும் ஐரோப்பிய முஸ்லிம்கள் இன்று பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படுவதற்கு இந்த ஐ.எஸ் அமைப்புத்தான் காரணம்.

இந்த இயக்கம் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணானது.இஸ்லாமிய பெயரில் இஸ்லாத்தை அழிக்க வந்த இயக்கம்தான் இது என்ற பிரசாரம் போதியளவில்  முன்னெடுக்கப்படாததால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல முஸ்லிம் இளைஞர்கள்  இன்னும் ஐ.எஸ் இயக்கத்தால் கவரப்படவே செய்கின்றனர்.இப்போதும்கூட,அந்த நாடுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் அந்த இயக்கத்தில் இணையவே செய்கின்றனர்.

ஆனால்,அந்த இயக்கம் இப்போது அதன் முடிவு காலத்தை நெருங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.அந்த முடிவு பூரணமாக இல்லாவிட்டாலும் அவர்கள் நிலங்களை இழந்து கெரில்லாத் தாக்குதலுக்கு மாறுவர் என்பது நிச்சயம்.

2014 ஆம் ஆண்டு சிரியாவில் ஒரு பகுதியையும் ஈராக்கில் ஒரு பகுதியையும் கைப்பற்றி கிலாபத் [இஸ்லாமிய பேரரசு] ஆட்சி முறையை ஐ.எஸ் இயக்கம் பிரகடணப்படுத்தியது.அப்போது அவர்கள் வலிமையான நிலையில் இருந்துகொண்டு பல இடங்களை விறு விறுவெனக் கைப்பற்றி அவர்களின் போலிக் கிலாபத்தை இந்த இரண்டு நாடுகளிலும் விஸ்தரித்துக் கொண்டு சென்றனர்.

ஆரம்பத்தில் அவர்கள் இருந்த அசூர வேகத்தால் அரச படையினர் பின்வாங்கவே செய்தனர்.பின்னர் சுதாகரித்துக் கொண்ட அரச படையினரும் அவர்களுடன் இணைந்த துணைப் படையினரும் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உதவியுடன்-விமானப் தாக்குதல்களின் பலத்துடன் முன்னேறத் தொடங்கினர்.இதனால் ஐ.எஸ் இயக்கம் கைப்பற்றி இருந்த இடங்கள் ஒவ்வொன்றாகப் பறிபோயின.

ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் அமைந்துள்ள சின்ஜார் நகர் ,அன்பார் மாகாணத்தின் ரமதி நகர்,மொசூல் மற்றும் பலூஜா ஆகியவை ஐ.எஸ் இயக்கத்திடம் ஆரம்பத்தில் வீழ்ந்தன. பின்னர் ஈராக்கிய படையினரின் முன்னேற்றகரமான படை நகர்வால் சின்ஜார் மற்றும் ரமதி நகர் மீட்கப்பட்டன.

இப்போது ஈராக்கில் ஐ.எஸ் இயக்கத்திடம் எஞ்சி இருப்பது மொசூல் மற்றும் பலூஜா ஆகிய இரண்டு முக்கிய இடங்களும் வேறு சிற்சில கிராமங்களும்தான்.மேற்படி இரண்டு இடங்களும் வீழ்ந்தால் ஈராக்கில் ஐ.எஸ் முழுமையாக வீழ்ந்தமைக்குச் சமமாகும்.

இந்த நிலையில்,பலூஜா நகரை நோக்கிய படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அது இப்போது வெற்றியின் விளிம்பில் நிற்கின்றது.பலூஜாவை அண்டியுள்ள பல இடங்களை ஈராக்கிய படையினர் இப்போது மீட்டெடுத்துள்ளனர்.இன்னும் ஒருசில நாட்களில் பலூஜா முற்றாக வீழ்ந்துவிடும் நிலையில் உள்ளது.

மறுபுறம்,சிரியா படையினரும்  சமகாலத்தில் ஐ.எஸ்  இயக்கத்துக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.சிரியா அரசுக்கும் அந்நாட்டின் எதிர்கட்சிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து சிரியா படையினர் ஐ.எஸ் இற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.

இதனால்,பல்மைரா நகரை ஐ.எஸ் இயக்கம் இழந்தது.தொடர்ந்து ஐ.எஸ்ஸின் தலைநகராகத் திகழும் ரக்கா நகரைக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கை இடம்பெறுகின்றது.இந்த நகரம் மீட்கப்பட்டால் சிரியாவில் ஐ.எஸ்களின் கதை முடிவுக்கு வந்துவிடும்.

சிரியாவும் ஈராக்கும் பறிபோகும்பட்சத்தில் லிபியாவையே அவர்கள் தளமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தனர்.2014 ஆண்டு முதலே அவர்கள் அங்கு கால் பதிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால்,அவர்களுக்கு எதிராக சம காலத்தில் அங்கும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.அவர்கள் கைப்பற்றி இருந்த எரிபொருள் துறைமுகம் மீட்கப்பட்டுள்ளது.ஏனைய இடங்களையும் மீட்டெடுக்கும் சண்டை உக்கிரமடைந்துள்ளது.

இவ்வாறு ஐ.எஸ்கள் நிலைகொண்டிருக்கும் மூன்று நாடுகளில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளையும் இழக்கப் போவது சாத்தியமாகும் எனத் தெரிகின்றது.

அவ்வாறு அந்த நாடுகளை இழக்கும்பட்சத்தில் அவர்களின் போலிக் கிலாபத் வலுவிழந்துவிடும்.அவர்கள் கெரில்லாத் தாக்குதலுக்கே மாற வேண்டி வரும்.அந்த கெரில்லாத் தாக்குதல் மூலம் எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது;அவர்களின் கிலாபத்துக்கு உயிரூட்ட முடியாது.

ஆகவே,உலகம் இன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வீழ்ச்சியை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றது.மிக விரைவில் ஐ.எஸ் இயக்கத்தின் கதை முடிவடையப் போவது  நிச்சயம்.1711ab0f-c27c-4d7a-96af-f78855596730

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *