முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஆறு நாடுகளிலிருந்தான பயணத்தைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய நிறைவேற்றுப் பணிப்புரையில் அவசர நிறுத்தமொன்றை மேற்கொள்ளுமாறு, மத்திய நீதிமன்றமொன்றை, ஹவாய் மாநிலம் நேற்றுமுன் தினம் (08) வினவியுள்ளது. இதனையடுத்து, புதிய தடையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தும் முதலாவது, மாநிலமாக ஹவாய் மாறியுள்ளது.
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (07) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையொன்றில், புதிய பயணத் தடைக்கு எதிராக தற்காலிகத் தடையொன்றை ஹவாய் கோரியுள்ளது. முன்னைய பயணத்தடைக்கெதிரான ஹவாயின் நீதிமன்ற அறிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய பயணத் தடையில், ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான், யேமனியப் பிரஜைகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணமாவதற்கு 90 நாட்கள் தடை விதிக்கப்பட்டபோதும், குறித்த பட்டியலில் ஈராக் உள்ளடக்கப்படவில்லை. புதிய தடையானது, புதிதாக விசாக்கு விண்ணப்பிப்போருக்கே செல்லுபடியானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹவாயும் ஐக்கிய அமெரிக்க அரசாங்கமும் இணைந்து தாக்கல் செய்த அறிக்கையில், வழக்கின் வாய்வழி விவாதங்கள், எதிர்வரும் புதன்கிழமை (15) இடம்பெறவேண்டுமென்று கோரியுள்ளன. புதிய பயணத் தடையானது, எதிர்வரும் வியாழக்கிழமை (16) முதல் அமுலாகின்றமை குறிப்பிடத்தக்கது.