Breaking
Sun. May 19th, 2024
 
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06ம் குறிச்சி கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக   10-03-2017 நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நாம் அத்வைதிகளை ‘மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்? எனும் தலைப்பில் ஓரிறைக் கொள்கை விளக்க மாநாடு நடைபெற இருந்த நிலையில் அப்பகுதியில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் வாள்வெட்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஸஹ்றான் மௌலவி தரப்பிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்புக்கும்;,அப்துர் ரஊப் மௌலவி தரப்பிலான ஸூபிஸ ஸூன்னத் வல் ஜமாஅத் தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அப்துர் ரஊப் மௌலவி தரப்பைச் சேர்ந்தவர்களில் வாள்வெட்டுக்கு இலக்கான அபூ பக்கர் முஹம்மட் முஸப்பிர் வயது 25 என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 09ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்வீச்சுக்கு இல்கான அபூ ஸாலிஹ் பஹ்மி வயது 36 என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இம் மோதல் தொடர்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மிக விரைவில் இம் மோதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றதால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நாம் அத்வைதிகளை ‘மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்? எனும் தலைப்பில் ஓரிறைக் கொள்கை விளக்க மாநாட்டை நிறுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாநாடு இடை நிறுத்தப்பட்டதுடன் ,அப்பகுதிக்கு உடனடியாக விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர ,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்று 10 வெள்ளிக்கிழமை இரவு அதிகளவான பொலிசாரும்,பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் மோதல் சம்பவம் தொடர்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் அதன் செயலாளரும், ஸூபிஸ ஸூன்னத் வல் ஜமாஅத்; -அப்துர் ரஊப் மௌலவி தரப்பில் டீன் வீதி,முக்கியஸ்தர்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மோதல் இடம்பெற்ற பகுதிக்கும்,இரு வைத்தியசாலைக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் விஜயம் செய்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டிருந்தார்.

மோதலில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற இருவரிடமும் வாக்குமூலம் பொலிஸாரினால் பெறப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *