அமெரிக்காவின் வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களை இலங்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் 20 வருடப் பூர்த்தியையொட்டி, அமெரிக்காவின் மேன்ஹெடனில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நினைவேந்தல் நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்.
2001 செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, நியூயோர்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையம் மற்றும் வொஷிங்கடனின் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் ஆகியவற்றை இலக்கு வைத்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரையொட்டி, ஐக்கிய நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் மற்றும் செப்டெம்பர் 11 நினைவு அருங்காட்சியகம் ஆகியன இணைந்து, இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள உலக நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், மேற்படி தாக்குதல்களால் உயிரிழந்தவர்களுக்கு கௌரவமளிக்கும் வகையில், நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
24.09.2021