Breaking
Sat. May 4th, 2024

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்தக் கோரி மாபெரும் பேரணி இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இப்பேரணி ஆரம்பமானது.

இதேவேளை குறித்த பேரணியானது வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி ஊடாகச் சென்று கண்டி வீதியை அடைந்து வவுனியா நகரம், பசார் வீதி வழியாக மாவட்ட செயலகத்தை சென்றடைந்தது.

அங்கு ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கான மகஜர் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற பேரணி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

 

கடந்த 25 வருடமாக யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமாக அமைந்துள்ள இப் பல்கலைக்கழகத்தை வன்னிக்கான பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், அதனை வலியுறுத்தி ஜனாதிபதியிடமும் மகஜர் கையளிக்கப்பட்டது.

 

சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் கலந்து கொண்ட இப்பேரணியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, கே.கே.மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

மேலும் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராசா, இ.இந்திரராஜா, செ.மயூரன், கமலேஸ்வரன், மாணவர்கள், ஆசிரியர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பல்கலைக்கழக சமூகம் எனப் பலரும் இதில் கலந்து கொண்டு தமது ஆதரவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *