Breaking
Sun. Nov 24th, 2024

-சுஐப் எம். காசிம்

மானிடம் வாழ்வதற்கான சூழலை அழிக்கும் சக்திகளைக் கட்டுப்படுத்த காலநிலை மாநாடு, கூட்டப்பட்டிருக்கிறது. இருநூறு நாடுகளின் தலைவர்கள் கிளாஸ்கோ நகரில் கூடி, தலையில் கைவைத்தும் கைவிரிக்கும் நிலைமைகள்தான் நிலவுகின்றன. இம்மாதம் 12 இல் முடிவடைய உள்ள இந்த மாநாட்டுக்கு எதிராக, இருநூறுக்கும் அதிகமான ஆர்ப்பாட்டங்களும் உலகளவில் நடாத்தப்பட்டிருக்கின்றன.

மேற்கில் பிரான்ஸ் முதல் அவுஸ்திரேலியா வரைக்கும், மறுபுறத்தில் தன்சானியா தொட்டு தென்கொரியா வரைக்கும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்களில் ஐம்பதாயிரம் பேருக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இது மட்டுமா? இந்தக் காலநிலை மாநாடு தோற்றுவிட்டதாகக் கூறி, கிளாஸ்கோ நகரிலேயே ஆர்ப்பாட்டங்கள் எழுந்துள்ளன.

நாம் வாழும் சூழலை மாசுபடுத்தும் சக்திகளை அல்லது பச்சைவாயுக் கழிவுகளைக் கட்டுப்படுத்தத்தான் இந்த மாநாடு. ஓசோன் படலத்தில் ஓட்டை விழச்செய்யும் கழிவுகளைக் கட்டுப்படுத்தத் தவறினால், நமது தலைமுறைக்கு இந்தப் பூமி நஞ்சாகிவிடும். மானிட வாழ்வுக்கு இவ்வளவு பெரிய சவாலாக உள்ள இந்தப் பிரச்சினையில், எந்த வல்லரசுகள் பொறுப்புடன் நடக்கின்றன? இதுதான் ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆதங்கம்.

அணுவாயுத உற்பத்தி, தொழிற்சாலைப் போட்டிகள், புதிய கண்டுபிடிப்புக்களிலுள்ள தீவிரங்கள், உற்பத்திகளை இரட்டிப்பாக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் மட்டுமா? விண்ணையே தொட்டுநிற்கும் விஞ்ஞான வளர்ச்சிகள் மானிடனை வாழவா வைக்கின்றன. வசதிகளைத் தந்திருக்கலாம், வாழ்க்கையைத் தந்ததாகச் சொல்ல முடியாதுள்ளதே!

மேலும், மனித முயற்சியின்றி இடம்பெறும் இயற்கை அழிவுகளான வெள்ளம், பஞ்சம் மற்றும் காடுகள் தீப்பிடித்தல் என்பனவும் நாம் வாழும் இப்பூமிக்கு எதிரிதான். இதைக் கட்டுப்படுத்தும் ஆளுமை வளர்ச்சியடைந்த நாடுகளிடம் இருக்கலாம். வளர்ச்சியடையாத நாடுகளுக்கு இவற்றை யார் வழங்குவது?

இந்நிலையில்தான், இந்த மாநாட்டில் உலகில் அதிகளவு வாயுக்களை வெளியிடும் சீனா, ரஷ்யா பங்கேற்கவில்லை. பங்கேற்றிருந்த அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற வல்லரசுகளும் வளர்ச்சியை மட்டுப்படுத்தி, நமது பூமியைக் காப்பாற்ற விரும்பவில்லை. இந்த லட்சணத்தில் எதற்கு இந்த மாநாடு என்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

பங்கேற்ற நாடுகளிடம் ஒரேயொரு கோரிக்கையையே இந்த மாநாடு முன்வைத்திருந்தது. பச்சைவாயுக் கழிவுகளைக் கட்டுப்படுத்த வல்லரசுகள் வழிவிட வேண்டுமாம். இதற்காக, அத்தியாவசியத்தை மட்டுப்படுத்தி, அவசியமற்ற உற்பத்திகளை அடியோடு நிறுத்த உலக நாடுகள் முன்வருவது அவசியமாகி உள்ளது. இந்நிலையில்தான், மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் நிலக்கரிப் பயன்பாடுகளை குறைப்பதற்கு போலந்து, வியட்னாம், சிலி ஆகியன முன்வந்துள்ளன.

ஆனாலும், அவுஸ்திரேலியா, இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா என்பன முழுமையாக முன்வரவில்லையே! உலக மின்சார உற்பத்தியில், நிலக்கரியிலான உற்பத்தி முப்பது வீதப் பங்களிப்பிலிருக்கிறது. இந்நிலையில், நாற்பது நாடுகள்தான் நிலக்கரிப் பயன்பாட்டை நிறுத்த இணங்கியுள்ளன. உலகின் கால்பங்கு முன்வந்து நமது பூமியை எப்படிக் காப்பாற்றுவது?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *