-சுஐப் எம்.காசிம்-
தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடகிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத வரை, தலைமைகள் மாத்திரம் சந்திப்பது, பேசுவது எல்லாம் வெறும் புஷ்வாணங்களாக வெடிப்பதற்கு மட்டுமே லாயக்காகின்றன. தாய்மொழிச் சமூகங்களுக்காக நிகழ்ந்த போராட்டங்களில், விடப்பட்ட தவறுகளிலிருந்துதான் இந்த சந்தேகங்களும் வலுவடைகின்றன. மூன்றாம் தேசியம் உருவானதா? உருவாக்கப்பட்டதா? என்பதற்கான விடைகளிலிருந்துதான், இந்த வரலாறுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
மத, இனங்களின் மூலங்களிலில்லாது, மொழிக்காக நடத்தப்பட்ட இந்த உரிமைப் போராட்டங்கள் திசைமாறத் தொடங்கிய 1990 க்குப் பிந்திய கள நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் தைரியம் அல்லது திராணிகள், சிறுபான்மைத் தலைமைகளுக்கு இருந்திருந்தால், இந்தச் சமூகங்கள் துருவப்பட்டிருக்காது. எனவே, எம்மைத் துருவப்படுத்திய நமது தாய்வீட்டு சக்திகள் இல்லாமல்போன காலத்திலிருந்தாவது, இந்த முயற்சிகள் ஏன் எடுக்கப்படவில்லை? இரு சமூகங்களதும் இணைவை விரும்புவோர் தொடுக்கும் கேள்விதானிது. இன்னுமொன்றும் இங்குள்ளது. ஒருமொழிச் சமூகங்க ளை துருவப்படுத்த எதிர்வீட்டில் இன்னுமொரு சக்தி இயங்கிக் கொண்டிருப்பதையும் இந்தத் தலைமைகள் உணர வேண்டும். இந்த உணர்தல்களற்றுப் போனதால்தான், ஆட்சியதிகாரங்களோடு மூன்றாம் தேசியம் ஒட்டிக்கொண்டு, தமிழ்மொழியின் தேசியத்தைப் பலவீனப்படுத்தியதாக தமிழர் தரப்பு அங்கலாய்ப்பதும் மூன்றாம் தேசியத்தின் தலைமைகளுக்கு தெரியாதவையல்ல.
இதுபோன்று, ஒருமொழித் தேசியத்துக்குள் உள்ள அக முரண்பாடுகளை தீர்ப்பதில், தமிழ் தேசியம் தயவுடன் செயற்படவில்லையே! என்ற ஆதங்கம் முஸ்லிம் தரப்பிடமும் இருக்கத்தான் செய்கின்றன. எனினும், என்றோ ஒருநாள் மீள இணைவதில்தான் சிறுபான்மைச் சமூகங்களின் மீட்சி இருப்பதை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளளவில் உண்மைப்படுத்தியிருப்பது, அண்மைக்கால தமிழ் கட்சிகளுடனான சந்திப்புக்கள் புலப்படுத்துகின்றன. இந்த நல்லெண்ணங்கள் வெற்றியளிப்பதற்கு தமிழ் கட்சிகளுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பயணிக்க வேண்டியுள்ள தூரத்தை கணிப்பிட முடியாதுள்ளதுதான் இதிலுள்ள துரதிஷ்டம்.
வட,கிழக்கு இணைப்பா? அல்லது பிரிப்பா? என்பதில், மதில் மேல் பூனை போன்று இராமல், ஒருபக்கம் வரவேண்டும். இதேபோன்று, வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திலுள்ள சவால்களை போக்க தமிழ் தலைமைகள் மனமுவந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான், இரு சமூகத்திலும் அடிமட்டத்திலுள்ள அச்சங்கள் நீங்கும். ஒவ்வொரு தரப்பிலும் இதுபோன்ற பல பணிகள் இருந்தும், ஒவ்வொன்றே இங்கு உதாரணமாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கு இந்த மீளிணைவுகளில் விருப்புக்கள் இருந்தாலும், சமூகங்களின் அடிமட்டங்களில் எழும் எதிர்ப்புக்களால் அவை கைவிடப்படுவதுண்டு. பொது அடையாளத்துக்குள் தமிழரும் முஸ்லிமும் வரவேண்டிய காலங்கள் பல தடவைகள் கைவிடப்பட்டதும் இதனால்தான். இதற்காகத்தான், அடிமட்ட அச்சங்கள் களையப்பட வேண்டும் என்கிறோம்.
உரிமைப்போரில் வழி தவறிய ஆயுதக்கட்டமைப்பு ஒழிந்துள்ள சூழலில், ஒருமொழி மாகாணங்களின் ஒரே நிர்வாகத்தால், மூன்றாம் தேசியத்துக்குப் பாரபட்சம் காட்டப்படாது என்பதை தத்துவரீதியில் விளக்க இருதரப்பு தலைமைகளும் தவறியிருக்கின்றன. இந்தத் தவறுகளைத் திருத்துவதற்கான வாய்ப்பாக எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலையாவது இந்தத் தாய்மொழித் தலைமைகள் பயன்படுத்துமா? இந்த ஆதங்கங்கள்தான், இரு புறத்திலிருந்தும் இந்தச் சந்திப்புக்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.
ஆட்சியாளர்களால் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையில், ஒத்தடத்துக்காக அல்லது ஒதுங்கிய வீட்டில் ஒரத்தில் குந்திக்கொள்ள முஸ்லிம் தரப்புக்கள் நெருங்குகின்றதா? என்ற சந்தேகத்தையும் தமிழர் தரப்பில் இந்தச் சந்திப்புக்கள் ஏற்படுத்தி வருகின்றன. இவ்வாறான சந்தேகங்களைக் களைவதுதான், தமிழ்மொழித் தலைமைகளுக்குள்ள தற்போதைய பணிகளாகின்றன.