Breaking
Thu. Apr 25th, 2024

ஊடகப்பிரிவு –

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், மன்னார் – மாந்தை மேற்கு, அடம்பனில், இன்று (10) இடம்பெற்ற கட்சியின் தேர்தல் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னரான, ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

தொல்பொருள் பிரச்சினை சில பிரதேசங்களில் தற்போது உருவெடுத்து வருகின்றது. சுமார் 30 வருட யுத்தத்தினால் பல்வேறு கஷ்டங்களையும் பல இன்னல்களையும் வடக்கு, கிழக்கு மக்கள் சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்தது மட்டுமின்றி, காணிகளைக் கூட இழந்திருக்கின்றனர். யுத்தம் முடிந்து தனது சொந்த இடங்களில் மீளக்குடியேறிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும். தொல்பொருளியல் என்ற போர்வையிலே, இந்த மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது. பிரச்சினைகள் உள்ள இடங்களில் இதனை சாதுரியமாகத் தீர்த்து வைப்பது உரியவர்களின் பொறுப்பாகும்.

குறிப்பிட்ட பிரதேசத்தின் அரசியல்வாதிகள், சமூகத் தலைமைகள், மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் இதனைத் தீர்த்துக்கொள்ள முடியும். அதைவிடுத்து, இதனை பூதாகாரமாக்கி, இனங்களுக்கிடையிலான சச்சரவாக மாற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட தரப்பினர் இடமளிக்கக் கூடாது. அது நாட்டுக்கு நல்லதுமல்ல. இனவாதிகள் இதனை தூக்கிப்பிடித்துக்கொண்டு திரிவதை கட்டுப்படுத்த வேண்டும்.” என்றார்.  

மேலும், “வன்னி மாவட்டத்திலே, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தரமான வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, இந்தப் பிரதேச மக்களின் வீடில்லாப் பிரச்சினையை தீர்த்துவைக்க, பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர். பாகுபாடின்றி இதய சுத்தியுடன் பணியாற்றியவர். வன்னி மாவட்ட கிராமங்களுக்கு நாங்கள் செல்லும் போதெல்லாம் மக்கள் அவரது சேவைகளை நினைவுகூர்வதுடன், அதற்காக நன்றிக்கடன் செலுத்தவும் காத்திருக்கின்றனர்.

அதேபோன்று, கடந்த காலங்களில் நாமும் அமைச்சராக இருந்து, அதிக பணி செய்துள்ளோம். யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற பெருமளவான அபிவிருத்திகள், எம்மால் செய்யப்பட்டதே என்பதை மக்கள் அறிவார்கள். எங்கள் காலத்திலே பாடசாலை, வைத்தியசாலை புனரமைப்பு, நீர்ப்பாசனத் திட்டங்கள், சமூர்த்தித் திட்டம், புதிய அபிவிருத்தித் திட்டங்கள் என இன்னோரன்ன பணிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய எங்களுக்கு, மக்கள் தேர்தலில் தமது பங்களிப்பை நல்குவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது புலனாகின்றது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்கும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி பரிணமித்துள்ளதால், தொலைபேசி சின்னத்துக்கு அதிகளவான வாக்குகள் கிடைத்து, ஒன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை வெல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் செல்லத்தம்பு ஐயா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களான பகீரதன், ரஞ்சன் குரூஸ் ஆகியோரும் உடனிருந்தனர். 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *