சிலாவத்துறை – முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பகுதியில் தனி நபர் ஒருவருக்கு சொந்தமான காணியில் முசலி பிரதேச சபை அனுமதி இன்றி காணிக்குள் உற்பிரவேசித்து காணியை அடாத்தாக பிடித்து அடைத்துள்ளமை தொடர்பாக குறித்த காணியின் உரிமையாளர் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பகுதியில் 1959 ஆம் ஆண்டில் இருந்து தனி நபருக்கு சொந்தமான காணியில் கடந்த 21 ஆம் திகதி காணியின் உரிமையாளரின் எவ்வித அனுமதியும் இன்றி முசலி பிரதேச சபை குறித்த காணிக்கு வேலி அடைத்து ‘முசலி பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்டது’என பெயர்ப் பலகையும் நாட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காணியில் முசலி பிரதேச சபைக்குச் சொந்தமான சில வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எனவே தனது காணியில் அத்து மீறி முசலி பிரதேச சபை செயற்பட்டுள்ளதாகவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தன்னிடம் குறித்த காணியின் உரிமையாளர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக முசலி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காணிக்கான முழுமையான ஆவணங்கள் காணியின் உரிமையாளரிடம் காணப்படுகின்றது.
எனினும் முசலி பிரதேச சபை ஏன் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக முசலி பிரதேச சபையின் தலைவரை தொடர்பு கொண்டு வினவிய போது,
குறித்த காணியானது 2009 ஆம் ஆண்டில் இருந்து பராமறிப்பு அற்ற நிலையில் காணப்பட்டது. காணி முச்சக்கர வண்டி தரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது.
குறித்த காணியினால் சுகாதார அசௌகரியங்கள் எற்படுவதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
மேலும் பொது மலசல கூடம் அமைக்க அப்பகுதியில் இடம் இல்லை.எனவே குறித்த காணியில் பொது மலசல கூடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் தனி நபருக்கு சொந்தமானது என காணியில் அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.எனவே முசலி பிரதேச சபை காணியை பொது தேவைக்காக பயன்படுத்த உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த காணியின் உரிமையாளர் முசலி பிரதேச சபையின் அத்து மீறிய செயற்பாடு தொடர்பில் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு,மன்னார் நீதி மன்றத்திலும் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.