ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக நிலவிவரும் முட்டுக்கட்டையை அகற்றவும், காஷ்மீர் மாநில சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்ககவும் தீர்மானித்த மெகபூபா முப்தி, இன்று காலை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைப்பதில் இரு கட்சிகளுக்கும் இடையேஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
தற்போது அங்கே ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களை மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா கடந்த வாரம் டெல்லியில் சந்தித்து பேசினார்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அங்கு ஆட்சி அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி புதிய நிபந்தனைகளை விதிப்பதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை மக்கள் ஜனநாயக கட்சி கடுமையாக மறுத்துள்ளது.
பா.ஜனதாவுடன் கடந்த ஆண்டு கூட்டணி அமைத்த போது இரு கட்சிகளாலும் வகுக்கப்பட்ட கூட்டணி செயல்திட்டங்களை நிறைவேற்றுவதற்கான உறுதியையே பா.ஜனதாவிடம் கேட்டதாக மக்கள் ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை புதிய நிபந்தனை என்று கூறும் பா.ஜனதாவின் நிலைப்பாடு தவறு எனவும், தாங்கள் கூட்டணி செயல்திட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாகவும் அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.
இந்த மனக்கசப்புகள் தீர்க்கப்பட வேண்டும் என கூறிய மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர்கள், கூட்டணி தொடர்பாக மாநில மக்களின் நலன்கருதி தனது தந்தையின் நிலைப்பாட்டையே மெகபூபா முப்தியும் கடைபிடிப்பதாகவும் கூறியுள்ளனர். மாநில பொருளாதார வளர்ச்சி தொடர்பாக முப்தி முகமது சயீத்தின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உறுதியையே கட்சி விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருகட்சிகளும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.
இந்த முட்டுக்கட்டையை அகற்றவும், காஷ்மீர் மாநில சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கவும் தீர்மானித்த மெகபூபா முப்தி, இன்று காலை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். காஷ்மீர் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியேவந்த மெகபூபா முப்தி, பிரதமருடனான இன்றைய சந்திப்பு நல்லமுறையிலும், சாதகமான வகையிலும் அமைந்திருந்ததாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.