மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் அ.இ.ம.கா வில் மீண்டும் இணைவு

(சுஐப் எம் காசிம்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொழும்பு மாவட்டத்தில் புத்துயிரூட்ட தான் திட சங்கற்பம் கொண்டுள்ளதாகவும் மக்கள் சேவகன் அமைச்சர் ரிஷாட்டின் கரத்தை பலப்படுத்த தான் உறுதி பூண்டுள்ளதாகவும் மேல் மாகாணசபை  உறுப்பினர் பாயிஸ் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொழும்பில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்த சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் சுபைர்தீன் ஹாஜியார், சிரேஷ்ட சட்டத்தரணி என் எம் ஷஹீட் ஆகியோரும் பங்கேற்றனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சித்தலைமை எடுத்த முடிவுக்கு சாதகமாக தான் பணியாற்றாத போதும் கட்சித்தலைமையுடன் தான் என்றுமே முரண்படவில்லை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எந்த சந்தர்ப்பத்திலும் தான் விமர்சிக்கவுமில்லை, தூஷிக்கவுமில்லை. தலைமை எடுத்த முடிவுக்கு மாற்றமாக தான் செயற்பட்டமை குறித்து எனது வருத்தத்தையும்  தலைவர் ரிஷாட்டிடம் தெரிவித்தேன் என்றும் பாயிஸ் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

அமைச்சர் ரிஷாட் முஸ்லிம் மக்களின் அன்பைப் பெற்ற தலைவர். முஸ்லிம்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றுபவர். முஸ்லிம் மக்களுக்கு துன்பங்கள் நேர்ந்த போதெல்லாம் “ஆபத் பாந்தவனாக” உதவியவர். உதவி வருபவர் அவரை ஓர் ஆளுமை உள்ள தலைவனாக இனங்கண்டதனால் தான் மீண்டும் அவருடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் மயில் கட்சியை வளர்க்க முடிவு செய்துள்ளேன்.

கடந்த மேல் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். நான் சார்ந்த மக்கள் காங்கிரசின் வெற்றிக்கு அமைச்சர் ரிஷாட் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்கா. இரவு நேரங்களிலும் நட்ட நடு நிசியிலும் கொழும்பின் சேரிப்புற மக்களின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தலைவர் ரிஷாட் விஜயம் அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். அவர்களின் துன்பங்களைக் கண்டு சஞ்சலப்பட்டார்.

கொழும்பு மாவட்ட மக்களின் கல்வி நிலையைக் கண்டு கண்ணீர் வடித்த ரிஷாட்  மேல் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் தனியான முஸ்லிம் பாடசாலையொன்று ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என வழங்கிய உறுதி மொழியை இன்னும் சில வாரங்களில் செயலுருப்படுத்தவுள்ளார் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.

அத்துடன்பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் கொழும்பு மாவட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் அவரின் முயற்சிகளுக்கு நான் உறுதுணையாக நின்று உதவுவேன் என பாயிஸ் தெரிவித்தார்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares