Breaking
Thu. Apr 18th, 2024
[எம்.ஐ.முபாறக் ]
யுத்தம் முடிந்ததும் மஹிந்த மூவின மக்களையும் இலங்கையர் என்ற அடிப்படையில் ஒன்றிணைத்துச் செல்வார்-அவற்றின் ஊடாக நாட்டைக் கட்டி எழுப்புவார் என  எதிர்பார்க்கப்பட்டது.2009 ஆம் ஆண்டு மே  மாதம் நாடாளுமன்றில் யுத்த வெற்றியை அறிவித்த மஹிந்த ”இந்த நாட்டில் இனி சிறுபான்மை இன மக்கள் என்று எவரும் இல்லை.அனைவரும் இலங்கையர்கள்.இந்த நாட்டில் இரண்டு இனங்கள் மட்டும்தான் உள்ளன.ஒன்று இந்த நாட்டை நேசிக்கும் இனம்.அடுத்தது இந்த நாட்டுக்கு எதிரான இனம்”என்று கூறினார்.

இதன் ஊடாக மஹிந்த  புதியதொரு நாட்டைக் கட்டியெழுப்பப் போகிறார் என எல்லோரும் நினைத்தனர்.அது நடக்கவில்லை. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிகொண்டு  முஸ்லிம்கள் மீதும்  கைவைக்கத் தொடங்கினார்.அந்த அநியாயத்தை நிறைவேற்றுவதற்காக அவரின் அனுசரணையில் பௌத்த அமைப்புகள் உருவாகின.

2012 ஆம் ஆண்டு பொது பல சேனா,ராவண பலய மற்றும் சிங்கள ராவய போன்ற இனவாத அமைப்புகள்  தோற்றம்பெற்றன.அவற்றுள் பொது பல சேனாவே  முஸ்லிம்களுக்கு எதிராகக் கடுமையாகச் செயற்பட்டது.
இந்த அமைப்புகள் சிங்கள-முஸ்லிம் உறவைக் குறி வைத்தது மாத்திரமன்றி  தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவைக் குழப்பும் வேலையையும் செய்தன.
ஒரு புறம்,தமிழருக்கு எதிரான இனவாதம்.மறுபுறம்,முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம்,இன்னொருபுறம் தமிழ்-முஸ்லிம் உறவைக் கெடுக்கும் சதித் திட்டம் என மஹிந்தவின் ஆட்சியில்  இனவாதம் நிரம்பி வழிந்தது.

முஸ்லிம்களின் உயிர்களையும் சொத்துக்களையும் அழிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.அதன் முதல் கட்டமாக அளுத்கமை,பேருவளை அழிக்கப்பட்டன;இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.அதனைத் தொடர்ந்தும் பல அழிவுகளை ஏற்படுத்துவதற்கு பேரினவாத சக்திகள் திட்டங்கள் தீட்டின.அதற்குள் மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.

இந்த இனவாதம் சிங்கள மக்களிடம் எடுபடாதபோதிலும், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே நன்றாக வேலை செய்தது.இந்த இரண்டு இனங்களையும் பிரித்தாள்வதற்கு  மஹிந்த நினைத்தபோதிலும்,அந்த இரண்டு இனங்களும் அதற்கு இடங்கொடுக்கவில்லை.மாறாக,மஹிந்தவுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்று அவரை  வீட்டுக்கு அனுப்பின.
மஹிந்தவின் தோல்வியுடன் பேரினவாத அமைப்புகளும் வாலைச் சுருட்டிக் கொண்டன.ஆனால்,அது தற்காலிக ஓயவுதான் என்பது இப்போது புரிகின்றது.அடங்கிப் போய்க் கிடந்த இந்தப் பேரினவாத அமைப்புகள் இப்போது மெல்ல மெல்ல தலையைத் தூக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால்,சிறு வித்தியாசம்.அன்று இந்த அமைப்புக்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்டன.இன்று தமிழர்களுக்கு எதிராகவும் களமிறங்கியுள்ளன.
யாழ்.நைனாதீவு பெயர் மாற்ற சர்ச்சையை அடிப்படையாகக் கொண்டு அண்மையில் தமிழர்களுக்கு எதிராகக் களமிறங்கிய இந்தப் பேரினவாத அமைப்புகள் இப்போது வட மாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவு விவகாரத்தை துருப்புச் சீட்டாகக் கொண்டு அந்த இனவாதத்தை விஸ்தரிக்கத் தொடங்கியுள்ளன.

வட மாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவு தொடர்பில் மேற்படி பொது பல சேனா,சிங்கள ராவய மற்றும் இராவண பலய போன்ற மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து நேற்று முன் தினம் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை நடத்தி வடக்கு முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராகவும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிராகவும் பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டன; தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களைத் தூண்டிவிடும் கருத்துக்களையும் தெரிவித்தன.

விக்னேஸ்வரன் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சம்பந்தன் எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக உளறியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இவர்கள் மீண்டும் தலை தூக்கி இருப்பது இந்த நாட்டுக்கு நல்லதல்ல;நல்லாட்சிக்கும் நல்லதல்ல.இவர்கள் மஹிந்தவின் காலத்தில் எவ்வாறு முட்டாள்களாக உளறினார்களோ இப்போதும் அவ்வாறுதான் உளறத்  தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு என்ன தேவை என்று கேற்கும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு.அது நியாயமாக இருந்தால் வரவேற்கலாம்;இல்லையென்றால் நிராகரிக்கலாம்.அவ்வாறுதான் வட மாகாண சபையின் அரசியல் தீர்வு முன்மொழிவும் அமைந்துள்ளது.அந்த முன்மொழிவு இறுதி செய்யப்பட்டது அல்ல. அதில் பாரதூரமான விடயங்கள் அமைந்திருந்தால் அது அரசுடனான பேச்சுக்கள் மூலம்தான் நீக்கப்பட வேண்டும்.

ஆனால்,மஹிந்தவை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்றும் நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த இனவாத அமைப்புக்கள் இந்த விடயத்தில் தலையிடுவதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு தமிழருக்கு எதிராக இனவாதத்தைக் கக்குவதற்கும் சிங்கள மக்களை தமிழர்களுக்கு எதிராகத் திருப்புவதற்கும் அரசு இடமளிக்கக்கூடாது.

இவர்கள் நாட்டின் மீது அக்கறைகொண்டவர்கள் அல்லர்.சிறுபான்மை இனங்களை சிங்களவர்களுடன் மோதவிட்டு-வன்முறையை ஏற்படுத்தி அவற்றின் ஊடாக தங்களது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முற்படுபவர்கள்தான் இவர்கள்.இவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்பதுதான்.அதற்காக என்ன விலையைக் கொடுப்பதற்கும்-எதை வேண்டுமாலும் செய்வதற்கும் தயங்கமாட்டார்கள்.

இவர்களின் செயற்பாடுகள் மீண்டும் தலை தூக்கினால் இந்த நல்லாட்சிக்குத்தான் கெட்ட பெயர்.மஹிந்தவின் ஆட்சிக்கும் மைத்திரி-ரணில் ஆட்சிக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.
இவர்கள்  நல்லாட்சியைச் சீரழித்துவிடுவார்கள்.இந்த நாட்டின் சாபக்கேடான இவர்களை இப்போதே அடக்கி வைக்க வேண்டும்.இல்லையேல்,அவர்கள் மீண்டும் இனவாதத்தை விதைத்து இந்த நாட்டை அழித்துவிடுவார்கள்.
இந்த நாட்டு மக்கள் இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இந்த அமைப்புகளால் இனங்களிடையே ஏற்படுத்தப்பட்ட இனவாதம் இப்போது நீங்கி  மக்கள் இப்போது மெல்ல மெல்ல ஒற்றுமையைக் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து சிறுபான்மை இன மக்கள் இந்த நாட்டை அதிகம் நேசிக்கத் தொடங்கியுள்ளனர்.இது எங்களுடைய நாடு என்ற உணர்வு முன்பைவிடவும் அதிகமாக அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு எது தேவையோ அது நடந்து கொண்டு இருக்கின்றது.ஆனால்,அவை அனைத்தையும் சீரழிக்கும் வகையில்,இந்த இனவாத அமைப்புகள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன.

சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் நல்ல பெயரைச் சம்பாதித்து வரும் இந்த அரசு அந்தப் பெயரைக் கெடுக்கும் வகையில் செயற்படும் இந்த இனவாத அமைப்புகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும்.சிறுபான்மை இன மக்கள் இந்த அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தொடர்ந்தும் வைத்துக் கொள்ள இந்த அரசு முயற்சி செய்ய வேண்டும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *