Breaking
Tue. Apr 23rd, 2024

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற இருவர் மரணமடைந்தது தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மகுடஞ்சாவடிக்கு அருகில் உள்ள கூத்தாடிபாளையம் என்ற இடத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கென காலை 11 மணியிலிருந்தே தொண்டர்கள் அங்கு குவிந்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.பெரியசாமி, கூத்தாண்டிபாளையத்தைச் சேர்ந்த எஸ்.பச்சியண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் தற்போது வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மாநிலத்திலேயே அதிக அளவாக 107.3 டிகிரி வெயில் அடிந்த நிலையில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்ததோடு, தேர்தல் முடிந்த பிறகு நிதியுதவி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்களுக்கு தமிழக முதலமைச்சரே பொறப்பேற்க வேண்டுமென அவர்கள் கூறியுள்ளனர்.உயிரிழப்புகள் ஏற்படுவதால் ஜெயலலிதாவின் கூட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டுமென ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்பாக விருத்தாச்சலத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த ஜெயலலிதாவின் பொதுக்கூட்டத்தில் நெரிசல் காரணமாகவும் வெயிலின் காரணமாகவும் இருவர் உயிரிழந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *