கட்டுரைகள்பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு மீள்குடியேற்றமே!

(ரஸீன் ரஸ்மின்)

1990ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு திர்வு காணப்பட்டுள்ளது என்று கடந்த வாரம் ஊடகங்களிலும், சமூக வளைத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளமையை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.

குறித்த செய்தியானது மனதுக்குள் கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்தாலும், ஏதோ ஒரு பகுதியில் இது நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் வடக்கு முஸ்லிம்கள் குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு முஸ்லிம்கள் இந்த விடயத்தில் ஏலவே ஏமாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமனாதனும் பங்கேற்றிருந்தார்.

எனவே, அமைச்சர் ரிசாத் பதியுதீனின் இந்த விஜயத்தின் மூலம், அங்கு இடம்பெற்ற இக்கலந்துரையாடல் என்பனவற்றினால் தமது நீண்டகாலத்து மீள்குடியேற்றப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று கிட்டும் என கிளிநொச்சி மற்றும் யாழ். முஸ்லிம் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.

 

யாழ். முஸ்லிம்களின் வெளியேற்றம் :
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், இராணுவத்தினருக்கும் இடையே 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1987ஆம் ஆண்டு தங்களை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் சில குடும்பங்கள் யாழ். மாவட்டத்தை விட்டு வெளியேறி, வவுனியா நேர்ககி வந்தனர். இவ்வாறு வவுனியாவுக்கு வருகை தந்த யாழ். முஸ்லிம் குடும்பங்கள் கொழுப்பைச் சேர்ந்த தனவந்தர்கள், அமைப்புக்களின் உதவியுடன் அனுராதபுரம் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி அனுராதபுரம் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையே யாழிலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்களுக்கான முதலாவது முகாமாகும் எனக் கூறப்படுகிறது. குறித்த பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட யாழ் முஸ்லிம்களுக்கு தேவையான உணவு, குடிநீர், உடை, உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளும், நிவாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர், யாழ். முஸ்லிம்கள் தமது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்குவதற்காக குறித்த முகாமிலிருந்து வெளியேறிச் சென்று இக்கிரிகொல்லாவ, அநுராதபுரம், புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துரை, திஹாரிய போன்ற பிரதேசங்களில் குடியேறினர்.

இதனையடுத்து, 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்த சகல முஸ்லிம் குடும்பங்களையும் விடுதலைப்புலிகள் இரண்டு மணி நேர கால அவகாசத்தில் வெளியேறுமாறு கூறிய போது யாழ். முஸ்லிம்களும் வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட யாழ் முஸ்லிம்கள் கால்நடையாகவும், ட்ரக்டர்களிலும்,மாட்டு வண்டிகளிலும் பெரிதும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வவுனியா, மதவாச்சி, இக்கிரிகொல்லாவ, தல்கஹவெல, நொச்சியாகம, நாச்சியாதீவு, புத்தளம், கற்பிட்டி, நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, மாபோலை, மாத்தளை, உள்ளிட்ட இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறினர்.

முஸ்லிம் சமூக பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகதிகள் நிவாரண நிலையம்,அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, ஜம்மியதுல் உலமா, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உள்ளிட்ட அமைப்புக்கள் யாழ். முஸ்லிம் மக்களை இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைத்து தேவையான உதவிகளைச் செய்து கொடுத்துள்ளமையை அம்மக்கள் நன்றியுணர்வுடன் நினைவு கூறுகின்றார்கள்.

1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட மூர்வீதி, சாவகச்சேரி, மண்கும்பான், நெய்னாதீவு, பொம்மைவெளி (புதிய சோனகத் தெதரு) பருத்தித்துறை, கிளிநொச்சி நகரம், வட்டக்கச்சி, 55ஆம் கட்டை, நாச்சிக்குடா, பள்ளிக்குடா, பூநகரி உள்ளிட்ட யாழ், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் மன்னார், முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் எதிர்பார்ப்பார்த்து இருப்பதைப் போலவும் இவர்களும் தமது சொந்த மண்ணில் மீளவும் குடியேறக் காத்து நிற்கின்றனர்.

எல்லா வகையிலும் புறக்கணிப்பு :
விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையயில் இடம்பெற்ற யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், யாழ். முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என ஆசைப்பட்டார்கள்.

தாம் வாழ்ந்த இடங்களை அடையாளம் காண்பதற்காக தாம் வாழ்ந்த பூர்வீகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக வடபகுதிக்கான பாதை திறப்பதற்கு முன்னரே பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்று இரண்டு பஸ்களில் யாழ். முஸ்லிம்கள் சொந்த மண்ணுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதன் பின்னர், வடபகுதிக்கான பாதை திறந்து வைக்கப்பட்தும், யாழ். முஸ்லிம்களை அழைத்து அங்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது சுமார் 2500 இற்கும் அதிகமான குடும்பங்கள் தங்களை சொந்த மண்ணில் பதிவு செய்துகொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தமது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் அங்கு சென்ற யாழ். முஸ்லிம்கள் பெரும்பாலானோர் சென்ற மறுநாளே மீண்டும் தாம் வாழ்ந்த மாவட்டங்களுக்கே திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் அங்கு வாழ்வதற்கு உரிய காணி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமையே அவர்கள் திரும்பியமைக்கு காரணமாகும். ஆரம்பத்தில் ஒரு குடும்பமாகச் சென்றவர்கள் தற்போது பல மடங்குகளாக அதிகரித்துள்ளமையினால் காணி, வீடு என்பன பெரும் பற்றாக்குறையாகக் காணப்படுகிறது. அவை இன்று வரைக்கும் நிவர்த்தி செய்யப்படவில்லை.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆறு வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் யாழ். முஸ்லிம்கள் மாத்திரமின்றி, முழு வடக்கு முஸ்லிம்களும் தமது சொந்த மண்ணில் இதுவரையும் மீளக் குடியேற்றம் செய்யப்படவில்லை. குறைந்த அளவிலான குடும்பங்களே கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

இவ்வாறு மீள்குடியேறியுள்ள தாம் அரசியல்வாதிகளினால், அதிகாரிகளினால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெரிதும் கஷ்டங்களுக்கு மத்தியில் யாழ். மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் தற்போது வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன், ஒரு நிரந்த குடியிருப்புபு உள்ளிட்ட சதிகளைப்பெற்று நிம்மதியாக வாழ்வதற்காக போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

வாக்குகளும் மாற்றம் :
இதேவேளை, யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் தாங்கள் தற்போது வசிக்கும் புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துள்ளனர். இதற்கு பல காரணங்களையும் செல்லுகின்றனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்ததும் தமது சொந்த மண்ணில் இப்போது குடியேறி விடலாம், அடுத்த வருடம் குடியேற்றுவார்கள் என்று குறுகிய காலத்து எதிர்பார்ப்புக்களுடன் இருந்தவர்கள் இறுதியில் ஏமாற்றப்பட்டு, மனச் சோர்வடைந்து ஊர் மீது அதீத பற்று இருந்தாலும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தங்களையும், குடும்பத்தினரையும் தாம் வதியும் மாவட்டத்தில் நிரந்தர வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டுள்ளனர்.

இன்னும் சிலர் கல்வி, தொழில்வாய்ப்பு மற்றும் திருமண பந்தம் உள்ளிட்ட விடயங்களுக்காகவும் இவர்கள் தமது வாக்குப் பதிவை மாற்றியுள்ளனர்.

ஆத்துடன், பெரும்பாலானவர்கள் எங்கு நிரந்தரமாக வாழ்வது என்பதில் சுயமாக முடிவெடுக்க முடியாத நிலையிலும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த மீள்குடியேற்றம் இழுத்தடிப்பு செய்யப்படவுள்ளது என்ற நம்பிக்கையின்மை, விரக்த்தி என்பனவற்றினாலும் ஏதோ ஒரு இடத்தில் நிரந்தரமாக வாழ்ந்தால் சரி என்கின்ற வகையில் சிலரின் வற்புறுத்தல்களினால் புத்தளம் மாவட்ட வாக்ககாளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

இதேவேளை, நிரந்தரமான மீள்குடியேற்றத்திற்கு ஒரு நிரந்தரமான தீர்வு விரைவில் எட்டப்படாது போனால் இன்னும் பலர் தாங்கள் எந்த மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்களோ அவர்கள் அந்த மாவட்ட வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறுகின்றனர்.

ஓற்றைக்கண் வைத்துப்பார்க்கும் வடமாகாண சபை :
யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாத்திரமின்றி முழு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் வடமாகாண சபை ஒருவிதமான நெகிழ்வுப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வடக்கிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளவும் தமது சொந்த மண்ணில் குடியேற வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எந்தவொரு திட்டத்தையும் வடமாகாண சபை இதுவரையிலும் முன்வைத்தது கிடையாது என்ற குற்றச்சாட்டுக்களும் பலவலாக முன்வைக்கப்படுகிறது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற ஆசைப்பட்டாலும், காணி, வீடு என்பன பாரிய பிரச்சினையாகவே காணப்படுகிறது. அவர்களின் விடயங்களில் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் திருப்த்தியளிக்கவில்லை என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்டதாகும்.

சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்ற ஆசையுடன் வடக்கிற்கு வருகின்ற முஸ்லிம் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்துகொடுப்பது அந்த மாகாண சபையின் பொறுப்பாகும். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. அந்த மாகாணத்தில் வாழும் சகலருக்கும் என்ன தேவைகள் இருக்கின்றதோ அதனை மத்திய அரசுடன் பேசி தீர்த்து வைப்பதே மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் பணியாக காணப்படுகிறது.

தமிழ் மக்களுக்காக எ;த சந்தர்ப்பத்திலும் குரல் கொடுக்கின்ற தமிழ் தரப்பினர் எந்த சந்தர்ப்பத்திலாவது வடபுல முஸ்லிம்கள் அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்களாக என்பது கேள்விக்குறியே.

ஓன்றுபடுவோம் :
எனவே, கடந்த கால விடயங்களை மறந்துவிட்டு இனி நிகழ்கால விடயங்களில் கவனம் செலுத்துவதே இரு சமூகத்திற்கும் ஆரோக்கியமானதாகும். கடந்த வாரம் யாழ். விஜயம் செய்த அமைச்சர் ரிசாhத் பதியுதீனுடன், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜனும் உடனிருந்தார். பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு பற்றி பேசியிருந்தார்.

கடந்த காலங்களில் வாய்மூடியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் தற்போதுதான் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு நல்லதொரு சந்தர்ப்பமாகும். வடக்கிலுள்ள தமிழ் பேசும் இரு சமூகங்களும் சேர்ந்து ஒரு திட்டத்தை தயாரித்து அதனை நல்லாட்சி அரசுக்கு சமர்ப்பிக்கின்ற போது நிச்சயமாக அந்த திட்டத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்தே ஆக வேண்டும்.

இதில் பிரதேசவாதம் , இனவாதம் பார்க்கக் கூடாது. வடக்கில் யாருக்கு காணியில்லையோ, யாருக்கு வீடு இல்லையோ பொறுத்தமானவர்களுக்கு காணி, வீடு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் தமிழ் – முஸ்லிம் மக்கள் செயற்படும் போது அதில் நிச்சயம் வெற்றியைக் காணலாம்.

இதுவிடயத்திலும், தமிழ் தேசியக்கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து செயற்பட வேண்டும். மூன்று கட்சிகளின் தலைவர்களும் வடமாகாண சபையுடன் இணைந்து மத்திய அரசுடன் விரைவில் பேசடசுவார்த்தை நடத்தி நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருக்கின்ற வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு நல்லதொரு திர்வைப் பெற்றுக்கொடுக்க வேணடும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related posts

ஹிஸ்புல்லாஹ்வின் 25வருட அரசியல்! நாளை நுால் வெளியீடு

wpengine

முஸ்லிம்கள் இந்த கட்டத்தில் நிதானமாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்

wpengine

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கருப்புக்கொடி

wpengine