பிரதான செய்திகள்

யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்

(ஊடகப்பிரிவு)

யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில்   இருந்துவரும்   தடைகளை நீக்கி, அதனை  வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும்   அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த  தீவிர முயற்சிகளுக்கு  தற்போது உரிய  பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்தார்.

யாழ்ப்பாண கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில், நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும்  இந்த மக்களின் மீள் குடியேற்ற தடைகள் குறித்தும், வீடுகளை அமைப்பதற்கு  காணிகள் இல்லாத பிரச்சினைகள் தொடர்பிலும்  பிரதமரிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரிஷாத், தொடர் மாடி வீட்டுத்திட்டத்தை உருவாக்க அங்கீகாரம்  வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  பிரதமர், அதிகாரிகளை இது தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தாரென குறித்த  மீளாய்வு கூட்டத்தில் பங்கேற்றிருந்த யாழ் மாநகர முன்னாள் உறுப்பினரும் அமைச்சரின் யாழ் மாவட்டத்துக்கான  மீள் குடியேற்ற இணைப்பாளருமான மௌலவி சுபியான் குறிப்பிட்டார்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வசமிருந்த   நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள் குடியேற்ற செயலணியின்  மூலம், அந்த மக்களுக்கு பல்வேறு விமோசனங்கள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் நாங்கள் அமைச்சரிடம்  வழங்கிய முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகர்ந்தும் அழிந்தும் போய்க்கிடந்த முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகள் மீளக்கட்டியெழுப்பப்படுவதாகவும்   அவர் குறிப்பிட்டார்.

சுமார் 28 வருடங்களாக தென் இலங்கையில் அகதியாக வாழ்ந்த நாம் மீண்டும் இந்த பிரதேசத்தில் வாழ முனைகின்ற போதும், எவருமே எமக்கு உதவ முன் வரவில்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வட மாகாணத்தில் பிறந்தவராகவும் அகதியாகவும் இருந்ததனாலும் அகதி வாழ்வின் துன்பங்களை புரிந்துகொண்டு, எமது மக்களில் அக்கறை கொண்டு செயல்படுகின்றார். இவரைப்போல் எந்த ஓர் அமைச்சரும் இவ்வாறு உதவவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற 2800முஸ்லிம் குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. எனினும்  700 குடும்பங்களே தற்போது இங்கு வந்துள்ளன. அவற்றில் 365குடும்பங்களுக்கு வீடுகள் இல்லை. ஏனெனில் வீடுகள் கட்ட காணிகள் இல்லை. இங்கு குடியேற வந்துள்ள  இன்னும் சில குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட, அவர்கள்  முன்னர் வாழ்ந்த  காணிகளின் விஸ்தீரணம் போதாதுள்ளது. இந்த குடும்பங்கள் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்கின்றனர். ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வாழும் பரிதாபநிலை இருக்கின்றது.

எனவே  காணிகளை பெற்று வீடுகளை கட்ட  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட நாம் நீண்ட காலமாக  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற  போதும் அதில் பல்வேறு  தடைகள் ஏற்பட்டுள்ளன .  இந்த நிலையிலேதான் மாற்று வழியின்றி தொடர் மாடி வீடுகளை  அமைக்க அமைச்சர்  ரிஷாத் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். தொடர்மாடி வீடுகளால் குடியிருப்பாளர்களுக்கு சில அசெளகரியங்கள் இருந்த போதும் இதுதான் இப்போதைக்கு சிறந்த வழி என்று தெரிவித்த மௌலவி சுபியான், இதற்காக அமைச்சர் கொழும்பிலும் அரச உயர் மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார். இறுதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும்  யாழ் உயர்மட்ட கூட்டத்தில் அதற்கான அனுமதியை பெற்றிருக்கிறார்  என கூறினார்.

அமைச்சரின்  விஷேட நிதியின் மூலமும் ஒதுக்கீட்டின் மூலமும் சிதைந்து போயிருந்த எமது பிரதேசங்களில்  பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில்  ஒஸ்மானியா கல்லூரி புனரமைக்கப்பட்டுள்ளது கதீஜா கல்லூரிக்கான தளபாடங்கள் வழங்கப்பட்டன குடியிருந்த  காணிகளையும் உடைந்து கிடந்த  வீடுகளையும் கட்டடங்களையும்  துப்பரவாக்க கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன பொதுக்கட்டடங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டன. மின்சார இணைப்புக்கள் கிடைத்தன  குடி நீர்த்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு  வருகின்றது . இவ்வாறு இன்னோரன்ன பணிகளை அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார் என்றும் சுபியான் குறிப்பிட்டார்.

இதேவேளை பிரதமருடன் யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், யாழ் செயலகத்தில் நடந்த மீளாய்வு கூட்டத்தின்  பின்னர், நாவலர் வீதியில் உள்ள மஸ்ரஉஸ்தீன் பாடசாலையில் மீள்குடியேறியுள்ள மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும்  நடத்தினார். யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாமின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மீளக்குடியேறிய மக்கள் தாங்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர் அமைச்சரின் வேண்டுகோளையேற்று அந்தக் கூட்டத்தில் யாழ் மேயரும் பங்கேற்றதுடன், மீள் குடியேற்றத்துக்கு எந்தவிதமான பாகுபாடுமின்றி தான்  உதவுவதாக உறுதியளித்தார்.

இந்த கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூஃப் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான நிபாஹிர், சரபுல் அனாம், மக்கள் காங்கிரசின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் மற்றும் முபீன் உட்பட முக்கியஸ்தர்கள்  பலர் பங்கேற்றனர்.

Related posts

பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும் – தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்

wpengine

வவுனியாவில் தேர்தல் கால கோரிக்கையினை நிறைவேற்றிய அமைச்சர் றிஷாட்!

wpengine

சுற்றுப்பயணங்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம்!-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்-

Editor