Breaking
Sat. Apr 20th, 2024

“அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வதை விட பொதுவான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துங்கள்” – ஜனாதிபதியிடம் எடுத்துரைத்ததாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு!

பதவிகளுக்கென கட்சிகளை ஒன்று சேர்க்காமல், நாட்டுக்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்வைக்குமாறும், அந்த வேலைத்திட்டத்திற்கு எமது ஆதரவு கிடைக்கும் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

சர்வகட்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

“நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்காகவும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இன்னோரன்ன தேவைகளை எளிதில் நிறைவேற்றும் வகையிலும், கியூவில் நின்று பொருட்களை பெரும் கலாச்சாரத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலும் ஜனாதிபதி எடுக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பு நல்குவோம் எனவும் இச்சந்திப்பில் உறுதியளித்தோம்.

மேலும், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிவைத்து கைது செய்யப்பட்டமை மற்றும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டாலினின் கைது தொடர்பிலும் எமது ஆட்சேபனையையும் கவலையையும் தெரிவித்ததோடு, இவ்வாறான பயமுறுத்தல் நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் அதலபாதாளத்திற்கு கொண்டு செல்லும் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

19 ஆவது திருத்தத்தை உடனடியாகக் கொண்டு வந்து, அதனை விரைவாக நடைமுறைப்படுத்துமாறும், பாராளுமன்றத்தில் அமைச்சுக்களை கண்காணிக்கும் குழுக்களை அமைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தோம். அத்துடன், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி, வகைதொகையின்றி ஆட்களை கைது செய்யும் நடவடிக்கையை உடன் நிறுத்துவதுடன், அவசரகாலச் சட்டத்தில் தொடர்ந்து நீடிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

இனவாதத்தையும் மதவாதத்தையும் கக்கி ஆட்சிக்கு வந்தவர்கள், கடந்த காலங்களில் நாட்டினதும், மக்களினதும் நலனைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டமையை உணர்த்தியதுடன், இனவாதத்தை விதைப்பதன் ஊடாக தங்களது அரசியல் இருப்பு நீடிக்கும் என்ற தப்பெண்ணம் கொண்டு செயற்பட்டதனால்தான், இந்த நாடு இவ்வாறான கீழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

எதிர்காலத்தில் இனவாத சக்திகளின் கரங்களை ஓங்கவிடாமல் பாதுகாக்க வேண்டும் எனவும், அந்த விடயத்தில் கூடிய கவனஞ்செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம்” என்று அவர் தெரிவித்தார்.

06.08.2022

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *