கட்டுரைகள்பிரதான செய்திகள்

யார் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஓரு பார்வை…

(வை.எம்.பைரூஸ்)

உலகத்தின்  சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும்  ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் போன்ற எத்துறையாகவும்  இருக்கலாம்.

இவ்வாறான பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய சமூகத்தால் மறந்து போய் விட்டாலும், அனைத்துலக நாடுகளாலும் கௌரவிக்கப்பட்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் தான் டாக்டர் சாகீர் நாயக் ஆவார்.

இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மிகப்பெரும் வர்த்தக மையமான மும்பையில் 1965ல் சாகீர் அப்துல் கரீம் நாயக் அவர்களுக்கு பிறந்தவர் தான் இந்த டாக்டர் சாகீர் நாயக் ஆகும்.

தனது பாடசாலை கல்வியை St பீட்டர்ஸ் உயர் தரப்பாடசாலையிலும் Kishinchand செல்லரம் கல்லூரியிலும் பயின்றார். அதன் பிற்பாடு மருத்துவப்படிப்பை கர்நாடாக Lingayat Education Society’s  லும் J. N. Medical  Belgaum கல்லுரியிலும் கற்று, 1991 ம் ஆண்டு தனது 26 ஆவது வயதில் மும்பை பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில்  உயர் தரப்படிப்பான MBBS கற்கை நெறியைப்பூர்த்தி செய்து, அங்கிருந்து டாக்டர் பட்டத்துடன்  வெளியானார்.

அதன் பிற்பாடு, அவர் மருத்துவராக தொழில் புரிந்து கொண்டிருக்கும் நிலையிலயே, அவருக்கு மார்க்கப்பணியில் மிகுந்த ஈடுபாடு ஏற்பாட்டுள்ளது. ஏனெனில், மருத்துவக்கல்வியை முடித்த பிற்பாடே தனது சொந்த ஊரான மும்பை நகரிலயே  இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனமொன்றை நிறுவி, அதற்கு அவரே தலைமையும் தாங்கி , இன்று வரையும் அதை வழி  நடாத்தியும் சென்று கொண்டிருக்கிறார்.

அது மட்டுமன்றி, இஸ்லாமிய பரிமாணங்கள் ஒன்றியத்தின் தலைவராகவும், இஸ்லாமிய சர்வதேச பள்ளியொன்றின் நிறுவனராகவும் அவர் இருந்துள்ளார் என்பதை கடந்த கால அவருடைய வரலாற்றிலிருந்து எம்மால் அறிய முடிகின்றது.

இவ்வாறான ஒரு காலப்பகுதியில் தான்  உலகத்தின் தலைசிறந்த இஸ்லாமிய அழைப்பாளரான அஷ்ஷெய்க் அஹ்மத் தீதத் அவர்கள் மும்பாய்க்கு 1994 ல் இஸ்லாமிய அழைப்பு பணிக்காக முதல் முதலாக வருகை தந்தார். அந்த அழைப்புப்பணியில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டவர் தான் இந்த சாகீர் நாயக் என்றால் எம்மால் நம்ப முடிகிறதா…?

அதன் பின்னர், அஹ்மத் தீதாத் அவர்கள் அடிக்கடி இந்தியா வந்து இஸ்லாமிய அழைப்புப்பணி செய்ய ஆரம்பித்ததார். இவரால் கவரப்பட்ட சாகீர் நாயக் தொடர்ச்சியாக இவரது ஹதீஸ் குர் ஆன் வகுப்புக்களில் இடைவிடாது கலந்து கொள்வாராம். இதனால், டாக்டர் சாகீர் நாயக் அவர்களுக்கும் மார்க்கப்பணியின் மீது மென்மேலும் ஆர்வம் அதிகரித்தது.

ஆரம்பத்தில் மாதத்துக்கொருமுறை என்று ஆரம்பித்த இவரின் அழைப்பு பணி, பின்பு  இரு வாரத்தில் ஒரு நாளாக மாறியது. அதன் பிற்பாடு வாரத்தில் ஒரு நாளாக மாறிய இவரின் அழைப்புப்பணி, பின்பு ஒரு நாள் விட்டு ஒரு நாளாக மாறியதுடன்,அதன் பிற்பாடு தனது வைத்தியத்தொழிலை முற்று முழுதாக விட்டொதுங்கி, தன்னை மார்க்கத்துக்காக அர்ப்பணித்துள்ளார்.

அன்று இந்தியாவிலிருந்து ஆரம்பித்த அவரது  அழைப்புப்பணி காலப்போக்கில் உலகலாவிய ரீதியில் நடக்கும் மாபெரும் இஸ்லாமியர்கள் மற்றும் மாற்று மதச் சகோதரர்கள் கலந்து கொள்ளும் கேள்வி-பதில் கருத்தரங்குகள் தர்பியா நிகழ்ச்சிகளிலெ்லாம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படலானார்.

குறிப்பாக, அமெரிக்கா, கனடா, லண்டன், இத்தாலி, சவூதி அரேபியா, துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமான், எகிப்து, மலேசியா, கொங்கொங், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற  இன்னும் பல நாடுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கருத்தரங்குகளில் பங்கு பற்றி சிறப்புறைகளும் மாற்று மத சகோதர, சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆனையும், ஹதீஸ்களையும் வைத்து தக்க பதில்களும் கொடுத்து வருகிறார்.

2011, 2012ல் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகம் நடாத்திய உலகத்தின் செல்வாக்குள்ள ஐநூறு முஸ்லிம்களில் இவருக்கு 62வது இடம் கிடைத்தது. இவரின் தனிச்சிறப்பே. அது மட்டுமன்றி, இந்தியாவின் செல்வாக்குள்ளவர்களின் பட்டியலை கடந்த 2009இல்   இந்தியன் “எக்ஸ்பிரஸ்” என்ற ஓர் வலயமைப்பு ஆய்வு செய்து, 100 பேரைக் கொண்ட பெயர்ப்பட்டியலை வெளியிட்டது. அதில் அவருக்கு 82வது இடமும் மற்றும் 2010இல் நடந்த ஆய்வில் 89வது இடமும் கிடைக்கப்பெற்றது.

மற்றும்  ‘2009 ஆம் ஆண்டில் இந்தியாவின்  டாப் 10 ஆன்மீக குருக்களின் பட்டியலில் மூன்றாமிடம் பெற்றிருந்தார். அதே போன்று, 2010 ஆம் ஆண்டு அதே பட்டியலில் முதலிடத்தைப்பிடித்து இஸ்லாத்துக்கும், இந்தியா முஸ்லிம் சமூகத்துக்கும் பெருமை சேர்த்த ஒரு இஸ்லாமிய அழைப்பாளர் என்றால் அது டாக்டர் சாகீர் நாயக் அவர்களாகத்தான் இருக்கும்  என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

youtubeயில் பார்த்தால் நாளுக்கு தாள் பல்வேறு மதத்தைச்சேர்ந்த மக்களும் அவருடைய நிகழ்ச்சிகளைப் பார்த்த வண்ணமேயுள்ளார்கள் என்பதை எம்மால் அறிய முடியும். குறைந்தது 5 லிருந்து 12 மில்லியன் வரையிலான மக்கள் தினந்தோறும் ஏதோ ஒரு வகையில் அவருடைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என சராசரி ஆய்விலிருந்து எம்மால் அறிய முடிகிறது. உண்மையில் இது எந்தவொரு மதப்போதகராலும் தற்போதய சூழ்நிலையில் முறியடிக்கபடாத சாதனையாகும். இதற்கு முழுக்காரணமும் அல்லாஹ்வின் உதவியும், அவருடைய மனன சக்தியுடன் கூடிய வாக்குச் சாதுர்யமுமேயாகும்.

கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற மாபெரும் அறிவியல் வெளிச்ச விவாதத்தில் உலகின் மாற்று மத முக்கிய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதில் டாக்டர் சாகீர் நாயக் அவர்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு அமெரிக்காவின் டாக்டர் வில்லியம் கேம்பலுக்கும் டாக்டர் சாகீர் நாயக்குக்கும் குர்ஆனும் பைபிளும் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் தனது வாக்கு சாதுர்யத்தினால் மிகப்பெரும் வெற்றியடைந்தது.

மாபெரும் நல்லிணக்க கலந்துரையடலொன்று கடந்த 2006ல் ஜனவரி 21ல் பெங்களூரில் டாக்டர் சாகீர் நாயக் அவர்களுக்கும், இந்து மதப்போதகர் ஸ்ரீ ரவி சங்கர் அவர்களுக்கும் இஸ்லாமிய, இந்து வேதங்களில் கடவுள் கோட்பாடு என்ற வெவ்வேறு தலைப்பில் நடைபெற்றது. இதில் பூரண பயன் கிடைத்தது. மட்டுமன்றி, இந்து-முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்தின மக்களாலும் அமோக வரவேற்பையும் பெற்றிருந்தது.

டாக்டர் ஜாகீர் நாயக் அவர்கள் உலகின் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச நாட்டு தொலைக்காட்சி, வானொலிகளில் விசேட அழைப்பிதழின் பெயரில் நேர்காணல், விவாதங்களில் கலந்து சிறப்பித்திருக்கிறார். அது பல மொழிகளில் உலகத்தில் பல மூலைகளில் சீடிக்காளாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. மற்றும் இஸ்லாம் பற்றி ஒப்பீட்டு ரீதியாக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

Peace டீவி நெட்வொர்க் 2006ல் உருவாக்கப்பட்டது. அதில் மாபெரும் சாதனைை நிகழ்திய பெருமையும் டாக்டர் சாகீர் நாயக் அவர்களையே சாரும் அதில் அவர் நடத்திய ஒரு பொது நிகழ்ச்சியை உலகளாவியளவில் 100 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் பார்வையிட்டிருந்தார்கள். அதில், 25மூ வீதம் முஸ்லிமல்லாதவர்களாகும். இவ்வாறு பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரும் தனது இளம் வயதிலயே தன்னுடைய வைத்தியத் தொழிலை தியாகஞ்செய்து, இஸ்லாத்துக்காக இன்று வரை தன்னைய முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் டாக்டர் சாகீர் நாயக் அவர்களை எந்த விதத்திலும் இந்தியாவின் எந்தப்பிரபலங்கலோடும் ஒப்பிட்டுப்பார்க்க முடியாதென்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மென்மேலும் அவரின் அறிவினாலும் ஆளுமையினாலும் வாக்கு சாதுர்யத்தாலும் முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதோரும் பயன்பெற்று நேர்வழி பெற வல்ல நாயன் அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ்

Related posts

உள்ளூராட்சி தேர்தல்! கருத்தரங்குளை நடாத்த உள்ள ரணில்

wpengine

றிஸ்வி ஜவ­ஹர்­­ஷாவின் முயற்­சியில் குருனாகலில் அபிவிருத்தி வேலைத்திட்டம்

wpengine

சிறுபான்மை மீது நடாத்தப்படும் மிலேச்சனமான தாக்குதல்! அமைச்சர் றிஷாட் கண்டனம் (வீடியோ)

wpengine