பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஆண்டிகள் கூடிக்கட்டிய மடமாக இருக்கக் கூடாது.

(சுஐப் எம் காசிம்)
அண்மைக் காலமாக நமது முஸ்லிம் அரசியல் வானில் ”முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின்” அவசியம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்தக் கூட்டமைப்புடன் மக்கள் காங்கிரசையும் அதன் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் இணைத்து பல்வேறு தரப்பினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்பூசல் விரிவடைந்து, உக்கிரமடைந்து, அது உச்சநிலையை அடைந்த பின்னர் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பில் தற்போது வலுவாக பேசப்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட அக்கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலியையும் இணைத்துக் கொண்டு மு கா தவிர்ந்த ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள், மற்றும்முக்கியஸ்தர்களை உள்வாங்கி முஸ்லிம் கூட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.

இதற்கு முன்னதாக ”வேதாந்தி” என அழைக்கப்படும் முஸ்லிம் அரசியலின் அரசியலின் முன்னோடியாக கருதப்படும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், எழுதிய முஸ்லிம் சமஷ்டி, முஸ்லிம் சுயாட்சி ஆகிய இரு நூல்களிலும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தி இருந்ததுடன் உத்தேச கூட்டமைப்புக்குள் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய வகையில் அவர்களின் பெயர்களையும் வெளியிட்டு சில கருத்துக்களை முன் வைத்திருந்தார். எனினும் வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் முஸ்லிம்களுக்கென தனியான, ஏறத்தாழ சமனான அதிகாரங்களைக் கொண்ட ஒரு பிராந்தியத்தைப் பெற்றுக்கொள்ள இந்தக் கூட்டமைப்பின் மூலமே பெரும் பங்காற்ற முடியும் என்ற கருத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பஷீர் சேகுதாவுத் தற்போது உருவாக்கப்போவதாக கூறப்படும் புதிய கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்ததாகவும் சேகு இஸ்ஸதீனின் கருத்தியலுக்கு அப்பாற்பட்டதாகவும் இருப்பது போல புலப்படுகின்றது.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களையும் வெளியேறியவர்களையும் உள்வாங்கி புதிய கூட்டமைப்பை உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கு விமோசனம் கிடைக்கும் வகையில் பங்காற்றப்போவதாக பஷீர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உத்தியோகபூர்வமான எந்தவிதமான நிலைப்பாடுகளும் வெளிவராத நிலையில் நமது முகநூல் நண்பர்களும் கட்சியின் அபிமானிகளும் கட்சித்தலைவரினதோ, கட்சியின் முக்கியஸ்தர்களினதோ கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளாது முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் தாம் விரும்பிய மனம் போன கருத்துக்களை, எழுந்தமானமாக வெளியிடுவது ஆரோக்கியமானது அல்ல.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூச்சியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு தியாகங்களின் மத்தியிலே வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி. நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் கணிசமான ஆதரவையும் செல்வாக்கையும் அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பெற்றிருக்கின்றார், பெற்றுவருகின்றார். இக்கட்சியானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாலாக உருவெடுத்துள்ள காரணத்தினாலே தான் அக்கட்சியின் வளர்ச்சியையும் தலைவரின் செயற்பாடுகளையும் முடக்கும் வகையிலே முஸ்லிம் காங்கிரஸின் அடிவருடிகள் போலி முகநூல்வாயிலாக தலைவர் தொடர்பான ஊடகப் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ரிஷாட் தொடர்பில் கேவலமான, மலினமான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்கு இது சான்று.
முஸ்லிம் தேசியக்கூட்டமைப்புக்குள் முண்டியடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமும் அவசரமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு இப்போதைக்கு தேவையற்ற ஒன்றென்பதே எனது சொந்த கருத்தாகும். (இதனை கட்சித் தலைவரினதோ, கட்சியினதோ கருத்தாக எவரும் கொள்ள வேண்டாம்)

வன்னியில் உதித்த மக்கள் காங்கிரஸ், கிழக்கிலே அம்பாறை , மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கால் ஊன்றி வளர்ச்சி பெற்றுவருவதை மழுங்கடிக்கும் வகையிலும் அதனை தட்டி மடக்கும் வகையிலும் இவ்வாறான முயற்சியொன்றைக் கொண்டுவந்து மக்கள் காங்கிரஸை மட்டுப்படுத்தும் நோக்கிலும் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்புக்குள் மக்கள் காங்கிரஸை உள்ளீர்க்க செய்யவைப்பதற்கான இன்னொரு தந்திரமாகவும் இதனை நாம் கொள்ளமுடியும். (இதுவும் எனது சொந்தக் கருத்தே)

அம்பாறை மாவட்டத்தில் கட்சிப் புனரமைப்பு வேலைகள் வேகமாக ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் கட்சி தொடர்பான தெளிவான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருமலையில் மஹ்ரூப் எம் பி மக்கள் காங்கிரஸின் நடவடிக்கைகளை மிகவும் கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றார். புத்தளத்தில் நவவியும், கொழும்பில் பாயிஸும் குருநாகலையில் டொக்டர் ஷாபியும், அநுராதபுரத்தில் இஷாக் எம் பியும் கட்சியை முன்னிறுத்தி பல்வேறு மக்கள் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார். அத்துடன் கட்சிக்கென தற்போது ஒழுங்கான கட்டமைப்பொன்று இருக்கின்றது.
மாவட்ட, தொகுதி, வட்டார அமைப்புகள் செயற்படத் தொடங்கியுள்ளன. பொதுவாக கட்சி ஒரு சீரான வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

எந்தக் கூட்டமைப்பில் மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிப்பதென்றாலும் அது முறையான வகையில் கலந்தாலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டியவை. தலைவரும், அரசியல் பீட உறுப்பினர்களும் அமைப்பாளர்களுடனும் போராளிகளுடனும் கலந்தாராய்ந்து ஏற்ற முடிவுகளை பொருத்தமான நேரத்தில் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதனை விடுத்து நாம் எதனையும் திணித்து கட்சியின் செயற்பாடுகளை வேற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்க இடமளிக்கக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.

’’ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை திருத்த வேண்டும், புதிய இரத்தம் பாய்ச்சி சமூகத்திற்கு ஏற்ற வகையில் அந்தக் கட்சியை மாற்ற வேண்டும்” என இன்னும் கூறுவோர் மத்தியில் மக்கள் காங்கிரஸும் இணைந்து கொண்டு சமுதாயத்திற்காகச் செயற்படுவதென்பது என்னைப் பொறுத்த வரையில் வேடிக்கையாகத்தான் இருக்கின்றது.
மு கா தலைவரின் மகுடிக்கு இற்றை வரை ஆடிய பின்னர் இப்போது வேறுபாதையில் பயணிக்க முயற்சிப்போருடன் நாம் உடனடியாக புதிய கூட்டை வைக்க வேண்டிய எந்த அவசியமும் நமது கட்சிக்குக் கிடையாது. ஏற்கனவே நமது கட்சித்தலைவர் சுமந்த பழிபாவங்கள் போதும். அதுவும் அமைச்சர் ரிஷாட்டை வேண்டுமென்றே திட்டமிட்டு வெளியேற்றுவதற்கு மு கா தலைவருடன் சேர்ந்து ஒத்தூதியவர்களுடன் உடனடிக்கூட்டு என்பது எந்த வகையில் சாத்தியமாகும்?

அமைச்சர் ரிஷாட்டை கட்சியிலிருந்து வெளியேற்றிய காலத்தில் அவரது நிலைப்பாட்டை எடுத்துரைத்து உண்மை நிலைகளை பத்திரிகைகளில் வெளிக்கொணர்ந்தமைக்காக முஸ்லிம் காங்கிரஸ்காரர்களாலும், சக ஊடகவியலாளர்களாலும் நானும் நோகடிக்கப்பட்டிருக்கின்றேன் என்பதை மனவருத்தத்துடன் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். உண்மைக்கு அழிவில்லை என்பது இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றது. புதிய வெளிச்சக்காரர்கள் இதனையும் உணர வேண்டும்.

ஹக்கீமின் செயற்பாடுகளை தட்டி கேட்காது பேசா மடந்தையாக இருந்தவர்கள் தற்போது திருந்தியிருக்கலாம். சமுதாயத்தின் மீது அவர்களுக்கு புதிய பற்று ஏற்பட்டிருக்கலாம். எனினும் அவர்களின் அவசரத்திற்கு நாங்கள் பகடைக்காய்களாக முடியாது. தீர யோசித்து முடிவு கட்ட வேண்டிய விடயம். ( இதுவும் எனது சொந்தக் கருத்தே)

ஆண்டிகள் கூடி கட்டிய மடமாக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் ஹக்கீமுடன் முரண்பட்டு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து வெளியேறி முஸ்லிம் கட்சிகள் சிலவற்றை ஒன்றிணைத்து ( ஹாபீஸ் நசீர் அஹமட்டை தலைவராகக் கொண்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி(துஆ), ரசூல் தலைமையிலான முஸ்லிம் கட்சி, முபாரக் மௌலவி தலைமையிலான உலமா கட்சி, மற்றும் சில உதிரிக்கட்சிகளுடன் இணைந்து உரிவாக்கிய முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு எம் என் ஏ) இற்கு நடந்த கதையாக உத்தேச கூட்டமைப்பும் அமையக் கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் விழிப்பாக இருக்க வேண்டும். அத்துடன் பல கட்சிகளை உள்வாங்கி புலிகளின் நிர்ப்பந்தத்தினால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு விடயத்திற்கு எவரும் ஒப்பிடக் கூடாது. ஏனெனில் இக்கூட்டமைப்பு சரியோ, பிழையோ முஸ்லிம் காங்கிரஸை தவிர்ந்து உருவாக்கப்படும் ஓர் அமைப்பாக உருவாக்கப்படுவதால் சமூகத்திற்கான இலக்கை அடைய முடியுமா? (இதுவும் சிந்தித்து பார்க்க வேண்டிய விடயமே)

என்னைப் பொறுத்தவரையில் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்கள் பிரிந்து அரசியல் நடத்துவதே சமூகத்திற்கு ஆரோக்கியமானது, ஏனெனில் முஸ்லிம் சமூக உரிமைகளையும் அபிவிருத்தியையும் கொண்ட ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் நமது சமூகம் பிரிந்து அரசியல் செய்வதனாலேயே அமைச்சரவையில் பல அமைச்சர்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. உதாரணமாக கடந்த காலங்களில் ஒரே அமைச்சரவையிலே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஏ எச் எம் பௌசி, மு கா தவிசாளர் பஷீர் ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பணி புரிந்தமையை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். அதே போன்று நல்லாட்சியிலும் இந்த நிலை தொடர்கின்றது.

( இதுவும் எனது சொந்தக் கருத்தே).

எனவே கட்சியின் அபிமானிகளே, உங்கள் பதிவுகள், உங்கள் சொந்தக் கருத்தாக இருக்கட்டும். கட்சியின் கருத்தாக அமையும் வகையிலும் ஆதாரவாளர்களை குழப்பும் வகையிலும் உங்கள் பதிவுகளை இடுவதை தவிர்த்துக்கொள்ளுவோம்.
வஸ்ஸலாம்.

Related posts

வாழைச்சேனையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய விபத்து!

Editor

ISIS இயக்கத்தின் கதை முடியப்போகிறது.

wpengine

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக விண்ணப்பங்களை கோருமாறு வேண்டுகோள்

wpengine