Breaking
Sun. May 5th, 2024

ஒரு தெருவில் நடந்து கொண்டிருக்கிறோம், சாலையில் யாரோ ஒருவர் நம்மை பின் தொடர்வது போல இருந்தால் நமக்கு எப்படி இருக்கும். சற்று அசெளகரியமாக தான் இருக்கும். ஆனால் ஆட்களே இல்லாத சாலையிலும் உங்களை ஒருவர் பின் தொடர்கிறார் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. இதற்கு உங்களிடம் ஒரு மொபைல் இருந்தாலே போதும் என்று சவால் விடுகின்றன டெக் நிறுவனங்கள்.

உங்களுக்கு என்ன உணவு பிடிக்கும், நீங்கள் எந்த சினிமா நடிகரின் ரசிகர், உங்களுக்கு கோலி பிடிக்குமா, தோனி பிடிக்குமா? நெடுவாசல் போராட்டத்தில் விருப்பம் உள்ளவரா நீங்கள் இப்படி எல்லா கேள்விகளையும் உங்கள் நண்பரிடம் கேட்டால் கூட அத்தனைக்கும் சரியாக பதில் வருமா என்பது சந்தேகம் தான். ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் கூகுளிடமும், ஃபேஸ்புக்கிடமும் பதில் இருக்கிறது. இதெல்லாம் அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்கிறது என்பது தான் இன்று நமது பெரிய கேள்வி.

ஃபேஸ்புக் நிறுவனம் மார்க் சக்கர்பெர்க் சில மாதங்களுக்கு முன் டேட்டா சென்டரின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதேபோல் கூகுளிடமும் மிகப்பெரிய டேட்டா சென்டர்கள் உள்ளன. இவை தான் நீங்கள் காஃபி பிரியர், கோலி ரசிகர் என்பதை உலகிற்கு சொல்பவை. செல்போனில் நீங்கள் தேடும் விஷயங்கள், ஃபேஸ்புக்கில் நீங்கள் விரும்பும் விஷயங்கள், உங்கள் ஆன்லைன் புக்கிங் தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றன இந்த நிறுவனங்கள்.

மொபைல்  மொபைல்

உங்கள் மொபைல் போனை எடுங்கள் அதில் கூகுள் க்ரோம் ஓப்பன் செய்யுங்கள், எதுவுமே டைப் செய்ய வேண்டாம். உங்கள் திரையை மேல் நோக்கி நகர்த்துங்கள். உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் செய்திகள் என ஒரு பட்டியல் செய்திகள் வெவ்வேறு தளங்களில் இருந்து வருவதை பார்க்க முடியும்.  அந்த தளங்கள் எல்லாம் உங்களால் அதிகமாக தேடப்பட்ட தளங்கள் தான். இந்த டேட்டாவை வைத்து தான் கூகுள் மேஜிக் செய்கிறது. கூகுள் இன்னொரு விஷயத்தையும் செய்கிறது. கூகுள் மேப்ஸ் மூலம் நாம் பயணித்த இடங்களையும் கண்காணிக்கிறது.

அடுத்தது ஃபேஸ்புக், ஃபேஸ்புக்கில் ஒரு பவர் ஐகானுடன் சில கட்டுரைகள் தோன்றுவதை பார்த்திருப்பீர்கள். அவை ஃபேஸ்புக்கின் இன்ஸ்டண்ட் ஆர்ட்டிகிள்கள் அவற்றின் இறுதியில் தான் இருக்கிறது ஃபேஸ்புக் மேஜிக், நீங்கள் இருக்கும் பகுதியை கண்டறிந்து அந்த பகுதிகளில் அதிகம் படிக்கப்படும் செய்தியை தரும் அளவுக்கு தனது நியூஸ் ஃபீட் மேம்பாடு அடைந்துள்ளதாக கூறுகிறது ஃபேஸ்புக்.

இதுமட்டுமில்லாமல் நீங்கள் அதிகம் வீடியோக்களை பார்ப்பவராக இருந்தால் தெரிந்திருக்கும், ஒரு வீடியோவை மொபைலில் ப்ளே செய்தால் அதில் 10 பரிந்துரை வீடியோக்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பரிந்துரை செய்கிறது. இவையெல்லாம் உங்கள் போன் மூலம் பெறப்பட்ட தகவல்களே.

உண்ணும் உணவு, தங்கும் இடம், நமது விருப்பங்களோ, நமது நண்பர்களின் விருப்பங்கள் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்து அதனை வர்த்தகம் செய்யும் நபர்களை நமக்கு அடையாளம் காட்டி வர்த்தகம் செய்கின்றன இந்த டெக் நிறுவனங்கள்.

facebook

இவையெல்லாம் மிகப்பெரிய விஷயங்களாக கணினி திரைக்கு பின்னால் நடந்தாலும் இதன் மூலம் நிறைய வருமாணம் ஈட்டுகின்றன இந்த டெக் நிறுவனங்கள். இவையெல்லாம் நமது அனுமதியுடன் நடக்கின்றன என்பதும் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமே. நீங்கள் போடும் லைக், ஹார்ட், ஹாஹா எமோஜிக்கள் துவங்கி நீங்கள் பார்க்கும் திரைப்பட டிக்கெட்டுக்கான புக்கிங் வரை எல்லாமே வியாபாரத்துக்கான மூல தனம் தான்,

இதனை எளிமையாக கூற வேண்டும் என்றால் ஒரு மலையாள படத்துக்கு டிக்கெட் புக் செய்த போது அது ஃபேஸ்புக் லாக் இன் மூலம் புக் செய்யப்பட்ட டிக்கெட். புக் செய்தவரது ஸ்டேட்டஸ் சிங்கிள் என்பதை அறிந்து கொண்டு மலையாள மேட்ரிமோனி விளம்பரத்தை தோன்ற செய்ததெல்லாம் டேட்டா அனலசிஸின் உச்சம்.  ஃபேஸ்புக்கில் நீங்கள் விளம்பரம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த டேட்டாக்களை எப்படி கையாளுகிறது என்று. உதாரணமாக திருச்சியில் ஒரு உணவகம் இருக்கிறது. அவர்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்கிறார்கள் என்றால் யாரெல்லாம் திருச்சிக்கு பயணிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இந்த விளம்பரத்தை காட்டு, சிக்கன் பிரியாணி மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த விளம்பரத்தை காட்டு, இங்கு மதுரை ஜிகர்தண்டா கிடைக்கும் என்பதால் ஜிகர்தண்டா பிரியர்களுக்கு இந்த விளம்பரத்தை காட்டு என உங்களை எந்த விதத்தில் எல்லாம் விளம்பரம் தருபவரோடு தொடர்பு படுத்த முடியுமோ அதனை செய்கின்றன ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள்.

குக்கீஸ், டிவைஸ் ஐடி, ப்ரெளசிங் பேட்டர்ன் என ஒவ்வொருவரையும் அலசி ஆராயும் இவர்கள் சொல்லும் பதில் நாங்கள் தனிநபராக ஆராய்வதில்லை. மொபைல்  ப்ரோக்ராம்கள் மொத்தமாக தானியங்கி இந்த தகவல்களை வழங்குகின்றன என்பது தான்.  மக்களின் செயல், உழைப்பு, அறிவு இவற்றையெல்லாம் கொண்டு வர்த்தகம் செய்யும் முடியும் என்றால் உணர்வுகளை கொண்டும் வர்த்தகம் செய்ய முடியும். அதனை செய்ய இந்த டேட்டாக்களை நாம் வழங்கி கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. அடுத்த முறை உங்கள் மொபைலில் இந்த விளம்பரங்கள் தோன்றினால் அதற்கு தகவல் அளித்தது நீங்கள் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். உலகம் டேட்டாக்களால் ஆனது. நாளை உங்கள் காதலியுடன் நீங்கள் சண்டை போட்டிருக்கிறீர்கள். சாக்லேட் வாங்கி கொடுங்கள் என்ற பரிந்துரை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *