பிரதான செய்திகள்

மாவீரர் குடும்பங்களுக்காக 15மில்லியன் ஒதுக்கீடு! செய்த வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன்

வட மாகணத்தில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பொருட்டு, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழ்வாதார உதவி வழங்கும் இவ்வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த வருடம் 15 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு வடமாகாணம் முழுவதும் 300 குடும்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 60 பயனாளி குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கும் செயற்ப்பாடு நேற்று 10.07.2017 திங்கள்கிழமை மதியம் 2.00 மணியளவில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

அங்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கிய வடமாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், பயனாளிகள் தற்பொழுது என்ன தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களோ அதனை இவ்வுதவித்திட்டதினை கொண்டு மேலும் முன்னேற்றி கணிசமான வருவாயினை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அல்லது தங்களால் மேற்கொள்ளக்கூடிய தொழில் ஒன்றினை தெரிவுசெய்து அதன்மூலம் வாழ்வாதரத்தினை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அமைச்சர் அங்கு உரையாற்றுகையில்;

அண்மையில் சமூக வலைத்தளங்களின் மூலம் அறியப்பட்ட விடயம் நைனாதீவு கோவிலில் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முன்னை நாள் போராளி ஒருவர் ஒரு வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் காணப்படுவதாகவும், அவ்வாறே வடமாகாணம் முழுவதும் எமது இனத்திற்காக பல தியாகங்களை செய்த எத்தனையோ போராளிகள் குறிப்பாக கணவன்மாரை இழந்த பெண்போராளிகள், தமது அவயவங்களை இழந்த போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்கள் போன்றவர்கள் கஷ்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், தனது கொள்கைக்கு அமைவாக வடமாகாணம் முழுவதும் 16000 குடும்பங்கள் வாழ்வாதார உதவித்திட்டங்களுக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் அதற்க்கான நிதி இல்லாமையினால் அனைத்து குடும்பங்களையும் வாழ்வாதாரத்தில் கட்டியெழுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும் அதற்க்கு பல கோடி ரூபாய்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறு ஒருநேர உணவுக்கு கஷ்டப்படுகின்ற போராளிகளையும் மாவீரர் குடும்பங்களையும் நிலையான அபிவிருத்தியை நோக்கி பொருளாதரத்தில் கட்டியெழுப்புவதனையும், அவர்களின் பிள்ளைகளின் கல்வி, வாழ்க்கைத்தரம் என்பவற்றை சரியான முறையில் கட்டியெழுப்புவதனை விட வேறு என்ன வேலை முக்கியமானதாக இருக்க முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மீதமாக இருக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதர்க்கான முயற்சியில் இறங்கி அதற்க்கான நிதிமூலங்களை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதோடு மாகாண சபையில் ஒதுக்கப்படும் நிதிகள் பல வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் இவ்விடயத்திற்கு கணிசமான நிதியினை ஒதுக்கிகொடுப்பது தார்மீக பொறுப்பாகவுள்ளது, எனவே முதலமைச்சரும் இவ்விடயத்திற்கு தனது கரிசனையைக் காட்டவேண்டுமென அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் அமைச்சருடன் வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், திணைக்கள உத்தியோகத்தர்கள், வடமாகாணசபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் புதல்வர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனர்.

 

Related posts

வங்காள விரிகுடாவில் தாழ்முக்கம்! வடக்கு,கிழக்கு மோசமான நிலை

wpengine

நாட்டின் உத்தியோகபூர்வ மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில்!

Editor

சாய்ந்தமருது புதிய சுகாதார வைத்திய அதிகாரி கடமையேற்பு!

Editor