Breaking
Sun. May 19th, 2024

தங்களது கொள்கையின் அடிப்படையில் மக்கள் மத்தியில் உண்மையை கூறி பிரச்சாரம் செய்கின்ற சில அரசியல் கட்சிகள் உள்ளன. அதுபோல் எந்தவித கொள்கைகளும் இல்லாமல் எப்படியாவது தேர்தலை வென்றால் மட்டும் போதும் என்ற இலாபத்தினை நோக்கமாகக் கொண்ட கட்சிகளும் உள்ளன.

இங்கே கொள்கையின்பால் செயல்படுகின்ற எந்த கட்சிகளும் முஸ்லிம் சமூகத்தில் இல்லை. ஆனால் பெரும்பாலானவைகள் தேர்தலை மட்டும் இலக்காகக்கொண்ட சந்தர்ப்பவாத கட்சிகள்.

தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற வியூகங்களை வகுத்து செயல்படுகின்ற கட்சிகள் ஒவ்வொரு பிரதேசங்களில் ஒவ்வொரு கருத்துக்களை கூறுவதுடன், வாய்க்கு வருகின்றவாறு பொய் வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவது வழமை.

இவ்வாறான ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் பாவனைகள் வருகைக்கு முன்பு மக்கள் மத்தியில் எந்தவித தாக்கத்தினையும் செலுத்தவில்லை. அதனை ஆய்வு செய்கின்ற அளவுக்கு மக்கள் புத்திசாலிகளுமல்ல. அத்துடன் சமகாலத்தில் தங்கள் தலைவர்களின் மாறுபட்ட பேச்சுக்களை மக்கள் அறிந்திருக்கவுமில்லை.

அப்போது பத்திரிகைகளில் வருகின்ற செய்திகளை மட்டும் சிலர் அறிந்துகொள்வார்கள். ஒவ்வொரு பிரதேசங்களிலும் மேடை பிரச்சாரங்களை செவிமடுக்கின்றவர்கள் எவரும் ஏனைய ஊர்களில் தங்கள் தலைவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று நுணுக்கமாக ஆராய்ந்ததில்லை.

ஆனால் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைய ஆரம்பித்தபின்பு அரசியல்வாதிகளின் ஒன்றுக்கொன்று முரண்பாடான போலிப் பேச்சுக்களும் அவர்களது சுயரூபங்களும் மக்கள் மத்தியில் உணரப்பட ஆரம்பித்தது. அது இன்று விமர்சிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கேற்ப அரசியல் தலைவர்களின் சிந்தனைகளிலும், கொள்கையிலும், பிரச்சார செயல்பாடுகளிலும் வளர்ச்சிகளோ, முன்னேற்றங்களோ, மாற்றங்களோ ஏற்படவில்லை. அன்றுபோலவே இன்றும் உள்ளனர்.  

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 1975 இல் எதனை பேசினாரோ, அதனையே 2009 இல் அவர் மரணிக்கும் வரைக்கும் பேசினார்.  

இரட்டை நாக்கு இல்லாத அவரது பேச்சில் ஒன்றுக்கொன்று எந்தவித முரண்பாடுகளையும் காணமுடியவில்லை. அவ்வாறு தனது பேச்சில் முரண்பாடுகளோ, உணர்ச்சிவசப்பட்ட வார்த்தைகளோ எந்தச் சந்தர்ப்பத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே தயாரித்து எழுதப்பட்ட ஓலையை வாசிப்பதன் மூலம் தனது பேச்சில் முரண்பாடுகள் வராமல் கவனமாக பார்த்துக்கொண்டார்.

அவர் போலவே கொள்கையின்பால் பயணிக்கின்ற சில அரசியல் கட்சிகள் எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும் முரண்பாடில்லாத பேச்சுக்களை அதன் தலைவர்கள் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள்.

எனவே இன்று சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளது என்பதனையும், தங்களை சுற்றிவர கமெராக்கள் உள்ளது என்பதனையும், அது ஆதாரமான பதிவுகளாக பதியப்படுகின்றது என்பதனையும் மறந்துவிடாமல், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முரண்பாடில்லாத பேச்சுக்களை பேச பழகிக்கொள்ள வேண்டும்.

அதற்காக கொள்கைகளை வகுத்து அதன்படி மக்கள் மத்தியில் உண்மையை பேசுவதன் மூலம் அல்லது பிரபாகரன் போன்று எழுதப்பட்ட ஓலைகளை வாசிப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியப்படும். இல்லாவிட்டால் முரண்பாடான பொய் பிரச்சாரங்களும், உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.  

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது    

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *