பிரதான செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யாரையும் வீழ்த்த நினைக்கவில்லை

தவறான புரிதலால் மக்கள் காங்கிரஸ் தொடர்பில் பிழையான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டாம்.
மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் தெரிவிப்பு.

அக்கரைப்பற்று பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகளுக்காக தாம் அங்கு செல்லவில்லையெனவும், அந்தப் பிரதேசத்தில் பெண்கள் அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகவே பல பகுதிகளுக்கு விஜயம் செய்ததாகவும் மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் தேசிய இணைப்பாளர் டாக்டர். ஹஸ்மியா தெரிவித்தார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற மகளிர் ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேசிய இணைப்பாளராக நான் பணியாற்றுவதால், நாட்டின் பல பாகங்களிலும் பெண்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் செயற்திட்டங்களை எமது அணி சார்ந்தவர்களுடன் இணைந்து, முன்னெடுத்து வருகின்றேன்.

இறுதியாக அக்கரைப்பற்று பிரதேசத்தில் அங்குள்ள பெண்களின் வேண்டுகோளினை ஏற்று, அங்கு நாம் விஜயம் செய்த போது, பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி அறிந்துகொண்டோம். அந்தப் பிரச்சினைகளை இனங்கண்டு, அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை ஆயத்தப்படுத்தி வருகின்றோம்.

கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்காகவோ, தேர்தலை மையமாக வைத்தோ நாம் அங்கு அண்மையில் செல்லவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தவறான புரிதலால் பல விமர்சனங்களை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியது கவலையளிக்கின்றது.

போதாக்குறைக்கு மற்றைய கட்சிகளின் மகளிர் தலைவிகளுடன் எம்மை ஒப்பிட்டு பேசி பிரச்சினைகளை உண்டுபண்ண சிலர் முனைகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியின் மகளிர் பிரிவாக இருந்தாலும் எமது நாட்டில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்த்து வைத்து அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும், உதவிகளையும் வழங்க முடியுமாயின் அது பெண் சமூகத்திற்கு கிடைக்கும் வரப்பிரசாதமாகவே நாம் கருதுகின்றோம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், அவரது அணியைப் பலப்படுத்தும் பெண்கள் அணியும் ஒழுக்கமான மார்க்க விழுமியங்களுக்குட்பட்ட சமூகம் சார்ந்த செயற்பாடுகளையும், அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றதேயொழிய எவரையும் வீழ்த்தவேண்டுமென்ற நோக்கில் பணியாற்றவில்லை. பெண்களை வீணாகவும், அபத்தமாகவும் குற்றம் சுமத்தி, அவர்களை சமூகப்பணிகளிலிருந்து விரட்டும் உள்நோக்க மனப்போக்கை கைவிடுவதற்கான புதிய சமுதாயமொன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.

அரசியலுக்காக பெண்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தும் அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர, நாங்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் மருந்தகங்களையும் திறக்க முடியும்.

wpengine

மன்னார் சவுத்பாறை சேர்ந்த வறிய குடும்பத்திற்கு பா.டெனிஸ்வரன் உதவி

wpengine

முன்னால் அமைச்சரின் நிதி ஒக்கீட்டில் பாலர் பாடசாலை

wpengine