முசலி பிரதேச செயலாளர் பிரிவு மக்களின் பாரம்பரிய நிலங்களை மாவில்லு வன ஒதுக்காகப் பிரகடனப்படுத்தும் அரச வர்த்தமானி அறிவிப்பை ரத்துச் செய்யக் கோரி 38 சிவில் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். அதனை இங்கு தருகின்றோம்.
மன்னார்மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு சொந்தமான பெருமளவு பாரம்பரிய நிலங்களை, வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 3A பிரிவின் கீழ் மாவில்லு வன ஒதுக்காகப் பிரகடனப்படுத்தும் அரச வர்த்தமானி அறிவித்தல் இல. 2011/34 இனை மீளாய்ந்து நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், கீழே கையொப்பமிட்டுள்ள நாம் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ் வர்த்தமானி அறிவிப்பினால் முசலி பிரிவிலுள்ள கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, வில்லாத்திக்குளம், பெரிய முறிப்பு, மாவில்லு மற்றும் வெப்பல் உட்பட பல கிராமங்கள் தீவிரமாகப் பாதிக்கப்படும். முசலி பிரிவைச் சேர்ந்த மக்களின் சார்பாக, அவர்களின் கருத்து வெளிப்பாடு மற்றும் நீதிக்கான உரிமைக்கமைவாக நாம் இவ் வேண்டுகோளை விடுக்கின்றோம்.
இவ் வர்த்தமானியானது காடழிப்பு மற்றும் வில்பத்து வன ஒதுக்கில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். வனப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு ஒருமித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனினும், இவ் வர்த்தமானி அறிவிப்பும், அதுவரையப்பட்ட முறையும், நில உரிமைக் கோரிக்கைப் பிரச்சினையின் வரலாற்றையும், அதனுடன் தொடர்புடைய மக்களின் உரிமைகளையும் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டன.
இது தொடர்பில் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிடின், கொடூர யுத்தத்தின் பின் இவ்விடத்தில் மீள்குடியேறித் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்ப முயலும் மக்கள் பாரிய எதிர்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும், இது போருக்குப் பிந்தைய மீள்கட்டமைப்புப் பணிகள், அரசு மற்றும் சிறுபான்மையினருக்கிடையிலான உறவு என்பவற்றின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நாம் அஞ்சுகிறோம்.
1990 இல் முஸ்லிம் மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதையும், போரின் காரணமாக மக்களிற் பெரும்பாலானோர் வெளியேறி, மீண்டுந் திரும்புவதற்கிடையிலான 30 வருட இடைவெளியையும் தவிர்த்து நோக்கின், முசலி பிரதேச மக்கள் (முஸ்லிம்கள், தமிழர் மற்றும் சிங்களவர்) இப் பிரதேசத்தில் பல தசாப்தங்களாகவோ அல்லது பல நூறாண்டுகளாகவோ வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களில் பெரும்பாலானோர் நெற் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு என்பவற்றை உள்ளடக்கிய நிலஞ் சார் பொருளாதாரத்திற் தங்கியுள்ள விவசாயிகளாவர்.
ஆயினும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வன எல்லையானது, இம் மக்களுக்குப் ‘பிரகடனப்படுத்தப்பட்ட வனப் பகுதியினுள்’ உள்ள அவர்களின் குடியிருப்பு, விவசாயம் மற்றும் மேய்ச்சல் நிலங்களை மறுக்கின்றது. மேலும், மக்களின் சொந்த மற்றும் அவர்களால் உபயோகப்படுத்தப்படும் நிலம் மட்டுமல்லாது, மக்கட்தொகையின் இயல்பான வளர்ச்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கு அவசியமான மேலதிக நிலமும் இதனால் இழக்கப்படும்.
இவ் வர்த்தமானி அறிவிப்பின்படி, அண்ணளவாக 40,030 ஹெக்டேயரளவு பிரதேசம், விரிவுபடுத்தப்பட்ட மாவில்லு வன ஒதுக்கினுள் உள்ளடக்கப்படும். இதனால் வரலாற்றினால் இணைக்கப்பட்ட முசலி தெற்கு மற்றும் முசலி வடக்குச் சமூகங்கள் (இரண்டும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை உள்ளடக்கிய சமூகங்கள்) ஒன்றிலிருந்தொன்று துண்டிக்கப்பட்டு, முசலி பிரதேச செயலாளர் பிரிவானது இரண்டாகப் பிளவுபடுத்தப்படும். இதன் காரணமாக ஒன்றிலிருந்தொன்று துண்டிக்கப்பட்ட தனித்த மக்கள் கூட்டங்கள் உருவாகும். இது மக்களைத் தனிமைப்படுத்துவதோடு, அவர்களது அசையுமாற்றலைக் கட்டுப்படுத்தி, அவர்களுக்கிடையிலான சமூகப் பரிமாற்றங்களைக் குறைக்கும். மேலும், வன எல்லை மக்களின் வீட்டு எல்லைகளுக்கு மிக அருகில் வருவதால், மனித – -விலங்கு இடைத்தாக்கம் அதிகரித்து, ஏற்கனவே பாரிய மனவழுத்தத்தில் உள்ள மக்களை ஆபத்துக்குள்ளாக்கும்.
முசலி மக்கள் தமது வாழ்வு, இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்பப் போராடி வருகின்றனர். மட்டுப்படுத்தப்பட்ட உதவியும், வளங்களும் அவர்களின் வாழ்வை இன்னும் கடினமாக்கியதோடு, நிரந்தர மீள்குடியேற்றத்தில் வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முசலி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் 40% ஆனோரே திரும்பிவந்துள்ளனர். இவ் வர்த்தமானி அறிவிப்பு, எஞ்சிய 60% மக்களின் மீள்குடியேற்றத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி, இப் பிராந்தியத்தில் சமூக வளர்ச்சியை மேலும் பின்னடையச் செய்யும்.
முசலியிலிருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் திரும்பியோரின் நிலை, ஏனைய இடம்பெயர்ந்தோர் சமூகங்களின் அவல நிலையைப் போல் வருந்தத்தக்கதாகவே உள்ளன. வனப் பாதுகாப்பு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கிடையிலான முரண்பட்ட கூற்றுக்கள், வில்பத்து மற்றும் அதன் வடக்கு எல்லைக்கு மட்டும் தனித்துவமானதல்ல என்பதை நாம் நினைவிற் கொள்வது முக்கியமானது.
வடக்கு, கிழக்கு முழுவதும் இது போன்ற முரண்பாடுகளை நாம் காணக்கூடியதாகவுள்ளது. கருவேப்பக்குளம் (ஒதியமலை, ஒட்டுசுட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு, முல்லைத்தீவு), கிரான் கோமாரி மற்றும் வேகாமம் (பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவு, அம்பாறை) மற்றும் மயிலாட்டமடு மதவணி (கோறளைப்பற்று தெற்கு, மட்டக்களப்பு) போன்ற பல பிரதேசங்களில் மீள்குடியேறத் திரும்பி வரும் மக்கள், தமக்கு சொந்தமான அல்லது தாம் முன்பு பயன்படுத்திய நிலங்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசங்களாக, சில சந்தர்ப்பங்களில் காணி நிர்வாகத்துக்குப் பொறுப்பான மாவட்ட நிலை அதிகாரிகளின் ஆலோசனையைப் பெறாமலேயே, எல்லைப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றனர்.
முசலியின் தற்போதைய இந்நிலை, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலவும் நிலந் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் அரசின் அணுகுமுறையிலுள்ள பாரிய பிரச்சினை ஒன்றை சுட்டுகின்றது. போரின் பின் பல அரச முகவரகங்கள், குறிப்பாக இராணுவம், மக்களுக்குச் சொந்தமான அல்லது அவர்களால் உரிமை கோரப்பட்ட நிலங்களிற் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள சில பகுதிகளை அரசு மக்கள் மீள்குடியமர விடுவித்துள்ளபோதும், பல சமூகங்கள் இன்னும் தமது பாரம்பரிய நிலங்களைத் திரும்பப் பெற முடியாத நிலையில், நில விடுவிப்புத் தொடர்பில் அரசின் அணுகுமுறை மீது விரக்தியுற்றுள்ளன.
பனாம (அம்பாறை) இல் உள்ள பெரும்பாலும் சிங்களக் குடும்பங்கள், அஷ்ரப் நகர் (அம்பாறை) மற்றும் சிலாவத்துறை (முசலி) இல் உள்ள முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் வடக்கு முழுவதுமுள்ள (முசலியிலுள்ள முள்ளிக்குளம் மட்டுமல்லாது) தெல்லிப்பழை (யாழ்ப்பாணம்) மற்றும் கேப்பாப்புலவு (முல்லைத்தீவு) போன்ற பல இடங்களிலுள்ள தமிழ்ச் சமூகங்கள் இன்னும் தமது சொந்த இடங்களிற் குடியமரவியலாத நிலையே காணப்படுகின்றது. இப் பிரதேசங்களில் தொடர்ந்தும் பல்வேறு அரச முகவரகங்கள் நிலைகொண்டும், நிலங்களை ஆக்கிரமித்தும் உள்ளமை, மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் தமக்கு சொந்தமான நிலங்களைத் தம்மிடமிருந்து பறிப்பதற்கு அரசு முயல்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
மக்களின் நிலம் தொடர்பான இப் பிரச்சினைகள் கையாளப்படும் முறை, ஜுன் 2016 இல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட, இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நீடித்து நிற்குந் தீர்வுகள் தொடர்பான தனது சொந்தத் தேசியக் கொள்கை மீது அரசு காட்டும் விசுவாசம் தொடர்பில் பாரிய கேள்விகளை எழுப்புகின்றது.
வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனச்சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் போன்ற அரச அமைப்புகள், மாவட்ட நிலை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் கலந்துரையாடாது நிலங்களை வர்த்தமானிப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளை இத் தேசியக் கொள்கையின் பிரிவு VII.2 தெளிவாகக் குறிப்பிடுகின்றது. மேலும் தனிநபர் பிணக்குகளை மீளாய்வு செய்வதற்கும், அவற்றைத் தீர்ப்பதற்கு வெளிப்படையான ஆலோசனை செயன்முறையொன்றைச் சுவீகரிப்பதற்கும் உதவுமொரு செயன்முறையையும் அப் பிரிவு குறிப்பிடுகின்றது. இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான நீடித்து நிற்கும் தீர்வுகள் தொடர்பான தேசியக் கொள்கையை உடனடியாக அமுல்படுத்தவேண்டுமென நாம் கோருகிறோம்.
இடம்பெயர்வு தொடர்பான பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிந்தாலும், இடம்பெயர்ந்து தமது சொந்தவிடங்களுக்குத் திரும்பியவர்களும், இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்பவர்களும் தமக்கானவொரு நீடித்து நிற்குந் தீர்வினை இன்னும் அடையவில்லையென்பதே நிதர்சனமாகும். இதை ஒரு வரலாற்றுத் தேவையாகக் கருதி, மார்ச் 2017 இன் அரச வர்த்தமானி அறிவித்தல் 2011/34 இனை உடனடியாக ரத்துச் செய்து, 1992 ஆம் ஆண்டின் பிரதேசச் செயலக வரைபடத்தின்படி முசலி தெற்கு எல்லையை மீள அறிவித்துப் பின் பொது ஆலோசனைக்கிணங்க காட்டு எல்லையை வரையறுப்பதன் மூலம் ஜனாதிபதி முசலி மக்களின் கவலைகளைத் தாமதமின்றி, நியாயமானதொரு முறையில் தீர்க்க வேண்டுமென நாம் கோருகிறோம்.