Breaking
Tue. Apr 16th, 2024
[எம்.ஐ.முபாறக் ]

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்தைத் தொடரர்ந்து அக்கட்சி சதிகளுக்குள் சிக்குவது தொடர்கதையாகவே இருக்கின்றது.கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் கட்சிக்குள் பதவிகளுக்குக்  குறி வைத்திருந்தவர்களும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆசைப்பட்டவர்களும் சேர்ந்து முன்னெடுத்த சதித் திட்டங்களால் கட்சி கடந்த காலங்களில் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் உள்ளானது.

தேர்தல்களில் மு.காவில் போட்டியிட்டு-வெற்றி பெற்று-கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தங்களின் அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்காக கட்சி மீதும் கட்சியின் தலைமைத்துவம் மீதும் எவ்வாறெல்லாம் சேறு பூசினார்கள்;எவ்வாறெல்லாம் கதை கட்டினார்கள் என்பதை நாம் அறிவோம்.

கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு இந்தக் கட்சியை அழிப்பதற்கும் அதன் ஊடாக தங்களை தேசியத் தலைவர்களாக  ஆக்கிக்கொள்வதற்கும் ஓடித் திரிபவர்களின் அட்டகாசம் இப்போது அதிகரித்துள்ளதால் மு.கா மீண்டும் பிளவுக்குள்ளும் சதிக்குள்ளும் சிக்கியுள்ளது.

ஆனால்,இந்தச் சதிகளின் வீரியம் கடந்த காலங்களை விடவும் குறைந்ததாகும்.ஆட்சி.அதிகாரங்கள் இல்லாமலும்-அரசுடன் இணைந்திருந்து எதிர்க்கட்சிபோல் இருந்தும் ஒரு காலத்தில் மு.கா இவ்வாறான  சதிகளை எதிர்கொண்டது.இப்போது முழுமையான ஆட்சி,அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இப்போதைய சதியைச் சந்திக்கின்றது.

மு.காவைப் பிளவுபடுத்துவதற்கு அப்போது அதிகம் அக்கறைகொண்ட மஹிந்தவின் அனுசரணையுடன் அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி மரத்தை அழிப்பதற்கு அதன் உடைந்த-அழுகிய மரக்கிளைகள் முயற்சி செய்தன.கட்சியை அழிக்கத் துடித்த மஹிந்தவின் பக்கத்திலேயே போய் நின்று கட்சியைக் காப்பாற்றுவதற்கு மு.காவின் தலைமைத்துவம் வகுத்த வியூகத்தால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.

மரத்தின் உடைந்த பழைய கிளைகளும் தற்போதும் மரத்தினுடனேயே இருக்கும் கிளைகளும் சேர்ந்து நகர்த்திய சதித் திட்டம் மேற்படி வியூகத்தால் முறியடிக்கப்பட்டபோதிலும்,இப்போது அந்தச் சதி மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்  தேசியப் பட்டியல் ஆசனங்களைக் குறி வைத்து மு.காவின் தவிசாளர் பஸீர் சேஹுதாவூதும் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலியும் போராட்டத்தில் குதித்தனர்.மு.கா தற்போது எதிர்நோக்கும் புதிய தலையிடி;புதிய சதி இதுதான்.

<div

நாடாளுமன்றத் தேர்தலின் பின் கட்சி பெற்ற பெறுபேறுகளை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இவர்களின் இந்தப் போராட்டம் எந்தவகையிலும்,நியாயமற்றது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

திருகோணமலை மற்றும் வன்னி மாவட்டங்களில் கட்சி எதிர்பாராத வகையில் தோல்வியைச் சந்தித்தது.அந்த மாவட்டங்களில் கட்சி கொண்டிருந்த தலா ஒவ்வொரு ஆசனமும் 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பறி போனது.

இதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு தலா ஒவ்வொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை ஒதுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கட்சி தள்ளப்பட்டது.அதன் அடிப்படையில்,தற்போது திருகோணமலை மாவட்டத்துக்கு ஓர் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.அடுத்து வன்னிக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.அத்தோடு,கையில் இருக்கும் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களும் முடிந்துவிடும்.

கட்சியின் இந்த இக்கட்டான நிலைமையை அறிந்தும்கூட,தங்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோருவது எந்தளவு சுயநலமிக்கது என்பதை விளக்கிச் சொல்லத் தேவை இல்லை.அந்த இரண்டு ஆசனங்களையும் இவர்களுக்குக் கொடுத்துவிட்டால் வன்னியையும் திருகோணமலையையும் மு.கா மறந்துவிட வேண்டியதுதான்.அந்த இரண்டு மாவட்டங்களிலும் மு.காவுக்கு எதிராக தலா இரண்டு எம்பிக்கள் உருவாகி இருக்கின்ற நிலையில்,ஓர் எம்பியும் இல்லாமல் மு.காவால் அந்த மாவட்டங்களில் எழும்ப முடியாது என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அவ்வாறு அறிந்திருந்தும்,அவர்கள் தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கோருகிறார்கள் என்றால் அவர்களுக்கு கட்சி நலன்கள் மீது சிறுதும் அக்கறை இல்லை என்றே அர்த்தம்.

அதுபோக,பசீர் சேஹுதாவூத் மட்டக்களப்பு மாவட்டத்தில்  கட்சியை வளர்க்காமல் மூன்று தடவைகள் தேசியப் பட்டியல் ஆசனங்களை அனுபவித்திருக்கின்றார்.ஹசன் அலி இரண்டு தடவைகள்.கட்சி மேற்படி வீழ்ச்சியைச் சந்திக்காவிட்டாலும் கூட,இவர்கள் இருவருக்கும் தொடர்ந்தும் தேசியப் பட்டியல் வழங்குவது நியாயமாகுமா?கடந்த காலங்களில் கட்சிக்குள் அதிருப்தி ஏற்படுவதற்கு இவர்களுக்குத் தொடர்ச்சியாக ஆசனங்கள் கொடுக்கப்பட்டமையும் ஒரு காரணமாகும்.

ஆகவே,இந்த பதவி ஆசையால் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு-சதிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கட்சியின் தலைமைத்துவம் இப்போது வித்தியாசமான நகர்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.தேர்தல் தொகுதி மட்டத்தில் இருக்கின்ற கட்சியின் மத்திய குழுக்களின் ஆலோசனைகளை கட்சியின் தலைவர் இது தொடர்பில் திரட்டத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில்,இந்த மாதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில்  அம்பாறை மாவட்டத்தின் கல்முனை.பொத்துவில் மற்றும் சம்மாந்துறை ஆகிய தொகுதிகளின் மத்திய குழுக்களைக் கூட்டி அந்தக் குழுக்களின் ஆலோசனைகளை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் பெற்றுக் கொண்டார்.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின்படி,கட்சியின் தலைமைத்துவத்துக்கு செயலாளர் நாயகம் விசுவாசமாக  இல்லை.99 வீதம் விசுவாசமாக இருந்து ஒரு வீதம் எதிராக இருந்தாலும் அந்த 99 வீதமும் விசுவாசமாக ஆகாது என்று சாரப்பட்ட கருத்துக்கள் அந்த கூட்டங்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டன.அதாவது ஒரு லீற்றல் பாலுக்குள் ஒரு துளி விசம் வீழ்ந்தால் பால் முழுவதும் விசமாகிவிடும் என்ற அர்த்தத்தோடு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

ஏனையவர்களை விடவும் தலைமைத்துவத்துக்கு மிகவும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் பதவி இனி ஹசன் அலிக்கு வழங்கப்படக் கூடாது என்றும் அவரை மதித்து கட்சியின் வேறு பதவிகளைக் கொடுக்கலாம் என்றும் அங்கு மேலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

ஹசன் அலி மு.காவின் எதிரிகளின் வலையில் சிக்கி இருப்பதால் மிகவும் அந்தரங்கமான-கட்சிக்கும் கட்சியின் தலைவருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய செயலாளர் நாயகம் போன்ற பதவியை வகிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்றும் மத்திய குழு உறுப்பினர்கள் அங்கு கூறினார்.
அத்தோடு,செயலாளர் நாயகம் பதவியை கட்சியின் தலைவர் வைத்திருப்பதுதான் மிகவும் நல்லது என்றும் சிலர் அங்கு கருத்துக்களைத் தெரிவித்தனர்.அதற்கான காரணத்தையும் தேவையையும் அவர்கள் விளக்கிக் கூறவும் தவறவில்லை.

அடுத்து,பஷீர் சேஹுதாவூதைப் பொருத்தவரை மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிரான கருத்துக்களையே கொண்டிருந்தனர்.அவர் கட்சிக்கு எதிராகவும் கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராகவும் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் மீண்டும் நினைவூட்டினர்.அவருக்கு எதிராக கட்சியின் தலைவர் எவ்வாறான கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாலும் அதற்கு அவர்களின் பூரண ஆதரவு கிடைக்கும் என்பது அவர்களின் கூற்றுக்களில் இருந்து தெரிந்தது.

ஆகவே,இவ்வாறான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த இருவருக்கும் எதிராக எவ்வாறான  நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றார் என எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *