வவுனியாவில் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாலமோட்டை ஓமந்தை மாதர்பனிக்கர்மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழையமாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை இன்று மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பாடசாலைக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டக்காரர்களுடன் ஓமந்தைப் பொலிஸார் மற்றும் அப்பகுதி கிராம அலுவலகர் ஆகியோர் நேரில் சென்று ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறும், இது தொடர்பில் தீர்வு பெற்றுத்தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் வி.ஸ்ரீஸ்கந்தராஜா சென்றதுடன் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
பின்னர் ஓமந்தை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி சுரேஸ் த சில்வா, வலய கல்விப்பணிப்பாளர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது பாடசாலை விடுமுறை 5 ஆம் திகதி ஆகையால் உடனடியாக கல்வி வலய பணிப்பாளர் எதுவும் செய்யமுடியாது.
எனவே அதிபரை உடனடியாக இடமாற்றுவது சாத்தியமில்லை. எனவே விடுமுறை ஆரம்பமாகும் போது உரிய கவனம் எடுத்து தீர்வு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.
இதனையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பாடசாலையின் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றதுடன், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து தமது போராட்டத்தினை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.