(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)
முஸ்லிம் காங்கிரஸ் தனது கரையோர மாவட்ட கோரிக்கையினை கைவிட்டுள்ளதாக புதியதொரு பொய் பிரச்சாரத்தினை ஹசன் அலி அவர்கள் மேற்கொண்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபாகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அடி உள்ளத்திலிருந்து இதயசுத்தியுடன் திட்டமிடப்பட்டு வெளியான ஓர் விடயம்தான் அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் அமைய இருக்கும் கரையோர நிருவாக மாவட்ட யோசனையாகும்.
தலைவரது மரணத்துக்கு பின்பு இந்த கரையோர மாவட்டம் அமைப்பதற்கான பலவித அழுத்தங்களை இதுவரையில் ஆட்சி அமைத்த அனைத்து ஆட்சியாளர்களிடமும் இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் அவ்வப்போது மேற்கொண்டிருந்தார்.
அந்தவகையில் 2௦௦2 ஆம் ஆண்டு ரவுப் ஹக்கீமினால் வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் கரையோர மாவட்டம் அமைப்பதற்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்த இறுதித்தறுவாயில் எங்களுக்குள் இருந்த பிரதேசவாதம் காரணமாக அது தடுக்கப்பட்டது.
அதாவது அன்றைய முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் அதாஉல்லா அவர்கள் கரையோர மாவட்டத்தின் தலைநகரம் கல்முனையில் அமையக்கூடாது என்றும் அமைவதென்றால் அக்கரைப்பற்றில்தான் அமைய வேண்டும் என்றும் கூறி அம்மாவட்டம் அமைவதனை தடுத்தார்.
பின்பு ரவுப் ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராக இருந்தபோது கரையோர மாவட்டம் அமைய வேண்டிய பின்னணி அறிக்கையுடன் அமைச்சரவை பத்திரம் ஒன்றை வடிவமைத்து அன்றைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுக்கு சமர்பித்திருந்தார். ஆனால் அன்றைய ஜனாதிபதி மகிந்த அதனை விரும்பாததன் காரணமாக அது கைவிடப்பட்டது.
ரவுப் ஹக்கீம் அவர்கள் கரையோர மாவட்டத்தினை பெற்றுக் கொள்ளவதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் ஹசன் அலிக்கு நன்கு தெரிந்திருந்தும், தனக்கு எம்பி பதவி கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தினால், பழி தீர்த்துக்கொள்வதற்காக மக்கள் முன்பு கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதனை காணக்கூடியதாக உள்ளது.
மேடைகளிலும், பத்திரிகைகளிலும் கரையோர மாவட்டம், கரையோர மாவட்டம் என்று அறிக்கைகள் மட்டும் விடத்தெரிந்த ஹசன் அலி அவர்கள், நீண்ட காலங்கள் முஸ்லிம் காங்கிரசின் அதிகாரமுள்ள செயலாளராகவும், 2004 தொடக்கம் 2015 வரைக்கும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், மற்றும் இராஜாங்க அமைச்சராகவும் இருந்தார். அப்படி இருந்தும் கரையோர மாவட்டத்தினை அமைப்பதற்காக ஆக்கபூர்வாக அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
2014ஆம் ஆண்டு கரையோர மாவட்டம் சம்பந்தமாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரத்துங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கரையோர மாவட்ட வடிவமைப்பு அதன் பூர்வீகமான உள்ளடக்கம், நிலப்பரப்பு, சனத்தொகை, உட்பட புவியியல் விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை ஹசன் அலி அன்று ஏன் சமர்பிக்க வில்லை?
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் நல்லாட்சியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப் படுத்தியிருந்த ராஜாங்க அமைச்சரான ஹசன் அலி அவர்கள் இது விடயமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவிடமோ, அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமோ கரையோர மாவட்ட கோரிக்கையினை முன்வைக்காதாது ஏன்?
100 நாள் அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருக்கும் போது கரையோர மாவட்ட கோரிக்கையை முன்வைத்து அதற்கு தேவையான சட்ட மூலம் உட்பட வடிவமைப்பு அறிக்கையை சமர்பிக்க தவறிய அவர், நிந்தவூரில் மேடை அமைத்து கோஷமிட்டால் மட்டும் கரையோர மாவட்டம் கிடைத்து விடுமா?
இதுவரை காலமும் அதிகாரமுள்ள செயலாளர் நாயகம் பதவியை சுமந்து கொண்டு கிராம மட்டத்தில் அல்லது தனது ஊரிலாவது கட்சியின் ஒரு கிளையை கூட சரியாக அமைத்து அதனை வழி நடத்த தவறிய ஹசன் அலி அவர்கள், இன்று தலைவரையும், கட்சியையும் நேர்வழி நடாத்தப் போகிறேன் என்று மேடையில் கோசமிடுவதை எப்படி நம்ப முடியும்? அது பதவி இல்லாததன் வெளிப்பாடாக தெரியவில்லையா?
எனவே, பதவியிலும் அதிகாரத்திலும் இருக்கும்போது கரையோர மாவட்டம் அமைப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்துவிட்டு இப்போது வெறும் அரசியலுக்காகவும், தலைவரை பழி தீர்ப்பதற்காகவும் போடுகின்ற எந்தவித கோசங்களும் மக்களிடம் எடுபடாது என்பதுதான் யதார்த்தமாகும்.