(சுஐப் எம் காசீம்)
முஸ்லிம்களின் அபிலாஷைகளை வென்ரெடுப்பதற்கான பாதுகாப்புக்கவசமாகவும் முக்கிய கேந்திரமாகவும் விளங்கும் கிழக்குமாகாண ஆட்சி நமது கைகளுக்குள் வருவதற்கு சமூக ஒற்றுமையே அத்தியாவசியமானது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.
மூதூரில் சதொச கிளயை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் றிஷாட் உரையாற்றினார்.
பாரளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதூர் நத்துவத்துல் உலமா அரபுக்கல்லூரி அதிபர் எம்.எம். கரீம் மொலவி, பிரதியமைச்சர் அமீர் அலி,இஷாக் எம்.பி. டொக்டர் ஹில்மி மஹ்ரூப் , டொக்டர் ஷாபி, உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று இருந்தனர்.
அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது….
நமது நாட்டிலே வடக்கு கிழக்குக்கு வெளியேதான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றபோதும் அவர்கள் பல்வேறு பிரதேசங்களில் சிதறியும் பரம்பலாகவும் வாழ்வதனால் அரசியலிலே எதுவித தாக்கமும் செலுத்தமுடியாதவர்களாக இருக்கின்றனர். கிழக்குமாகாணதில் மாத்திரமே முஸ்லிம்கள் செறிவாகவும் நிலத்தொடர்புடைய அமைவிடத்திலும் வாழ்ந்துவருவதால் அவர்கள் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் இருக்கின்றன. கிழக்குமாகாண ஆட்சி முஸ்லிம்களின் கைவசம் வந்தால் நாட்டில் உள்ள ஏனைய முஸ்லிம்களின் சமூக,பெருளாதார,கலாசார பாதுகாப்பு விடயங்களை கவனிப்பதற்கு அது வழிகோலும்.
வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் கண்டியிலும் முஸ்லிம்களின் நலன்களை கவனிக்க அந்தந்த பகுதியை பிரதிநிதித்துவப்படும் எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசபை உறுப்பினர்கள் எனப்பலர் இருக்கின்றனர் ஆனால் அனேகமான கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களின் பிரத்தியேகத்தேவைகளைக்கவனிக்க,பிரதேசபை உறுப்பினர் ஒருவர்தானும் இல்லாத துர்ப்பாக்கிய நிலையை நாம் காண்கின்றோம். அந்தப்பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் ஆங்காங்கே சிதறிவாழ்வதால் அவர்கள் தமக்கென சிறிய அரசியல் அதிகாரத்தையேனும் பெற்றுக்கொள்ளமுடியாதவர்களாக, ஏனையவர்களில் தங்கி வாழ்வபர்களாக இருக்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும் இவர்களின் நலன்களை கவனிக்காத நிலை இருப்பதனால், அந்த மக்கள் பார்ப்பாரும் கேட்பாரும் அற்றவர்களாக பரிதவித்து வாழ்கின்றனர். தமது ஒரு சிறிய பிரச்சினையைத்தீர்ப்பதற்குகூட மாற்றாரின் உதவியை நாடவேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
எனவேதான் கிழக்குமாகாண அதிகாரத்தை நம்வசப்படுத்துவதன் மூலம் இலங்கைவாழ் முஸ்லிம்களின் தேவைகளை நிவர்த்திப்பதற்கான மையமாக அதனை மாற்றியமைக்கமுடியும் என நம்புகின்றோம். முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் ,அமைப்புகள் , சமூகநலன் சார்ந்த இயக்கங்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் தமக்கிடையேயான கருத்து பேதங்களை களைந்து,எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தளில் ஓரணியில் போட்டியிடுவதன் மூலமே இது சாத்தியமாகும்.நாம் தான் இந்த சமூகத்தின் காவலர்கல் என்று ஒவ்வொருகட்சிகளும் கூறிக்கொண்டு இருந்தால் ஒற்றுமைக்கு சாத்தியம் இல்லை.
கட்சிஎன்பது மார்க்கமும் அல்ல வேதமும் அல்ல. அது சமூகத்தை வழிகாட்டும் ஓர் இயக்கம். தான் சார்ந்தவர்களின் நலன்களை மட்டும் முன்னெடுக்காது சமூகம் சார்ந்த விடயங்களை முன்னிலைப்படுத்தவேண்டும். வாக்குகளை பெற்றுக்கொண்டபின்னர் மக்களின் தேவைகளை நிவர்த்திக்காது இருப்பது அரோக்கியமானது அல்ல. கட்சியை மார்க்கமாக நம்பியதனால் நாம் படுகின்ற பாடுகள் நமது கண் முன்னே வந்து நிற்கின்றது. மூதூரிலே குன்றும் குழியுமாக கிடக்கின்ற வீதிகள் கட்சியை மார்க்கமெனக்கருதி காலா காலாமாக வாக்குகளை வாரி வழங்கிவரும் நமது மக்களுக்கு நல்லதோர் படிப்பினையாக இருக்கின்றது என்றும் அமைச்சர் கூறினார்.