Breaking
Mon. Nov 25th, 2024

எண்ணற்ற | ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு மக்கள் காங்கிரஸ் ஒருமித்துப் பயணிக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

தோப்பூரில் மக்கள் காங்கிரசின் கட்சிக் காரியாலயத்தை திறந்து வைத்து உரையாற்றிய பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். தோப்பூர் பிரதேச மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் ரஷாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது, முஸ்லிம் சமூகம் அரசியல் ஏமாளிகளாக இன்னும் இருக்கின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வரும் முஸ்லிம் காங்கிரஸிற்கு நாரே தக்பீர் சொல்லி வாகனப் பேரணிகளில் அழைத்துக் கொண்டும் தோள்களில் சுமந்து கொண்டும் திரிந்ததன் பலனை நாம் மீட்டிப் பார்க்கும் போது அது நமக்கு பூச்சியமாகவே இருக்கின்றது. தேர்தல் முறை மாற்றத்தில், உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில், அரசியல் அமைப்பு மாற்றத்தில் சமூகத்தை அச்சுறுத்தும் ஆபத்துக்களைப் பற்றி நாம் கருத்திற்கெடுக்க தவறி வருகின்றோம்.

சமூகக் கட்சியென நீங்கள் மனக்கோட்டை கட்டியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருப்பதால் இந்த விடயங்களைப் பார்க்க அவர்களுக்கு நேரமில்லை

அந்தக் கட்சி இன்று அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கின்றது. கட்சியில் புதிது புதிதாக இணைக்கப்பட்டவர்கள் எல்லாம் பெரும் போராளிகளாக மாறி வருகின்றனர். கட்சியை உருவாக்கியவர்கள் கட்சியைக் காப்பாற்றியவர்கள் கட்சியை வளர்த்தவர்கள் கறிவேப்பிலையாக எறியப்பட்டு வருகின்றனர். தளபதி யாரை விரும்புகின்றாரோ அவர்தான் அதியுயர் பீடத்தின் முக்கியஸ்தாகிறார். உலக நாடுகளில் உள்ள எந்தக் கட்சிக்கும் இவ்வாறான ஒரு யாப்போ வரலாறோ இருந்ததுமில்லை. இப்போதுமில்லை. நமது சமூகத்தை ஏமாளிச் சமூகமாக வைத்துக் கொள்வதற்காக தேர்தல் காலங்களில் 1000 விளக்குப் பாடல்களுடனும் மர்ஹூம் அஸ்ரபின் கணீரான உரைப்பதிவு ஒளி நாடாக்களுடனும் புகைப்படங்களுடனும் இங்கு வந்து உங்கள் வாக்கை அள்ளிச் செல்கின்றார்கள்.

16 வருடங்கள் இதுதான் நடக்கின்றது. தலைமையை தலையில் வைத்து சுமப்பவர்களை அரவணைக்கிறார்கள். கேள்வி கேட்டால் கட்சியில் இருந்து தூக்கி எறிகிறார்கள். பேரியல், அதாவுல்லா, மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், அமீர் அலி, றிஷாட் பதியுதீன், Dr. உதுமா லெப்பை, நஜீப் ஏ மஜீத், ஜெமீல் என்று தொடர்ந்த படலம் பஷீர், ஹசனலி என்று தற்போது வந்து நிற்கின்றது. எங்களை  துரோகிகளென கூறி  தூக்கி எறிவதற்கு முண்டு கொடுத்த – முட்டுக்  கொடுத்த – துணை போன பஷீரும் ஹசனலியும் இப்போது தலைமையைத் தட்டிக் கேட்டதனால் அவர்களும் தூக்கி எறியப்பட்டுள்ளார்கள். நாளை யாரோ இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

இனவாதிகள் நமது சமூகத்தை வேண்டுமென்றே தீண்டும் போது அதனைத் தட்டிக் கேட்பவர்களுக்கு இனவாதக் கூட்டம் பிரச்சினை கொடுக்கின்றது. ஆனால் பெட்டிப் பாம்பாகக் கிடந்து மகுடி போல ஆடும் சமூகத் தலைமைகளை புகழ்கின்றார்கள். இன ஒற்றுமையைப் பேணுவதாகக் கூறி முஸ்லிம் விரோத சக்திகளுடன் கைகோர்த்து நல்ல பெயரை வாங்க முஸ்லிம் காங்கிள் துடிக்கிறது. இது தான் இன்றைய யதார்த்தம்.

தோப்பூர் பிரதேசத்தைப் பொறுத்த வரையில் தேர்தல் காலங்களில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் காங்கிரசுக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் தோப்பூர் பிரதேச செயலகம், தோப்பூருக்கான தனியான பிரதேசசபை தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தோப்பூர் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை காலமும் மேற்கொண்ட ஏதாவது ஒப்பந்தமொன்றை  வெளிக் காட்டினால் நாங்களும்  அதனைக் காட்ட தயாராக உள்ளோம் என்பதை மிகவும் நேர்மையுடன் கூறுகின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *