ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் இன்று நடைபெற்ற புரட்சியின் ஆரம்பம் பேரணியின் போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
மோசடியான அரசியலமைப்பு ஒன்றை தயாரிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும், அதற்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அதேபோன்று தற்போது நாட்டில் பாரிய கடன் பளு தோற்றியிருப்பதாகவும், அதற்கு தம்மீது குற்றம்சுமத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தாம் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கே கடன் பெற்றதாகவும், அதன் பிரதிபலன்களை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருவதாகவும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்ற போதும் எந்தவொரு அபிவிருத்தியையும் முன்னெடுக்கவில்லை என குற்றம்சுமத்தினார்.
நாட்டில் தற்போது தோற்றியுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக தாம் வேண்டும் என்றே தோல்வியடைந்ததாக சிலர் குற்றம்சுமத்துகின்றனர்.
ஆனால் தாம் எதற்காக ஆட்சியை பொறுப்பேற்றேன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.