(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)
01-09-2016ம் திகதி வியாழக் கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் றிஷாதின் நிகழ்ச்சி நிரலில் மாவடிப்பள்ளி நூலகத்தை திறக்கும் நிகழ்விருந்தது.திவிநெகும திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மாவடிப்பள்ளி புதிய நூலகமானது கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக சில அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் திறக்க முடியாத நிலையில் இருந்தது.இதன் அடிப்படைத் தேவைகளை கிழக்கு முதலமைச்சர் உட்பட மு.காவைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று பார்வையிட்டும் எதுவுமே செய்யவில்லை.இதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் நிதியை ஒதுக்கிவிட்டு அதனை மீள எடுத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.ஒரு தடவை இந் நூலகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு முதலமைச்சர் இதற்கு தேவையான ஐந்து இலட்சம் ரூபாயை தான் பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்தார்.கிழக்கு முதலமைச்சருக்கு இந்தப் பணம் ஒரு பொருட்டேயல்ல.இவர் ஒரு மாதத்திற்கு இதனை விட கூடியதலான தொகையை தனது வாகங்களுக்கான எரிபொருளுக்கு செலவு செய்வார்.அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் (இதில் இருவர் பிரதி அமைச்சர்) ஐந்து மாகாண சபை உறுப்பினர்களும் (இதில் ஒருவர் மாகாண அமைச்சர்) உள்ள நிலையில் ஐந்து இலட்சம் என்பது ஒரு சிறிய பணம்.இருந்த போதிலும் யாருமே உதவவில்லை.மாவடிப்பள்ளி ஊரானது எக் காலமும் மு.காவை ஆதரிக்கும் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியான நிலையில் இவ் விடயம் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் மூலம் அமைச்சர் றிஷாத்தின் காதுகளை எட்டியது.இதனை அமைச்சர் றிஷாதின் பார்வைக்கு கொண்டு சென்ற மறு கனம் அமைச்சர் றிஷாத் அதற்குரிய நிதியை வழங்கியிருந்ததோடு நெல்சிப் திட்டத்தின் கீழ் இந் நூலகத்தை மேலும் அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டிருந்தார்.இது அ.இ.ம.கா போராளிகளுக்கு ஒரு உத்வேகத்தை வழங்கியிருந்தது.குறித்த நூலகத்தில் வேலை செய்த ஊழியரிடம் அதற்குத் தேவையான பொருட்களை அறிந்து கொண்டு அனைத்துப் பொருட்களையும் அ.இ.ம.கா ஆதரவாளர்கள் வாங்கியுமிருந்தனர்.இந் நிலையில் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் நாகராஜா அவர்களை அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் தொடர்பு கொண்டு இந் நிகழ்விற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளார்.அப்போது புதிய நூலகம் இன்னும் உத்தியோக பூர்வமாக திறக்கப்படவில்லை என்ற விடயத்தை கூறிய அவர் இதன் காரணமாக இதனை திறக்க அனுமதி தர முடியாதென உடனடியாக மறுத்திருந்தார்.இவ்வாறான விடயங்களுக்கு முதலமைச்சரின் அனுமதியின்றி அனுமதியளிக்க வேண்டாம் என தங்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் தனது கருத்திற்கான நியாயத்தையும் எடுத்துரைத்தார்.இது தொடர்பில் நான் காரைதீவு பிரதேச சபையின் செயலாளர் நாகராஜா அவர்களிடம் மத்திய அரசை சேர்ந்தவர்களால் கட்டப்பட்டாலும் அவர்கள் தான் திறக்க வேண்டுமா? எனக் கேட்டதற்கு அப்படியே எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பதில் அளித்தார்.இதற்கு அஸாம் ஹாபிஸ் அந் நூலகத்தை தாங்கள் திறக்கவில்லை எனவும் தாங்கள் வாங்கிய பொருட்களை கையளித்துவிட்டு செல்கிறோம் எனக் கூறினார்.அதற்கு காரைதீவு பிரதேச சபை செயலாளர் பொருட்களை கையளிப்பதென்றால் பிரச்சினையில்லை எனக் கூறிவிட்டு எதற்கும் தனது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கு பதில் சொல்கிறேன் எனக் கூறுகிறார்.
இதன் பிறகு அமைச்சர் றிஷாத் அணியினர் காரைதீவு பிரதேச சபை செயலாளர் நாகராஜா அவர்களை தொடர்பு கொண்ட போது புதிய நூலகக் கட்டிடத்திற்குள் எதுவும் செய்ய வேண்டாம்.தேவையென்றால் பழைய கட்டடத்திற்குள் பொருட்களை கையளித்துவிட்டு செல்லுங்கள் என கூறினார்.இது உங்கள் அரசியல் பிரச்சினை இதற்கு நாங்கள் என்ன செய்வது? நாங்கள் அவர்களின் கீழ் உள்ளதால் அவர்கள் சொல்வதையே கேட்க வேண்டும் எனவும் கூறுகிறார்.இருவரும் பழைய நூலகத்தினுள் பொருட்களை கையளிக்க உடன்பாட்டுக்கு வந்ததன் பிறகு தொடர்ந்து வேறு சில விடயங்கள் பற்றி கதைத்திருந்தனர்.அமைச்சர் றிஷாத் அணியினர் பழைய நூலகத்தினுள் பொருட்களை கையளிக்கும் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டு காலையில் சென்ற போது அவ் நூலகத்திற்கு பூட்டுப் போட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.குறித்த தினம் பழைய,புதிய நூலகங்கள் இரண்டும் பூட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இது தனது கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுத்து பொருட்களை கையளிக்கும் குறித்த விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்த அ.இ.ம.காவின் போராளிகளுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.இதனை கண்டித்து மாவடிப்பள்ளி இளைஞர்கள் பதாதைகள் தாங்கி ஒரு சிறிய ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..
குறித்த தினம் காரைதீவு பிரதேச சபை செயலாளர் குறித்த சம்பவ நாளன்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்றிருந்த நடமாடும் சேவையில் பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொள்ள ஏற்பாடாகிருந்தமையால் இந் நூலகம் மூடப்பட்டிருக்கும் என தான் அமைச்சர் றிஷாத் அணியினருக்கு அறிவித்திருந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அஸாம் ஹாபிஸ் பொருட்களை கையளிக்க அனுமதி கேட்ட போது அவர் இவ்வாறு எங்கும் குறிப்பிடவில்லை.இது தொடர்பில் நான் அவரிடம் வினவிய போது குறித்த அமைச்சர் றிஷாதின் இணைப்பாளர் தன்னை அச்சுறுத்தியதால் அங்கு பிரச்சினை தோன்றும் என்பதனாலேயே அதனை மூடியதாக கூறினார்.இப்படி அவரது முன்னுக்கு பின் முரணான கதைகள் அவரது பேச்சில் மலிந்து கிடக்கின்றன.அட்டளைச்சேனையில் இடம்பெற்ற நடமாடும் சேவைக்கு காரைதீவு பிரதேச சபையின் அனைத்து ஊழியர்களும் செல்லவில்லை.இப்படியான நிலையில் இச் சிறிய ஊரில் இந் நூலகத்தில் வேலை செய்த ஒரே ஒரு ஊழியரை இவர்கள் அழைத்துக் கொண்டு செல்லத் தான் வேண்டுமா? அந் நடமாடும் சேவையும் மு.காவினரால் நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இங்குள்ள கருத்துக்கள் அனைத்தையும் முடிச்சு போட்டுப் பார்க்கும் போது இதில் மு.காவினரின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் மலிந்து கிடப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.இந்த முஸ்லிம் கட்சிகளின் அரசியல் விளையாட்டில் மாற்று மத சகோதரர் ஒருவர் அகப்பட்டு தவித்துக் கொண்டிருக்கின்றார்.தாங்கள் செய்வதுமில்லை செய்பவரை விடுவதுமில்லை என்ற மு.காவினரின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் மாவடிப்பள்ளி இளைஞர்கள் குறித்த நூலகத்தை உடைத்தமை மிகத் தவறாகும்.அமைச்சர் றிஷாத் குறித்த நூலகத்திற்கு என்ன நடந்துள்ளது என்பதை அறியவும் அங்கு மனம் உடைந்திருந்த போராளிகளை திருப்தி செய்யவும் குறித்த பொருட்களை மாவடிப்பள்ளி நிர்வாகத்திடம் கையளித்துவிட்டு செல்லவுமே அங்கு வருகை சென்றிருந்தார்.அங்கு குழுமியிருந்த அ.இ.ம.காவின் போராளிகள் அமைச்சர் றிஷாத்தை தூக்கி தோழில் சுமந்தி தங்கள் அவாவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.அதன் போது உணர்ச்சி வசப்பட்ட போராளிகள் அந் நூலகத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி இருந்தனர்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்க்க முடியாதவொன்று.இதனை அவ்விடத்திலேயே கண்டித்த அமைச்சர் றிஷாத் உட்பட அ.இ.ம.காவின் முக்கியஸ்தர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டும் விலகிச் சென்றனர்.அரசியல் விளையாட்டுக்களால் மக்கள் தவாறன பாதைக்கு உந்தப்பட்டதற்கு இதுவும் ஒரு ஆதாரமாகும்.அமைச்சர் றிஷாத்தை பழைய நூலகத்தில் பொருட்களை கையளித்துவிட்டுச் செல்ல அனுமதியளித்திருக்கலாம்.பின்னர் புதிய நூலகத்தை முதலமைச்சர் திறந்திருக்கலாம்.இதில் என்ன தவறுள்ளது? இனி என்ன மிக விரைவாக செயற்பட்டு மு.கா இதனை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.இதனை எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு பிறகு திறக்க ஏற்பாடு நடப்பதாகவும் அறிய முடிகிறது.
குறித்த மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற சம்பவம் திட்டமிடப்படதல்ல.மக்கள் உணர்ச்சி வசப்பட்டதன் விளைவாகும் என்பதே உண்மை.அந்த மக்கள் நூலகத்தை உடைத்தார்கள் என்று ஒரு கோணத்தில் நோக்கினாலும் இன்னுமொரு கோணத்தில் அது மு.காவிற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கையாகவும் நோக்கலாம்.