பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளில் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி செயலகத்தின் சில தொலைபேசி இலக்கங்கள் ஹம்பாந்தோட்டை கால்டன் மாளிகையுடனும் தொடர்புபட்டுள்ளதாகவும் அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்லெபொலவின் அறிவுறுத்தலின் படி முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் ஆஜரான அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க இதனை நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன் போது இப்படுகொலை விவகாரத்தில் சதி மற்றும் சாட்சியங்கள் அழிப்பு தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்கவுடன் விசாரணையாளர்கள் சார்பில் புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எல்லபொல, சார்ஜன் ரத்னபிரிய ஆகியோர் ஆஜராகினர். பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தார் மன்றில் ஆஜராகியிருந்தார்.
இதன் போது மன்றில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் எல்லபொல,
சந்தேகத்துக்கு இடமான ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை இணைக்கும் அல்லது தொடர்புபடுத்தும் தொலைபேசிகள் குறித்த மேலதிக விசாரணைகளில் அவை ஹம்பாந்தோட்டை கால்டன் மாளிகையுடனும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்தது
. இது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. சுமார் 400 தொலைபேசி அழைப்புக்கள் குறித்து விசாரணை தொடர்கிறது.
இதனைவிட வஸீம் தாஜுதீனின் சடலத்திலிருந்து மேலதிக ஆய்வுகளுக்காக பெறப்பட்ட உடற் பாகங்கள் காணாமல்போனமை தொடர்பிலான விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர 2013.05.03 அன்று ஓய்வு பெற்றுள்ளமையும் ஓய்வு பெற சில நாட்களுக்கு முன்னர் தாஜுதீனின் உடற்பாகங்கள் உள்ளிட்ட மேலதிக ஆய்வுக்காக வைக்கப்பட்டிருந்த உடற்பாகங்கள் பலவற்றை 15 பெட்டிகளில் வாகனமொன்றில் எடுத்துச் சென்றுள்ளமை தொடர்பில் சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே வழக்குப் பொருளாக கருதப்படும் அரச பொறுப்பில் எடுக்கப்பட்ட மேற்படி உடற்பாகங்களை எடுத்துச் சென்றமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 367 மற்றும் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந் நிலையில் மன்றில் கருத்தினை முன்வைத்த சிரேஷ்ட அரச சட்ட வாதி டிலான் ரத்நாயக்க, கடந்த தவணையில் மன்று விடுத்த உத்தரவுக்கு அமைய, 2 ஆவது சந்தேக நபரான அனுர சேனநாயக்க தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறுவது தொடர்பில் சட்ட மா அதிபரின் கருத்தினை மன்றுக்கு அறிவித்தார்.
இதன் போது சந்தேக நபர் சிறை வைத்தியசாலை பணிப்பாளர், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரின் உரிய அனுமதிகளின் பிரகாரமே கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறுவது தெரியவந்துள்ளதாக கூறிய அவர், தொடர்ந்தும் அவர் அங்கு சிகிச்சை பெற வேண்டுமா என்பது குறித்து தேசிய வைத்தியசாலை பணிப்பாளரிடம் அறிக்கை கோருமாறு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
இந் நிலையில் வாதங்களை முன் வைத்த சந்தேக நபரான பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேராவின் சட்டத்தரணி, தமது சேவைப் பெறுநருக்கு பிணைப் பெற தான் மேல் நீதிமன்றை நாடியுள்ளதாகவும், எனவே தனது சேவைப் பெறுநர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிடுமாறும் கோரினார்.
இதனையடுத்து 2 ஆவது சந்தேக நபரான அனுர சேனநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனது சேவை பெறுநர் தேசிய வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தும் அறையில் சிகிச்சை பெறுவது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் எனினும் உரிய நடைமுறைகளுக்கு அமையவே அவர் அங்கு சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதை விட பாதிக்கப்பட்ட தரப்புக்கு அனுரவின் சிகிச்சை முறையே பிரச்சினைக்குரியதாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் அனுர சேனநாயக்க அங்கு சிகிச்சை பெறுவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி மிஸ்பாஹ் சத்தாரும், அரச சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்கவும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
இந் நிலையில் அனுர சேனநாயக்க தொடர்ந்தும் தேசிய வைத்தியசாலையில் கட்டண அறையில் சிகிச்சை பெற வேண்டுமா என ஆராய்ந்து விரிவான அறிக்கை ஒன்றினை அடுத்த தவணையின் போது மன்றில் சமர்பிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவுக்கு நீதிவான் உத்தரவிட்டு வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.