பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது.
அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக். நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் வகையில் இந்த ஆமோஸ்-6-ஐ உருவாக்கியது பேஸ்புக். இணையத்தை மேம்படுத்தும் செயற்கைகோள்களை எடுத்துச்செல்வதே ஆமோஸ்-6 இன் வேலை.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு “யுடெல்சாட் என்னும் பிரெஞ்சு தகவல்தொழில்நுட்ப செயற்கைகோள் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளியில் இருந்து இணைய சேவையை அளிப்பது பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டம்.
இதற்காக ஆமோஸ்-6 என்னும் செயற்கைகோள் மூலம் அந்த கனவு நிறைவேற்றப்படும்” என அறிவித்தார் மார்க். அதன்படி, ஆமோஸ்-6 செயற்கைகோள் சில மாதங்களுக்கு முன் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ‘கேப்கனவெரல்’ மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள் நேற்று நடந்து கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது.
அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தற்போது ஆப்பிரிக்காவில் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள மார்க் ஸக்கர்பேர்க் “பல விதமான மக்களுக்கு பலன் அளித்திருக்க வேண்டிய இத்திட்டம் இந்த விபத்தால் தோல்வி அடைந்திருப்பதால், தான் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அதே வேளையில் பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான ‘அக்யூலா’ மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என தெரிவித்துள்ளார்”. விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இந்த விபத்தின் மூலம் கிட்டத்தட்ட 390 மில்லியன் டாலர் இழப்பை ஒரே நாளில் சந்தித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.