உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கும் சிரியா நாட்டில் நிலவிவரும் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பச்சிளம் தளிர்கள் பட்டினியால் இறந்து வருவதாகவும், இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு, மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் போராளிகளை நுழையவிடாமல் இராணுவத்தினரும், போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள இடங்களை அரசுப் படைகள் மீண்டும் ஆக்கிரமித்து விடாதபடி புரட்சிப் படையினரும் தாங்கள் கைப்பற்றிய இடங்களை சுற்றி அரண் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.
சிரியாவில் கடந்த மாதம் இருதரப்பினருக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தபின்னர் ஐக்கிய நாடுகள் சார்பில் ஏராளமான உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டபோதும் அவை வெகுதொலைவில் உள்ள மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் கடுமையான உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு கிலோ அரிசி சுமார் 15,000 ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகிறது. சரியான உணவு சாப்பிடாததால் கைக்குழந்தைகளுக்கு பாலூட்டும் சக்திகூட இல்லாமல் இங்குள்ள பெண்கள் வேதனையில் வெம்பித் துடிகின்றனர்.
இதேபோல், குழந்தைகளுக்கான பால் மற்றும் சத்து பானங்கள் கிடைக்காததால் பல குழந்தைகள் பட்டினியால் செத்து வருகின்றன. இந்த பட்டினி மரணத்தை தவிர்ப்பதற்காக பல குழந்தைகள் ஆடு,மாடுகளுக்கான கால்நடை தீவனங்களை தின்று உயிர் வாழ்வதாகவும் நெஞ்சைப் பிழியும் செய்திகளை மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
குழந்தைகள் உள்பட சுமார் 2 இலட்சம் மக்கள் கொடூரமான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள திறந்தவெளி அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் சத்துக்குறைவால் சூம்பிய கன்னம், குழிவிழுந்த கண்கள் மற்றும் வீங்கிய வயிற்றோடு மரணத்தின் விளிம்பு நிலையில் இருப்பதாகவும் அந்த செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளது, கல்மனதையும் கரையவைக்கும் வகையில் அமைந்துள்ளது.