காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி, இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
காஷ்மீரில் கடந்த மாதம் 9–ந்தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறை செயல்களும் நடைபெற்று வருகின்றன. சுமார் 48 நாட்களாக நடந்து வரும் இந்த வன்முறை சம்பவங்களுக்கு இதுவரை 68 பேர் பலியாகி உள்ளனர். 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வன்முறை சம்பவங்களால் அமைதி இழந்து தவிக்கும் காஷ்மீர் மாநிலத்துக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இரண்டாவது முறையாக இரண்டு நாள் பயணமாக புதன்கிழமை சென்றார். அங்கு அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்திய அவர், வியாழக்கிழமை முதல்–மந்திரி மெகபூபா முப்தியை சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியும், ராஜ்நாத் சிங்கும் தனித்தனியே அம்மாநில எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நரேந்திர மோடியை மெகபூபா முப்தி சந்தித்தார். ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.