Breaking
Mon. May 20th, 2024

சுஐப் எம் காசிம்

இலங்கை அரசியலில் புரிந்தும் புரியப்படாமலுள்ள அரசியலமைப்புத் திருத்தம்தான் பத்தொன்பது. நிறைவேற்று அதிகாரத்தின் எல்லையில்லா அதிகாரங்களுக்கு கடிவாளமிடக் கொண்டுவரப்பட்ட இந்தத் திருத்தச் சட்டம் நிறைவேறியதிலிருந்து, பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்படத் தொடங்கிய அதிகார இடைவௌிகள் உச்சத்துக்குச் சென்றிருந்தன.

இது ஜனாதிபதியின் தீர்மானங்கள் சிலதையும் பிரதமரின் செயற்பாடுகள் பலதையும் நீதிமன்றை நாடச் செய்தன. நல்லாட்சி அரசின் அந்திம வருடங்களில் இவ்வாறான சம்பவங்கள் பல இடம்பெற்றதற்கு பிரதமர், ஜனாதிபதிக்கிடையில் நிலவிய பனிப்போரே பங்களித்தது. முன்னாள் ஜனாதிபதியொருவர் நிறைவேற்று அதிகாரத்தின் அதிஉயர் உச்சத்துக்குச் சென்று ஆட்சி நடத்தியதால் வந்த விளைவுகளாலே இந்த அதிகாரத்துக்கு கடிவாளம் தேவைப்பட்டது. அரசியலமைப்பு சபை என்று நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வந்த இந்தக் கடிவாளம், ஒன்றுக்கொன்று முரண்படும் சூழல்களைப் பொறுத்துத்தான் 19 ஆவது திருத்தம் தேவையா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கலாம். உண்மையில் 2002 இல் ரணிலுக்கு ஏற்பட்டிருந்த அனுபவத்தின் காயங்களுக்கு இத்திருத்தத்தில் களிம்பு பூசப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். பெரும்பான்மைப் பலமுள்ள தனது அரசு, நிறைவேற்று அதிகாரத்தால் கலைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஐக்கிய தேசியக் கட்சி, இந்த அதிர்ச்சி இனி ஏற்படாது கவனமெடுத்துத்தான் மைத்திரியை ஜனாதிபதியாக்கியது. உண்மையில் ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் ஏற்பட நேரிடும் அதிகார மோதல்களில் பிரதமரும் பாராளுமன்றமும் பாதிக்கப்படக் கூடாதென்பதே இந்த 19 இன் உள்நோக்கம்.

மொத்தத்தில் சந்தேகம், அதிகார மோகம், அரசியல் தந்திரங்களின் மறு வடிவமாகவே இந்த 19 பிறப்பெடுத்தது. இதில் இன்னொரு சிறப்புமுள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் ஒரே கட்சியிலிருக்கையில் அதிகார மோதலுக்கே இடமில்லாதிருந்த நிலையை மாற்றி, அவ்வாறு மோதினாலும் ஜனாதிபதியே வெல்லும் வழமையை இல்லாமலாக்கி, பிரதமருக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதும் இந்த19 தான். மேலும், வெவ்வேறு கட்சியாக இருந்தால் வெடிப்புக்கள் தவிர்க்க முடியாததையும் இந்த 19 நிரூபித்திருக்கிறது. இத்திருத்தத்தில் இரண்டாவது பாராளுமன்றத்திலா? அதாவது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரா? அல்லது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலுடனா? பிரதமர் அதிக அதிகாரம் பெறுகிறார் என்பதும் இன்று விவாதத்துக்குள் மாட்டியுள்ளது. “ஜனாதிபதியாகத்தான் முடியாதுள்ளதே, பிரதமர் பதவியிலாவது நிலைப்போமே” என்ற ரணிலின் ஆசைகளின் விளை நிலங்களே இந்த 19. எனினும், எதிரே வரும் பொதுத் தேர்தலில் ரணிலுக்கு நல்ல விளைச்சல் கிடைக்குமா? என்பதை இருந்துதான் பார்க்க வேண்டும்.

பெரும்பான்மையுள்ள அரசை நான்கரை வருடங்களுக்குள் கலைக்க முடியாது, பிரதம நீதியரசர்கள், சட்டமா அதிபரை நியமிக்க இயலாது. தேர்தல், பொலிஸ், நீதிச் சேவை ஆணைக்குழுக்களின் தலைவர்களை நியமிக்க இயலாது, ஏன் அதற்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கூட இல்லை, பெரும்பான்மைப் பலமுள்ள பிரதமரை பதவி நீக்க முடியாது, பிரதமரின் சிபாரிசின்றி, தான் விரும்பியவரை அமைச்சராக்க இயலாது, ஏன் பாதுகாப்பு அமைச்சும் இவரிடம் உச்சரிக்கப்படாமலே இருக்கப்போகிறது. இவ்வாறு பல அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுள்ள பதவியை பறிகொடுத்த நிலையில், போனது போகட்டும் அரசாங்கத்தையாவது கைப்பற்றுவோமென ஐக்கிய தேசியக் கட்சியும், கையிலுள்ள ஐனாதிபதியுடன் அரசாங்கத்தையும் கைப்பற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பாய்ச்சலுக்குத் தயாராகின்றன. ஒருவாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தையும் கைப்பற்றிவிட்டால் 19 ஆவது திருத்தம் என்னவாகும்? இதிலுள்ள அரசியலமைப்பு சபை என்பது மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, தனது சகோதரனைக் கட்டுப்படுத்தும் அதிகாரப் பொறியாகவே நோக்கப்படும். இதனால் அதிகாரக் கடிவாளங்களுக்கான அவசியம் இவர்களுக்கு அவசியப்படாது. ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமராகவுமுள்ள இவ்விருவரும் சகோதர பாசத்தில் பிணைக்கப்படுவதும் நிலைமைகளை சாதகமாகவே கொண்டு செல்லும். இவ்விடத்தில் இவர்களுக்குள் பிளவுகளை எதிர்பார்க்க முடியாது. எழுபது வருடங்களாக ஒற்றுமைப் பிணைப்பிலுள்ள குடும்பத்திற்குள் அதிகார மோதல்களை எதிர்பார்ப்பது, வங்குரோத்து அரசியலைத் தேற்றிக்கொள்வதற்கான வடிகான்களே.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியாக இருந்தும் ஒரே இரத்த உறவில்லாதவர்களாக இருப்பின் பிளவுகளுக்குச் சாத்தியம்தான். இங்குதான் 19, நல்லாட்சியில் படமெடுத்தது போன்று தலைவிரிக்கும். இவ்வாறான அனுபவம் இதுவரைக்கும் எமது நாட்டில் இல்லை. இதனால், இதை அலசுவதும் அவசியமில்லை. எனவே, ஜனாதிபதியும் பிரதமரும் சகோதரராகி, அரசாங்கமும் ராஜபக்‌ஷக்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தால், அரசியலமைப்புச் சபையின் இயக்கம் எப்படியிருக்கும்? இதை இல்லாதொழிக்கும் தேவை ஏற்படுமா?

இந்தத் தேவையில் 150 ஐப் பெறும் பேரம்பேசலை நிரூபிப்போமென முழக்கமிடும் சிறுபான்மை கட்சிகளின் அரசியல் உயிர்ப்படையுமா? உண்மையில் ஜனாதிபதி, பிரதமரின் ஒற்றுமை, ஒன்றித்தல்கள் இந்த திருத்தத்தை இல்லாது செய்வதற்கான உடனடி தேவையை ஏற்படுத்தாது. இவர்களின் பிளவு, முறுகல்கள்தான் 19 ஐ நீக்கும் தேவையை ஏற்படுத்தும்.

இந்த அரசியலமைப்புச் சபையில் ஜனாதிபதியின் பிரதிநிதி, பிரதமர், பிரதமரின் பிரதிநிதி, சபாநாயகர், பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து நியமிக்கும் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர், சிறிய கட்சியின் பிரதிநிதி, சிவில் சமூகங்களிலிருந்து மூவர், இவர்களே அரசியலமைப்புச் சபையூடாக ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு கடிவாளமிடுவர். எழுமாந்தமாக சிந்தித்தால் கடிவாள மோதல்களுக்கு வாய்ப்பில்லாத ராஜபக்‌ஷக்களின் அரசில், இச்சபை பொருந்திப் போகவே செய்யும்.

இந்நிலையில்19 ஐ நீக்குவதென்பது ராஜபக்‌ஷக்களின் ஆசையாக இருந்தாலும் அவசியமாக இருக்காது. மேலும், 19 ஐ நீக்கிவிட்டு, இன்னும் ஐந்து வருடங்களில் எண்பது வயதில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்‌ஷ விரும்புவாரா? என்பதும் சிந்திக்க வேண்டியதுதான். இன்னும் கடிவாளமுள்ள ஒரு பதவிக்கு எவரும் கனவு காணப்போவதுமில்லையே! இந்நிலை மாறி நிகழ்ந்து, அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி வசம் வந்தால், ஜனாதிபதியின் நெருக்குதலால் இழுபறிகள் ஆரம்பமாகி 19 ஐ நீக்கும் தேவைகள் உணரப்படலாம். இந்தத் தேவையில்தான் சிறிய சிறுபான்மைக் கட்சிகள், முகமும் முகவரியும் காட்டத் தொடங்கும்.

அரசியலமைப்புச் சபையிலுள்ள பத்துப்பேரில் பிரதமர், பிரதமரின் பிரதிநிதி, சபாநாயகர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மூவருட்பட ஆறுபேரால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கடிவாளங்களுக்குள் சிக்குண்டு, அரச நிர்வாகத்தில் சீரழிவுகள் ஏற்படவே செய்யும். இந்நிலைமைகள் ஒரு பாடலையே ஞாபகமூட்டுகிறது.

“மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று”

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *