Breaking
Sun. Nov 24th, 2024

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாத தலைவன் ஹபீஸ் சயீத், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். இந்தியாவுக்கு பாடம் கற்றுத்தர படைகளை அனுப்புங்கள் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்த பர்கான் வானியை பாகிஸ்தான் தியாகி என கொண்டாடுகிறது. அதுமட்டுமின்றி இந்த பிரச்சினையில் பாகிஸ்தான் அனாவசியமாக தலையிட்டு வருகிறது.

சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த ‘சார்க்’ நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் இந்தப் போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஆனாலும் பாகிஸ்தான் திருந்துவதாக இல்லை.

இப்போது இந்த பிரச்சினையை மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடூர தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவிக்க மூளையாக இருந்து வழிநடத்திய ஜமாத் உத் தாவா இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத் எழுப்பி இருப்பது வேடிக்கையாக அமைந்துள்ளது.

லாகூரில் நேற்று நடந்த கூட்டத்தில் ஹபீஸ் சயீத் பேசுகையில் கூறியதாவது:-

இந்த முறை காஷ்மீர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கி விட்டனர். இந்த போராட்டம் மாபெரும் இயக்கமாக மாறி விட்டது. காஷ்மீரில் உள்ள அனைத்து குழுக்களும் ஒன்றுபட்டு விட்டன. ஹூரியத் அமைப்பின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாகி விட்டன. முத்தாஹிதா ஜிகாத் கவுன்சில் மற்றும் அனைத்து பிரிவுகளும் ஒரே கூரையின் கீழ் வந்து விட்டன. காஷ்மீரில் யாரெல்லாம் உயிரிழந்திருக்கிறார்களோ, அவர்களின் தியாகம் வீண் போகாது.

ஹிஸ்புதீன் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் வானி, என்னோடு பேசிய பின்னர் சாக தயாராக இருந்தார்.

துக்தரான் இ மிலாத் (பிரிவினைவாத அமைப்பு) நிறுவனர் ஆசியா அந்த்ரோபி என்னை போனில் அழைத்து பேசினார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு எனது உதவியை நாடினார்.

காஷ்மீர் பிரச்சினையில் ஹூரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானியின் 4 அம்ச திட்டத்தை இந்தியா ஏற்க வேண்டும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால் போர்க்களத்தை சந்திக்க வேண்டியது வரும்.

இந்தியாவுக்கு பாடம் கற்றுத்தருவதற்கு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப், படைகளை அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹபீஸ் சயீத்தின் இந்த ஆணவப்பேச்சு சர்ச்சையை கிளப்புவதாக அமைந்துள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *