Breaking
Sun. Nov 24th, 2024

ஒலுவில் கடலரிப்பு பிரச்சினை இன்று மக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்றால் மு.கா எதற்காக என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஹமட் புர்கான்  கேள்வியெழுப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த கிழக்கிற்கும் குத்தகைக்காரர்களாக தங்களை இணம்காட்டிக் கொள்ளும்  மு.கா அம்பாறை மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அதில் இருவர் பிரதியமைச்சர்களாகவும், மற்றையவர் மாவட்டத்தின் அபிவிருத்தி குழுத்தலைவராகவும், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர், மற்றும் மாகாண அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என முழுக் கிழக்கையும் ஆளும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் கெபினட் அந்தஸ்துள்ளவர் என்பதை நாங்கள் ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது.

அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு உரிமை அரசியலும் பேசமாட்டார்கள், அபிவிருத்தி அரசியலும் பேசமாட்டார்கள். ஆனால்  அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பார்கள். ஆனால் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி நடத்த வேண்டும்.

ஆக இவர்கள் எதற்காக இருக்கிறார்கள்?

இது எப்படி இருக்கிறது என்றால் வீட்டுக்கு நான்தான் புருசன்
பிள்ளைகளுக்கு வாப்பா நான் இல்லை என்பது போல் அல்லவா உள்ளது?

மக்கள் கூடி அரசாங்கத்தின் கவனத்தை அடைய ஆர்ப்பாட்டம் செய்வதை விடவும் உண்மையில் இந்த ஒலுவில் கடலரிப்பு பிரச்சினையை  கையிலெடுத்து செய்யவேண்டியது முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்பாகும் ஏனெனில் ஒலுவில் துறைமுகம் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுடைய “கனவு” ஆகவே அது முஸ்லிம் காங்கிரஸின் கௌரவம் மர்ஹூம் அஷ்ரப் அவருடைய பெயரை வைத்து அரசியல் செய்பவர்கள்தான் இப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர கடமைப்பட்டவர்கள், இவர்கள் செய்து கொடுக்காது விட்டதால்தான் தற்போது இந்த ஆர்ப்பாட்டம் நடந்தேரியுள்ளது.

எங்கள் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கிறது அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாடு ஒலுவில் பிரதேசத்தை அண்மித்த பாலமுனை நகரில் நடைபெற்றது.

அந்த மாநாட்டில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர், சர்வ கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்  என கிட்டத்தட்ட நாட்டின் அரசாங்கத்தையே அழைத்து வந்த அமைச்சர் ஹக்கீம் இந்த ஒலுவில் பிரச்சினை அல்லது நுரைச்சோலை வீட்டுத்திட்டம் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசவில்லை. மாறாக தங்களுடைய    உட்கட்சிப்பூசல்களையும், அதிகாரப் போட்டியையும் பற்றியும் பேசிவிட்டுச் சென்றார்.

பேச வேண்டிய பிரச்சினைகளை பேசவேண்டிய இடத்திலும் நேரத்திலும் பேசாததன் விளைவு இன்று மக்கள் வீதிக்கு இறங்கி தங்களுடைய தேவையை அடையும் நிலைவந்துள்ளது.

இவைகளை வைத்து அவதானிக்கும் போது இப்பேரணி முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரானதொன்றாகவே பார்க்க முடிகின்றது.

ஒலுவில் மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் மற்றையவர்கள் எப்போது? என கேள்வியெழுப்பினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *