Breaking
Fri. Apr 19th, 2024

சுஐப் எம்.காசிம் –

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க புத்தளம் மாவட்டத்தில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் உடன்பாடுகள் சமூகத்தின் ஆக்கபூர்வ அரசியலுக்கு எடுத்துக்காட்டு. உண்மையில் இந்த இணக்கப்பாட்டு அரசியல் அம்பாரை மாவட்டத்தில் எட்டப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டத்திலிருந்துதான் இந்த இணக்க அரசியல் அடையாளப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பரவாயில்லை எந்தக் கட்சிகளிலிருந்தாவது இங்கு முஸ்லிம்கள் தெரிவாகச் சந்தர்ப்பம் இருந்ததால், புத்தளம் மாவட்டம் இணக்க அரசியலுக்கான மையமாகப் பார்க்கப்பட்டுள்ளதாக இம்முயற்சியை நோக்குவோம். முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் புத்தளம் நான்காம் இடத்திலுள்ளதே, இங்கு ஒரு ஆசனத்தை இழப்பதா? என்பதுதான் இணக்க அரசியலுக்கான இந்த வித்து இங்கு விதைக்கப்பட்டதற்கான காரணம்.

முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் தெரிவான மாவட்டமிது. நிதியமைச்சர் நெய்னா மரிக்காரை ஈன்ற மண்ணிது. இங்கு ஒரு பிரதிநிதியை இழப்பது, சமூக அரசியல் அடையாளத்துக்கான தோல்வியாகவே பார்க்கப்படும். மட்டுமல்ல பிரித்தாளும் தந்திரங்களுக்குப் பலியாகும் மாவட்டமாகவும் பிறரால் இது பார்க்கப்படாலாம் என்பதற்காகத்தான் இத்தனை முயற்சிகள். முப்பது வருடங்களாக மக்களால் தெரிவாகும் எம்.பியின்றிக் கிடந்த இந்த மாவட்டத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான பல முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டன. இதற்கமைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும், நகரபிதா பாயிஸ் தலைமையிலான குழு, ஒட்டகச் சின்னத்திலும் போட்டியிட்டு, சமூக அடையாளத்தை வென்றெடுக்க முயற்சித்தன. எனினும், இந்த முயற்சிகள் இரு தரப்பிற்கும் கைகூடவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிட்ட போதும், சொற்ப வாக்குகளால் நவவி சமூக அடையாளத்துக்கான வாய்ப்பை இழந்தமை பெரும் வேதனை. இதனால்தான் என்ன விலை கொடுத்தும், இம்முறை முஸ்லிம் சமூக அடையாளம் வெல்லப்பட வேண்டுமென்ற சிந்தனைத் தீவிரம், எல்லோரையும் ஓரணியில் இணைத்திருக்கிறது.

வடபுலத்தில் வெளியேற்றப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தையே அரவணைத்து, ஆறுதலளித்ததால் முஸ்லிம் சமூகம் தனித்த ஒரு இனமாக அங்கீகரிக்கப்படுவதற்கு அத்திவாரமிட்ட மாவட்டத்தில், அடையாள அரசியல் இல்லாமல் செய்யப்படுவதை ஏற்க முடியாதே! இந்த எண்ணங்கள்தான் எல்லோரையும் இணைத்துள்ளது.
புலம்பெயர்வது இஸ்லாமிய வரலாற்றுக்குப் புதிய விடயமல்ல. இறைதூதர் முஹம்மது நபியவர்கள், தனது பிறப்பிடமான மக்காவைவிட்டு மதீனாவுக்கு வந்தது முதல் இவ்வரலாறுகள் நீள்கிறது. ஆனால், வெவ்வேறு பின்னணிகள் இப்புலப்பெயர்வுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. ஒரு இனமே அடையாளம் காணப்படுவதற்கு அடிகோலிய புத்தளம் மாவட்டம் ஒன்றிணைந்துள்ளமை சாதாரண சின்னத்திலல்ல, தராசு சின்னத்தில். அரபியில் “மீசான்” எனப்படும் இச்சின்னம், முஸ்லிம்களின் மத, மறுமை உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மரணித்த பின்னர் மண்ணறையிலிருந்து எழுப்பப்படும் மறுமைநாளில், உலக வாழ்க்கையில் செய்த நன்மை, தீமைகளை அளந்து நிறுத்துப்பார்க்கவும், பட்டோலை (சொர்க்கமா, நரகமா) என்ற தீர்ப்புப் பத்திரம் வழங்கப்படுவதும் இந்த தராசின் “மீசான்” நிறுவையில்தான் என்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கை. புனித வேத நூலான திருக்குர்ஆனும் “அளவை, நிறுவைகளில் மோசடி செய்யாதீர்” என எச்சரிக்கும் வசனமும் இந்த “மீசானையே” ஞாபகமூட்டுகிறது. எனவே, எதிர்பார்ப்பதுபோல இந்த முயற்சியை சமூகத்தின் அமானிதமாக அடையாளப்படுத்த, “மீசான்” என்ற சொற்பிரயோகத்தை முஸ்லிம் தலைவர்கள் தாராளமாக உச்சரிப்பர். மற்றும் இச்சின்னம் முஸ்லிம் அரசியலுக்குப் புதியதுமில்லை.

1987 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தராசுச் சின்னத்தையே தெரிவு செய்திருந்தது. கட்சி அங்கீகரிக்கப்படாத அன்றைய சூழலில், சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிக்கு வேறு சின்னம் இருக்கவில்லை. இது மட்டுமா? முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட ஷேகு இஸ்ஸதீன், தனது முஸ்லிம் கட்சிக்கான சின்னமாகவும் இந்த தராசையே “மீசான்” தேர்ந்தெடுத்திருந்தார். எனவே, இன்றைய தேர்தலில் இந்த முயற்சியின் எடைகள் கனதியாகுமெனப் பலர் எதிர்பார்க்கின்றனர். புத்தளம் மாவட்டத்திலுள்ள பிரபல அரசியல் புள்ளிகள் இவ்வணிக்குப் பலம் சேர்த்துள்ளனர். நகரபிதா பாயிஸ், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எஹியா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தாஹிர், புத்தளம் நகர சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் அலிசப்ரி, ஐ.தே.க அலிகான், மக்கள் காங்கிரஸ் முஸம்மில் உள்ளிட்ட பலரின் உள்வாங்கல்கள், முஸ்லிம் சமூக அரசியல் அடையாளத்தை இம்முறை புத்தளத்தில் வென்றெடுக்கவே செய்யும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சிகளும் தத்தமது அணிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளமை “தாயும் பிள்ளையானாலும், வாயும் வயிறும் வேறு” என்பதை உணர்த்தியுள்ளது. முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலுக்கு குறுக்காகக் களமிறக்கப்பட்டுள்ள இவர்களை, இம்மூன்று கட்சிகளும் களமிறக்கக் காரணமென்ன? இதுதான் புத்தளம் மாவட்டம் எங்கும் எதிரொலிக்கும் முஸ்லிம்களின் ஆதங்கங்கள். இந்த மாவட்டத்தின் மகிமை, மகத்துவம் என்பவற்றைக் கௌரவித்துத்தான், கே.ஏ. பாயிஸை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும், நவவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் எம்.பியாக்கி அழகுபடுத்தின. ஆனால், இந்த அரசியல் அழகு சமூக அடையாளமாக வேண்டுமென்றே புத்தளம் மாவட்ட மக்கள் விரும்புகின்றனர்.

முப்பது வருடங்களுக்கு மேலாக, வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு அகதியாக வாழ்ந்த முஸ்லிம்கள், பிறப்பத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணம் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை இழந்துள்ளனர். இதனால் இவ்வகதிகள் புத்தளத்தில்தான் வாழ்ந்தாக வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரமாக, அடையாளமாக புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெல்லப்பட வேண்டும். இந்த வெற்றியை வீழ்த்தும் வேட்டுக்களாக, வேறு கட்சிகளால் தராசுக்கு “மீசான்” வெளியே நிறுத்தப்பட்டுள்ளவர்கள் வேலை செய்யக் கூடாது. இவ்வாறு செய்வது, சகோதரத்துவ மண்ணுக்கு செய்யும் சதியாகவே அளக்கப்படும்.

வடபுலத்து மக்களின் வெளியேற்றம் புத்தளத்தை எப்படிச் சகோதரத்துவப் பிணைப்பில் இணைத்ததென்பதற்கு, முன்னாள் அமைச்சர் மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் கவிதைகள் சாட்சி. “தோப்பு வீழ்ந்து தோழமையானது” என்ற அவரது அழகிய கவிவரிகள், புத்தளம் மாவட்ட முஸ்லிம்களின் கருணையை எடுத்துக்காட்டும் அற்புதக் கவிநயம். அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் குடிசைகளில், கூடாரங்களில் குடியமர்த்துவதற்கு, கற்பிட்டிப் பிரதேசத்தில் ஓங்கி, உயர்ந்து நின்ற தென்னந்தோப்புக்களை வெட்டி, வீழ்த்தி தட்டாந்தரையில் குடிசைகள் அமைத்ததை, மர்ஹும் அஸ்வரின் கவிநயங்கள் எமது மனக்கண்கள் முன் கொண்டு வருகின்றன. அங்கிருந்த மணற்பாங்கான பிரதேசத்தில் வாழ்வியல் இருப்புக்களை அமைக்கும் பணியிலீடுபட்டிருந்தோரின் பாதங்கள் மண்ணுள் புதைந்தன. இவை வரவேற்புக்களால் வீசப்பட்ட மலர்க் குவியல்களுக்குள் நுழைந்த பாதங்கள் என்றார் மர்ஹும் அஸ்வர்.

இப்பணிகளில் மர்ஹும் அஷ்ரபின் பங்களிப்புக்களும் பெறுமதியானதால்தான், இம்மாவட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருந்த சமூக அரசியல் அடையாளம் மீண்டும் உயிர்ப்பெற ஆரம்பித்தது. இந்த மீசானால் அளக்கப்படும் முயற்சிகள் சாத்தியமற்றுப் போக எந்தச் சந்தர்ப்பங்களும் இல்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள புத்தளம் தொகுதியை வைத்தே, வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *