(எம்.ஐ.முபாறக்)
கட்சி ஒன்று அரசியல்ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கின்றபோது அல்லது கட்சியின் முக்கியஸ்தர்களுக்குப் பதவிகள் கிடைக்காதபோது அந்தக் கட்சியின் தலைமைத்துவம் பலவீனமான தலைமைத்துவமாக சித்தரிக்கப்படுவதை நாம் அறிவோம்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அவரது அரசு மிகவும் பலமாக இருந்ததால் ஐக்கிய தேசிய கட்சி பலமிழந்து காணப்பட்டது.யுத்த வெற்றியே மஹிந்தவின் ஆட்சி பலமடைவதற்கு காரணம் என அறிந்தும் கூட,ரணிலின் பலவீனமே மஹிந்தவின் ஆட்சி பலமடையக் காரணம் எனக் கூறப்பட்டது.
ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போன விரக்தி காரணமாகவும் பதவிகளை அனுபவிக்க முடியாமல் போன விரக்தி காரணமாகவுமே .ஐ.தே.க உறுப்பினர்கள் பலர் அக்கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.கட்சியின் தலைவரை மாற்றினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்றொரு குருட்டு வாதத்தை முன்வைத்து ரணிலுக்கு எதிராக அவர்கள் போராடினர்.
அவர் நினைத்ததுபோல் சந்தர்ப்பமும் வந்தது.ஆட்சியும் கவிழ்ந்தது.ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது.இப்போது ரணில் பிரதமர்.அவருக்கு எதிராகக் கிளர்ந்தவர்கள் இப்போது அடங்கிவிட்டனர்.சிறந்த தலைவராக இப்போது அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதைத்தான் சந்தர்ப்பவாத அரசியல் என்பது.இப்படியானதொரு நிலைமையை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் காலத்துக்கு காலம் எதிர்கொண்டு வருகின்றது.தாம் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காததால்;தமது தந்தைமாருக்கு எம்பிப் பதவிகள் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்குவதும் கட்சியின் தலைமைத்துவம் கிழக்குக்கு கிடைக்க வேண்டும் என்று பிரதேசவாதத்தைக் கிளப்புவதும் இப்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
மு.காவின் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் மரணித்ததைத் தொடர்ந்தே இந்தப் பிரச்சினை தோன்றிவிட்டது.கட்சியின் தலைமைத்துவம் கிழக்குக்கே வர வேண்டும் என்று ஒரு சாராரும் பிரதேசவாதம் பார்க்காது தகுதியானவர்களுக்கே தலைமைத்துவம் செல்ல வேண்டும் என்று ஒரு சாராரும் வாதாடினார்.
அஷ்ரபின் பாரியார் பேரியல் அஷ்ரபை அரசியலுக்கு இழுத்து வந்து அவரின் ஊடாக கிழக்கிற்கு கட்சியின் தலைமைப்படுத்துவத்தைக் கொண்டு வருவதற்கு சிலர் முயற்சித்தனர்.அதற்கு அமைவாக மு.காவின் இணைத்தலைவராக ரவூப் ஹக்கீமும் பேரியல் அஷ்ரபும் நியமிக்கப்பட்டனர்.அஷ்ரப் உருவாக்கிய மற்றுமொரு கட்சியான நுஆ கட்சிக்கு பேரியல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பேரியல் அஷ்ரப் சிறிது காலம் அரசியல் செய்துவிட்டு பின்பு அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.இதனால்,அந்
கிழக்கிற்கு தலைமைத்துவம் என்ற கோசம் மீண்டும் எழுந்துள்ளது.கடந்த வருடம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மேலெழுந்தது.
தேசிய பட்டியல் எம்பி பதவியை நீண்ட காலமாக அனுபவித்து வந்த கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூதும் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலியும் அந்த வாய்ப்பை இழந்ததைத் தொடர்ந்தே தலைமைத்துவத்துக்கு எதிரான போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கட்சியின் தலைமைத்துவத்தை சரி கண்டு வந்தவர்கள் தமக்குப் பதவிகள் இல்லை என்றதும் பிழை காணாத் தொடங்கியமையானது அந்தப் போராட்டம் எவ்வளது தூரம் நியாயமானது என்பதைக் காட்டுகின்றது.
பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காக இவர்கள் கட்சியின் தலைமைத்துவத்தில் பிழை காண்கிறார்களா அல்லது அவர்களுக்குப் பதவிகள் தொடர்ச்சியாகக் கிடைத்து வந்தமைக்காக பிழையான தலைமைத்துவத்தை இவ்வளவு காலமும் ஏற்றுக்கொண்டிருந்தார்களா என்று எழும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்?
ஹக்கீமின் தலைமைத்துவம் பிழை என்றால் அவர்கள் அப்போதே அதை மாற்றி இருக்க வேண்டும்.இப்போது மாற்றத் துடிப்பது அவர்களுக்கு எம்பிப் பதவிகள் கிடைக்காததால்தான் என்பது நன்றாகத் தெரிகின்றது.
இந்த விவகாரத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் பிழை தலைமைத்துவத்தின் மீது அல்ல.தலைமைத்துவத்தை முற்றுமுழுதாக ஏற்றுவிட்டு தமக்குப் பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காக தலைமைத்துவத்தை மாற்றத் துடிப்பவர்கள் மீதுதான் பிழை இருக்கின்றது.அதுமாத்திரமன்றி,
கிழக்கின் எழுச்சி என்ற பெயரில்தான் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று அரசியல் அந்தஸ்து அனுபவித்து வருபவர்கள் பூரண அனுசரணை வழங்கி வருவதை அறிய முடிகின்றது.
கிழக்குக்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தின் பின்னால் இருந்துகொண்டு தமது கட்சியை கிழக்கில் வளர்ப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.முஸ்லிம் காங்கிரஸை பலவீனப்படுத்துவதன் மூலம் அந்த மாற்றுக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.இது தனியாக-விரிவாக அலசப்பட வேண்டிய விடயம்.
கிழக்கு எழுச்சிக்காரர்களின் கனவு வேறாக இருக்கலாம்.ஆனால்,அந்தக் கனவை அவர்கள் வேறு தரப்புக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பபோகும் அந்த ஆபத்தை அவர்கள் அறியாமல் இருக்கின்றனர்.