Breaking
Sun. Nov 24th, 2024

(சுஐப் எம்.காசிம்)

பருவ மழை குறைந்த காலங்களில் விடத்தல்தீவு விவசாயம் பாதிக்கப்படுவதுண்டு. அதனால் வயல்களுக்கு வேண்டிய நீரைத் தேக்கி வைக்கக் குளம் தேவைப்பட்டது. விடத்தல்தீவிலிருந்து எட்டு மைல்களுக்கு அப்பால் கிழக்கில் அமைந்த பெரியமடுக் குளம் தூர்ந்த நிலையில் காணப்பட்டது. இக்குளத்தைப் புனரமைத்துத் தேவையான நீரைப் பெற விடத்தல்தீவு விவசாயிகள் முயற்சித்தனர். அதன் பெறுபேறாக 1955ஆம் ஆண்டளவில் பெரியமடுக் குளம் புனரமைக்கப்பட்டது.

குளத்தை அண்டி மக்களைக் குடியேற்ற அரசு தீர்மானித்தது. அதற்கமைய விவசாய முயற்சியில் ஆர்வமும், விருப்பமும் கொண்ட விடத்தல்தீவு விவசாயிகள் பெரியமடுக் கிராமத்தில் குடியேற்றப்பட்டனர். 1956 ஆம் ஆண்டு 100 குடும்பங்களும், 57ஆம் ஆண்டு 100 குடும்பங்களும், சில ஆண்டுகளின் பின் காயாமொட்டையில் பல குடும்பங்களும் குடியமர்ந்தனர். குடும்பம் ஒன்றுக்கு 02 ஏக்கர் மேட்டுநிலத்தில் ஒரு கல் வீடும், 03 ஏக்கர் வயல் நிலங்களும் அரசினால் வழங்கப்பட்டது.

பயங்கரமான வனாசுரக் காட்டின் மத்தியிலே வனவிலங்குகளினால் ஏற்படக் கூடிய ஆபத்துகளுக்கு அஞ்சாமல் இம்மக்கள் துணிச்சலுடன் இக்கிராமத்தில் குடியேறினர். கிராமத்தையும் வயல் நிலங்களையும் திருத்தி அபிவிருத்தியில் ஈடுபட மக்கள் தீவிரமாகப் பாடுபட்டனர். இரவில் வனவிலங்குகளின் தொல்லை ஏற்படாது பாதுகாப்புப் பெற வீட்டைச் சுற்றி வரத் தீ மூட்டி எரித்தனர். யானைக் கூட்டங்கள் குடிமனைக்குள் இறங்கி வாழை மரங்களில் சேட்டை விடுவதும் உண்டு. எனினும் துணிச்சலுடனும், சப்தமிட்டும், தகரங்களை அடித்தும் அவற்றை விரட்டினர்.அக்காலத்தில் மின்சார வசதி இருக்கவில்லை.04f7c927-880e-49ee-ad68-555a463eac14

அன்றைய காலகட்டத்தில் மன்னார் அரச அதிபராக இருந்த திரு.பத்திரன அவர்கள் இம்மக்களின் குடியேற்றத்துக்குப் பாரிய உதவிகள் செய்து வந்தார். மா, பலாக் கன்றுகளையும் மற்றும் பழ மரங்கள், மரக்கறி, விதைகளையும், வாழைக் குட்டிகளையும் அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் இனாமாக வழங்கியது. மக்கள் அவற்றை நட்டுக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தனர்.

அக்காலத்தில் பெரியமடுவுக்கான பாதைகள் சீர்கெட்ட நிலையில் காணப்பட்டன. வாகனப் போக்குவரத்து இருக்கவில்லை. விடத்தல்தீவிலிருந்து உணவுப் பண்டங்களும் மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களும் சைக்கிள்களிலும், கால்நடையாகவும் கொண்டு செல்லப்பட்டன.  வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்றாக அமைந்த போதும் மக்கள் மனஞ்சோரவில்லை. துணிவுடனும், உற்சாகமுடனும் செயல்பட்டு இயற்கைச் சவால்களை வெற்றிகொண்டனர்.

விடத்தல்தீவிலிருந்து பாலம்பிட்டி செல்லும் பாதையில் காயாமோட்டை வரை சென்று அங்கிருந்து பெரியமடுவுக்குச் செல்வதே முதல் அமைந்த பாதை. இப்பாதையின் தூரத்தைக் குறைக்கக் குஞ்சாவில்லில் இருந்து நேரடியாக கிராமத்துக்குச் செல்லக்கூடிய புதிய பாதையை அரச உதவியின்றி ஒற்றுமை மிக்க இம்மக்கள் சிரமதான அடிப்படையில் அமைத்தனர். ஐந்தாம் வாய்க்கால் ஓரமாக இப்பாதை செல்கின்றது. பெரியமடு ஆசிரியர்களின் வழிகாட்டலும், கிராம முன்னேற்றச் சங்கத்தின் நெறிப்படுத்தலும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இப்புதிய பாதை அமைப்புக்கு உதவியது. இதனால் விடத்தல்தீவுக்கும், பெரியமடு கிராமத்துக்குமான தூரம் கணிசமான அளவு குறைந்தது. இது போலவே பெரியமடுவில் இருந்து கடையாமோட்டை போய் பாலம்பிட்டிப் பாதையை அடையாமல் பெரியமடுவிலிருந்து குறுக்குப் பாதையால் நேரடியாகவே, பாலம்பிட்டிப் பாதையை அடையக்கூடிய சுலபமான பாதையை இம்மக்கள் அரச உதவியின்றிச் சிரமதான அடிப்படையில் அமைத்தனர். இவ்விரு பாதைகளும் பெரியமடுவை அடையும் சுலபமான பாதைகளாக அமைந்தன.eb4ffa75-5fcb-4e0f-abc1-cdbf55dd82a6

சிறிமா அரசு ஏற்படுத்திய உப உணவுப் பொருள் கட்டுப்பாட்டால் மிளகாய் போன்ற பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இக்கிராம மக்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தமது மேட்டு நிலங்களிலும், நீர் வசதியுள்ள ஏனைய மேட்டு நிலங்களிலும் தீவிரமாக மிளகாய் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டனர். இதன் பேறாக அபரிமிதமான மிளகாய் விளைச்சல் கிடைத்து. கிராமத்தவரின் முற்றம் எங்கும் மிளாகாய்ப் பழமே காணப்பட்டது. அந்தக் காலத்தில் மிளகாயை இம்மக்கள் “சிவப்பி” என்றே பேசிக்கொண்டனர். கொழும்பு, கண்டி, தலவாக்கலை போன்ற நகரங்களுக்கு சிவப்பி லொறி மூலமே கொண்டு செல்லப்பட்டது.

மிளகாயைப் போலவே பெரியமடு மாம்பழமும், பலாப்பழமும் பிரசித்தி பெற்று விளங்கின. அபரிமிதமாக விளைந்த மா, பலாப் பழங்கள் மாவட்டம் எங்கும் சந்தைப்படுத்தப்பட்டன. பெரியமடு மாம்பழம் என்று சொன்னவுடன் வாய் ஊறும் அளவுக்கு மாவட்ட மக்கள் அதன் உருசியில் இன்பங்கண்டனர்.

பெரியமடு மக்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் கரிசனையும், அக்கறையும் காட்டினர். கஷ்டங்களின் மத்தியிலும் பிள்ளைகளை வீட்டில் மறிக்காது கல்வி கற்க அனுப்பினர். பெரியமடு ம.வி கல்வி புகட்டும் கலாசாலையாக விளங்கியது. இக்கலாசாலையின் ஆரம்பம் தொடக்கம் நீண்ட காலமாகத் திரு எம்.எல்.எம்.ஷரீப் அவர்கள் கலாசாலை அதிபராக விளங்கினார். தான் எதிர்கொண்ட தனிப்பட்ட கஷ்டங்களைப் பொருட்படுத்தாது மாணவரின் மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் பணி செய்தார்.

இக்கலாசாலையில் க.பொ.த சாதாரண தர வகுப்புக்கள் இருந்தன. இக்கலாசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களாக திருமதி ராகிலா ஷரீப் ஏ.சி.எம்.மஹ்ரூப், வி.எம்.காசிம், எம்.சி.ஐ.மரைக்கார், எம்.ஏ.ஸலாம், எம்.ஏ.எம்.பாரூக், எம்.எம்.ரஹ்மத்துல்லாஹ், எஸ்.ஏ.ராசிக் ஆகியோர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெரும் அக்கறை காட்டி ஆர்வத்துடனும் உள்ளன்புடனும் கற்பித்தனர்.ஏனைய பாடசாலைகளுக்குப் பின்போகாத வகையிலே கல்வி சார்ந்த பல்வேறு போட்டிகளுக்கும், விளையாட்டுப் போட்டிக்கும் மாணவர்கள் தயார் செய்யப்பட்டனர். க.பொ.த பரீட்சையிலே கணிசமான மாணவர்கள் தொடர்ந்து நல்ல பெறுபேறுகளைப் பெற்று வந்தனர்.  ஆசிரியர்-மாணவர் உறவும்,    ஆசிரியர்-பெற்றோர் உறவும், பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பெரிதும் பயன்பட்டன.பெரியமடு ம.வி விளையாட்டு மைதானம்ஆசிரியர்-பெற்றாரின் ஒத்துழைப்புடன் சீர்திருத்தம் பெற்றது. இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் இடம்பெற்றன.

பெரியமடுக் கிராம முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை காட்டி உழைத்த அமைப்பு பெரியமடுக் கிராம முன்னேற்றச் சங்கமாகும். குளத்திலிருந்து வாய்க்கால்கள் வெட்டப்பட்ட போது தொழில்நுட்ப அதிகாரியாகப் பணி புரிந்த திரு. வேலுப்பிள்ளைக்கு அனுசரணையாகப் பணி செய்து வாய்க்கால்கள் செம்மையாக அமையத் தொழில் பட்டது இந்தக் கிராம முன்னேற்ற அமைப்புத்தான்.

மேலும், பொதுமக்கள் ஒற்றுமையாக அமைத்த இரண்டு புதுப் பாதைகளுக்கும் இவ்வமைப்பு வழி காட்டியது. இவ்வமைப்பின் நிர்வாக உறுப்பினர்களாக மர்ஹூம்களான உ.வருசை முஹம்மத், எஸ்.பி.முஹியித்தீன், அ.கச்சி முஹம்மத், பி.மீரா முஹியித்தீன், செ.அகமது லெப்பை, எம்.தம்பித்துரை, ஐ.முஸ்தபா, எம். முடியப்பர், எஸ்.யூசுப்பு ஆகியோர் பணி புரிந்தனர். பாடசாலை விளையாட்டு மைதான அமைத்ததில், கிராம முன்னேற்றச் சங்க அமைப்பும் பங்கேற்றிருந்தது. இவ்வாறு இருபோக வேளாண்மைச் செய்கைகளிலும், பலங்கள்,உப உணவுப் பொருட்கள் உற்பத்தியிலும் மக்களின் மனம் உவந்த சேவையைப் பெற்றுச் சிறப்பாக முன்னேறி வந்த கிராமமே பெரியமடு கிராமமாகும்.

துரதிஷ்டவசமாக 90 ஆம் ஆண்டு இடப்பெயர்வால் மக்கள் அனைத்தையும் இழந்து முகாம்களில் வசிக்க நேர்ந்தது. இந்த மக்கள் பல்வேறு இடங்களிலும் அமைந்த அகதி முகாம்களில் வாழ நேர்ந்த போதும், எல்லோருக்கும் பொதுவான ஒரு குடியேற்றக் கிராமம் அமைக்கும் போது புத்திசாலித்தனமாக ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் ஹுசைனியா புறக் கிராமத்தில் குடியமர்ந்தனர். இத்தகைய இணைப்பும், பிணைப்பும்,ஒற்றுமையும் பின்னாளில் பல்வேறு நன்மைகளை ஈட்டிக் கொடுத்தது. ஹுசைனியா புரம் மகா வித்தியாலயம் என்ற ஓர் உயர்தரப் பாடசாலையை அமைக்கவும் இங்கே மாணவர் கல்வி மேம்பாட்டுக்கு வழி வகுக்கவும் உதவியது. இன்று இக்கலாசாலை புத்தளத்திலே அதி சிறந்த கலாசாலையாகக் கருதப் படுகின்றது. ஆண்டுதோறும் பல நூறு மாணவர்கள் பல்கலை சென்று கல்வி பெற இக்கலாசாலை சிறப்புப் பணி செய்து வருகின்றது. கல்வித் துறையிலே இக்கிராமத்தில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி கிராம மக்கள் கல்வி மீது கொண்டுள்ள நீங்காப் பற்றை வெளிக்காட்டி நிற்கின்றது. போற்றி வரவேற்க வேண்டிய சாதனையாக கல்வி முன்னேற்றம் அமைந்த்துள்ளது.

போர் முடிவின் பின்னர் சொந்தக் கிராமத்திலே மீளக் குடியமரும் பணி வடபுலக் கிராமங்களிலே நடைபெற்று வருகின்றது. அனைவரையும் போலப் பெரியமடுக் கிராம மக்களும் தமது ஊரில் உற்சாகமாகக் குடியேறி வருகின்றனர். இதனால் இக்கிராமத்தை அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரத் தேவையான பணிகளை அமைச்சர் றிசாத் அவர்கள் முன்னெடுத்து வருகின்றார்.

கடந்த 30 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிக் கிடந்த பெரியமடுக் குளம் 3 ½ கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. பள்ளமடுவில் இருந்து பெரியமடு வரையான வீதிக்குக் கார்பட் போடப்பட்டுள்ளது. வீதியில் அமைய வேண்டிய பாலங்கள், மதகுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. மஹிந்தோதைய திட்டத்தின் கீழ் பெரியமடு ம.வி யில் விஞ்ஞானஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. பெரியமடு கிழக்கிலே ஐந்தாம் ஆண்டு வரை கற்கக் கூடிய ஓர் ஆரம்பப் பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரியமடு கிழக்கிலும், மேற்கிலும் இரு பொதுநோக்கு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் பொதுவான இடத்தில் ஒரு சந்தைக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் றிசாத் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நூறு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவை தவிர அமைச்சர் றிசாத் அவர்களின் சொந்த முயற்சியில் 250 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியமடு கிழக்கிலும், மேற்கிலும் அமைந்திருந்த இரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

பெரியமடுவில் இருந்து பரப்புக்கடந்தான் ஊடாக முருங்கன் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் உட்கட்டமைப்பு வீடுகள் திருத்தப்பட்டுள்ளன. காணியற்ற இளந்தலைமுறையினருக்குக் காணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரியமடுக் கிராமத்தின் தேவைகளை இனங்கண்டு அமைச்சர் றிசாத் அவர்களுக்குச் சமர்ப்பிப்பதில் திரு.எம்.எம்.அமீன் (உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர்) ஈடுபாடு கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பெரியமடுக் கிராமத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவது போல கிராம மக்களும் உற்சாகத்துடன் மீளக் குடியமர்ந்து வருகின்றனர்.

மீள்குடியேற்றத்தில் அக்கறை காட்டாத கிராமங்கள் கண்டிப்பாக மீளக்குடியேறி தமது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *