கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே காரணம் என்பது உண்மையான விடயம். அதேநேரம் கடந்த தேர்தலில் தோல்விக்கு காரணமாக இருந்தவர் பஷில் ராஜபக்ஷ உட்பட அவரின் குடும்பத்தினராவர். சுதந்திரக்கட்சியின் எந்தவொரு செயற்பாடுகளிலும் பஷில் ராஜபக்ஷ தலையிட உரிமையில்லை என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வருவதற்கு விடுதலை புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபகரனே காரணம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வரும் தருணத்தில் தமக்கு பிரச்சினைகள் வரும் என எதிர்வு கூறிய அவர் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிபெறவைக்க சில செயற்பாடுகளை முன்னெடுத்தார் என்பது உண்மை.
கடந்த தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்குக் காரணமாக இருந்தவர் பஷில் ராஜபக் ஷவே ஆவார். மறுபுறம் மஹிந்தவை வீட்டுக்கு அனுப்ப முற்று முழுவதுமாக இருந்தது அவரது முழு குடும்பமே ஆகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அவரை ஜனாதிபதியாக நியமித்தது நாமே. சுதந்திரக்கட்சியின் எந்தவொறு செயற்பாடுகளிலும் பஷில் தலையிட உரிமையில்லை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் அமர்வதற்கு பஷில் காரணமாக இருக்கவில்லை. அவர் அப்போது வெளிநாட்டிலே இருந்தார். கடந்த பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த போது பஷில் வெளிநாட்டிற்கு ஓடி விட்டார். இப்படியான ஒருவரை நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்புவதற்கு தயாரில்லை.
பஷில் ராஜபக்ஷவினால் எந்தவொரு புதுக்கட்சியையும் ஆரம்பிக்க முடியாது. அவருக்குப் பின்னால் ஒருவரும் அணி சேரமாட்டார்கள். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருக்கிறது. அதனை முன்னிலைப்படுத்தியே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.