முஸ்லிம்– சிங்கள நல்லிணக்கம் எனக்குப் புதிதானதல்ல. அது எனது குடும்பத்துடன் பின்னிப் பிணைந்தது. பரம்பரையாக என்னோடு வந்தது.
முஸ்லிம்களுக்கு என்னால் தீங்கிழைக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக நம்புங்கள் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்செயலுக்கான சதித் திட்டம் தீட்டியவர்கள்,அதன் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை முஸ்லிம்கள் வெகுவிரைவில் அறிந்து கொள்வார்கள் எனவும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் தெஹிவளை– கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
‘அளுத்கமை வன்செயல்களுக்கு நான்தான் காரணமென சிலர் பொய்ப்பிரசாரம் செய்தார்கள். என்மீது குற்றம் சுமத்தி என் பெயரை உலகம் முழுவதும் பரப்பினார்கள்.
இணையத் தளங்கள் மூலம் பொய்ப்பிரசாரங்களை முன்னெடுத்தார்கள். இது பொய் என்பதை முஸ்லிம்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அளுத்கம சதியின் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்வார்கள்.
பலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி நடக்கும் போதெல்லாம் நான் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளேன். பலஸ்தீனத்தில் ஒரு பாதைக்கு எனது பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
எங்களது உறவு அந்தளவுக்கு அர்த்தமுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் முஸ்லிம்களுக்காக பல தடவைகள் குரல் கொடுத்துள்ளேன்.
முஸ்லிம் – சிங்கள உறவு எனக்குப் புதிதானதல்ல. எமது குடும்பம் முஸ்லிம்களுடன் நெருங்கிய உறவு கொண்டதாகும். மெதமுலன யக்கஸ்முல்லையில் முஸ்லிம்களுக்கென ஒரு கிராமத்தை அமைத்து வழங்கியது எமது குடும்பமே.
இந்த நல்லிணக்க அரசுக்கு முன்பே நல்லிணக்கத்தை உருவாக்கியவர்கள். நல்லிணக்க கூட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் நாங்கள். இந்த இப்தார் நிகழ்வில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்தனை செய்கிறேன்’ என்றார்.
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் உரையாற்றுகையில்;
‘தெஹிவளையில் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். சமாதானத்தை விரும்புபவர்கள் முஸ்லிம்கள்.
அவர்களுக்கான பாதுகாப்பினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.