(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளரும் தற்போதைய அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான டி.ஆர்.எல். ரணவீர, முன்னாள் உளவுத் துறை பிரதானி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண ஆகியோர் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலையை தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் முன்னெடுத்த சில நடவடிக்கைகள் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.
இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே பெறப்பட்ட சி.சி.ரி.வி. பதிவுகளை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தொழில் நுட்ப ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்புவது குறித்த நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கான வீஸா மற்றும் நடவடிக்கை செலவுகளைக் கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அமைச்சின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றை தெளிவுபடுத்தியுள்ளது.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.சி. விக்ரமசேகர, மனிதப் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்திர ஆகியோர் இது தொடர்பிலான விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்பித்தனர்.
வஸீம் தாஜுதீன் படுகொலை விவகார விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய இது குறித்த வழக்கு நேற்று மீளவும் புதுக்கடை நீதிமன்றின் 5 ஆம் இலக்க கட்டிடத் தொகுதியில் உள்ள அறையில் மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது இந்த படுகொலை விவகாரத்தில் ஏற்கனவே, சாட்சிகளை மறைத்தமை மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச் சாட்டுக்களின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது முதல் சந்தேக நபரான முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரணவும் 2 ஆம் சந்தேக நபரான முன்னாள் மேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வாவும் பிரசன்னமாகினர்.
விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சி.டப்ளியூ விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர, சார்ஜன் ரத்னப் பிரிய ஆகியோருடன் அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க மன்றில் அஜராகியிருந்தனர்.
இந் நிலையில் விசாரணைகள் ஆரம்பமான போது குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த 14 நாட்களாக தாஜுதீன் விவகாரத்தில் முன்னெடுத்த விசாரணைகளின் சாராம்சம் நீதிவானுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந் நிலையில் வழக்கு விசாரணைகள் ஆரம்பமான போது முதலில் கருத்துக்களை முன்வைத்த அரசின் சிரேஷ்ட சட்டவாதி டிலான் ரத்நாயக்க,கனடாவுக்கு சி.சி.ரி.வி. காட்சிகளை அனுப்பிய பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாவது ஆய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், பணப்பை மீட்கப்பட்ட விவகாரம், சம்பவ இடத்தை புகைப்பட ஆதாரமாக்கிய பொலிஸ் அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் பிரத்தியேகமாக இடம்பெறுவதாகவும் மன்றுக்கு அறிவித்தார்.
டிலான் ரத்நாயக்கவின் வாதம்
உண்மையில் இந்த விவகாரம் தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் ஒன்று உள்ளது. அதாவது முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவர் வஸீம் தாஜுதீனின் தொலைபேசி விபரப் பட்டியலை ஏன் பெற வேண்டும். அதுவும் ஞாயிறு தினமொன்றில் அவர் இந்த பட்டியலை கோரியிருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடர்கிறது.
அத்துடன் குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய முதலாவது சந்தேக நபர் செய்துள்ள வாக்கு மூலத்தை ஆராய்ந்த பின்னர் அவரது கோரிக்கை பரிசீலிக்கபப்டும் . எனவே சந்தேக நபர்கள் இருவரையும் கடந்த தவணையில் முன்வைக்கப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கோருகிறேன்.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 32 ஆவது உறுப்புரையுடன் சேர்த்து பார்க்கப்படும் 113 (ஆ), 296 ஆகிய அத்தியாயங்களுக்கு அமைவாக சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றச் சாட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என்றார்.
மருத்துவ சபையின் விளக்கம்
இதனைத் தொடர்ந்து வஸீம் தாஜுதீனின் சடலம் மீது முதலில் பிரேத பரிசோதனை செய்த வைத்தியர் ஆனந்த சமரசேகர மீதான விசாரணைகள் குறித்து நீதிவான் நிஸாந்த பீரிஸினால் அந்த சபை சார்பில் வந்த நீதிவானிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த மருத்துவ சபையின் சட்டத்தரணி, ஆனந்த சமரசேகர வைத்தியர் தனக்கு வழங்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை தொடர்பில் ஆட்சேபனங்களை முன்வைத்துள்ளதால் அவருக்கு அது தொடர்பில் கால அவகாசம் வழங்கப்படட்டுள்ளதாகவும் அதனால் அவருக்கு எதிரான விசாரணைகள் ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அவரது உதவியாளர்களான வைத்தியர் அமர ரத்ன, ராஜகுரு ஆகிய இருவருக்கும் எதிரான விசாரணைகள் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளன என்றார்.இதனையடுத்து வழக்கு விசாரணைகள் ஜூலை 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.