Breaking
Sun. Nov 24th, 2024

”வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணமென” வடக்கு முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் கூறியதாக பத்திரிகைகளில் இன்று செய்தி ஒன்றைப் படித்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. முன்னாள் நகரசபை உறுப்பினரும் வவுனியா சமூக நல்லிணக்க ஒன்றியத்தலைவருமான  எம் எஸ் அப்துல் பாரி தெரிவித்தார்.

முதலமைச்சர் சீ வி போன்ற முதிர்ச்சியுள்ள கனவான் ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை அமைச்சரவையில் தெரிவித்து பிரச்சினையை திசை திருப்பப்பார்க்கிறார் என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் ஒத்துழைப்புடனும் வடக்கின் ஒரே ஒரு கபினட் அமைச்சரான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி ஹரிஸன் வவுனியா பிரதேச மக்களின் நலன் கருதி கோடிக்கணக்கான செலவில் இந்தக் கருத்திட்டத்தை வவுனியாவில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதற்கான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்ட எம் பிக்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர்கள் பிரசன்னமாகியகிய நிலையில் அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் ஆகியோரின் முன்னிலையில் அரசாங்க அதிபரின் நெறிப்படுத்தலில் ஏகமனதான தீர்மானமொன்று எடுக்கப்பட்டு ”தாண்டிக்குளம்” பொருத்தமான பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு கூட்ட முடிவில் அரசியல் முக்கியஸ்தர்கள், அதிகாரிகளால் குறிப்பிட்ட இடமும் பார்வையிடப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொருளாதார மத்திய நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கான இன்னுமொரு நிகழ்ச்சி நிரலை தனக்குள் கொண்டிருந்ததனால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தொடர்ந்தும் இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தார். இதனைத் தொடர்ந்து வவுனியா வர்த்தக, விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் வவுனியா மாவட்ட மக்களின் விமோசனத்திற்கு தடையாக இருப்பதாக வவுனியா நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஊர்வலமாகச் சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

மக்களின் கோரிக்கைகளுக்கும் நலன்களுக்கும் மாற்றமாக முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் இவ்வாறு ஏன் செயற்படுகின்றார்? என்ற கேள்வி இப்போது எழுகின்றது.

அண்மையில் இடம்பெற்ற குழுக்கூட்டத்தில் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த செல்வம் எம் பி மற்றும் வவுனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள், அமைச்சர்கள் உருக்கமாகவும், ஆவேசமாகவும் கேட்ட போதும் முதலமைச்சர் தனது நிலையிலிருந்து இறங்காமல் விடாப்பிடியாக இருந்தார். இப்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனே இதனைக் குழப்புவதாக கூறுவது அவர் அமர்ந்திருக்கும் கதிரைக்கு இழுக்கான ஒன்றாகும்.

முதலமைச்சரைப் பொறுத்தவரையில் அவர் இந்தப் பதவிக்கு வந்த பின்னர் வடக்கு முஸ்லிம்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் செய்யவில்லை. முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கும் உதவவில்லை. வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தொடர்பான தீர்மானமொன்றை கொண்டுவந்து நிறைவேற்றிய அவர் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக எந்தவிதமான உருப்படியான நன்மைகளையும் செய்யவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பாரபட்சமாக நடந்து வரும் முன்னாள் நீதியரசர் இப்போது வவுனியா மக்களுக்கும் அநீதி இழைக்கின்றார். இவ்வாறான ஒருவரிடம் எவ்வாறு நாங்கள் நீதியை எதிர்பார்க்க முடியும்?

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *