பாகிஸ்தானின் பந்துவீச்சைப் பலப்படுத்தும் வகையில் அணியின் உதவிப் பயிற்றுநராக முஷ்தாக் அஹ்மதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான முஷ்தாக் அஹ்மத் தற்போது தேசிய கிரிக்கெட் கல்வியத்தின் (அக்கடமி) தலைமைப் பயிற்றுநராக பதவி வகிக்கின்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கவனத்தில் கொண்டே இவர் உதவிப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் தொடர்களுக்கு அஸ்ஹர் மஹ்மூத் உதவிப் பயிற்றுநர் பதவியைப் பொறுப்பேற்பார்.
இதேவேளை பாகிஸ்தானின் களத் தடுப்பு பயிற்றுநராக அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ரிக்சன் பணியாற்றுவார்.
முஷ்தாக் அஹ்மத் கடந்த 2014முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்றுநர் குழாமில் பல்வேறு பதவிகளை வகித்தவராவார்.
இங்கிலாந்தில் சுழல்பந்துவீச்சு ஆலோசகராக கடமையாற்றியுள்ள முஷ்தாக் பயிற்றுநர் தொழிலில் நல்ல அனுபவசாலி ஆவார்.
இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் 185 விக்ெகட்களையும் 144 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 161 விக்ெகட்களையும் கைப்பற்றியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்துடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர். ஒற்றை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.