(அஸீம் கிலாப்தீன்)
வெள்ள நீர் வடிந்து விட்ட போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமை இன்னமும் முன்னய நிலைமைக்குத் திரும்பவில்லை.
அன்றாடம் கூலித் தொழில்கள் மூலம் தமது வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களின் நிலையோ இன்னமும் மோசமானதாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளான மெகட கொலன்னாவ அபூபக்கர் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த மக்களுக்கு 450 உலர் உணவுப் பொதிகளையும், பலூலியா மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த மக்களுக்கு 300 உலர் உணவுப் பொதிகளையும் முஸ்லிம் எய்ட் நேற்று மாலை வினியோகம் செய்துள்ளது. முஸ்லிம் எய்ட் பணியாளர்கள், இக்ராம் இஸாக், அஸ்மி ஆகியோருடன் மௌலவி நாளீர், சமய சமூகத் தலைவர்கள் வினியோக நிகழ்வில் பங்கேற்றனர்.
ஹாமதுரு வத்த பகுதியைச் பராவுல் இமாம் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த குடும்பங்களுக்கு 250 உலர் உணவுப் பொதிகள் நாளை முஸ்லிம் எய்ட் இனால் வினியோகிக்கப்படவுள்ளது.
இப்பிரதேச மக்களுக்கு இதுவரை உலர் உணவு ஏதும் வினியோகிக்கப்படவில்லை என்பதுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இப் பகுதிகளில் வாழ்வோர் பெரும்பாலும் நாளாந்த கூலித்தொழிலை தமது வருவாய் மூலமாகக் கொண்டவர்களாகும். மேலும், இப்பகுதிகளிலுள்ள குடும்பங்களின் சமையல் பாத்திரங்கள் அனைத்தும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டு விட்டன. இதுவரை சமையலறை உபகரணங்கள் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தற்போது கிடைத்துள்ள உலர் உணவுகளை சமைத்து உண்ண தமக்கு சமையலறை உபகரணங்கள் உடனடித் தேவையாக உள்ளதெனவும் மக்கள் தெரிவித்தனர்.