(சுஐப் எம்.காசிம்)
“எதனை இழந்தாலும் நாம் கல்வியை இழக்க முடியாது. இழக்கவும் கூடாது. கல்விதான் எமது ஒரே ஒரு சொத்து” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மல்வானையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று, அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய அமைச்சர், மல்வானையைத் தளமாகக் கொண்டு, மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளித்து வரும் கல்வி முன்னேற்றச் சங்கத்துக்கும் சென்றார்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 750 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களையும், பாடசாலை சீருடைகளையும், அப்பியாசப் பயிற்சிப் புத்தகங்களையும் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர், பாடசாலை மாணவர்களின் தேவை கருதி நிதியுதவியையும் வழங்கி வைத்தார்.
கல்வி முன்னேற்றச் சங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் றிசாத், அகதி வாழ்வென்பது மிகவும் பொல்லாதது என்பதை, தாம் வாழ்க்கையில் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவன் என்பதால், இங்குள்ள மக்கள் படுகின்ற அவஸ்தைகளையும், கஷ்டங்களையும் உணர்கின்றேன். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக இந்தச் சங்கம் மேற்கொள்ளும் பணிகள் பாராட்டத்தக்கவை. மல்வானை ஒரு கல்வியியலாளர்கள் சமூகத்தைக் கொண்ட ஒரு கிராமம். இங்குள்ள பிரபல பாடசாலையில் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் வந்து, கற்ற மாணவர்கள் உயர்நிலையில் இருக்கின்றனர். எனவே துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மனம் சோர்ந்து விடாமல் எடுத்த முயற்சியை கை விடாதீர்கள் என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த கல்வி முன்னேற்றச் சங்கத்தின் முக்கியஸ்தர் எம்.எப்.எம்.பசால் தமது கல்வி முன்னேற்றச் சங்கம் பாரிய பணிகளை ஆற்றி வருவதாகவும், க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கென தாங்கள் தயாரித்து வழங்கும் முன்மாதிரியான வினாத்தாள், முன்னோடிப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியிலுள்ள மாணவர்களின் உயர்வுக்கு வழி சமைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சுமார் 06 மாத காலம் எடுப்பதாகவும், கிட்டத்தட்ட 15 இலட்சம் வரையில் இந்தத் திட்டத்துக்கு செலவிடப்படுவதாகவும் தெரிவித்தார். சுமார் 50 கல்வியியலாளர்கள் தமது சங்கத்துடன் இணைந்து பணி செய்வதாகவும், அவர்களின் சொந்த நிதியும் கல்வி முன்னேற்றச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது என்றார். தமது சங்கத்தின் பணிகளை விரிவுபடுத்த அமைச்சர் உதவிகள் வழங்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் குறிப்பிட்டார்.