இலங்கையில் முதன் முறையாக நுகர்வோர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது எனவும், இம்மாதம் 14 – 20 ஆம் திகதிவரை இந்த நுகர்வோர் வாரத்தை நாடெங்கிலும் சிறப்பாகக் கொண்டாட தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கொழும்பு, வோக்சுவல் வீதியில் அமைந்துள்ள, நுகர்வோர் அதிகார சபையில் நேற்று (03/03/2016) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
எனது அமைச்சின் கீழ் வரும் நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority), இந்த வாரத்தை அனுஷ்டிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதோடு, அதற்கான பூரண அனுசரணையையும் வழங்குகின்றது.
இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இந்த நிறுவனங்கள் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாது, தாமாகவே விரும்பி இந்த வாரத்தை சிறப்பிக்க தமது பூரண பங்களிப்பை நல்க முன்வந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் நுகர்வோர் வாரத்தில், இந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.
சுமார் 60 க்கும் மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்புடன், ஆயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களை நுகர்வோருக்கு விஷேட சலுகைகளில் வாரம் முழுவதும் வழங்குவதற்கு முடியும். அத்துடன், இந்த வாரத்தில் நுகர்வோர் வாங்கும் அனைத்துப் பொருட்களுக்கும், விஷேட கழிவுகள் வழங்கப்படும் என்பதையும் நான் இத்தருணத்தில், பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.
மேலும், இந்த வாரத்தை சிறப்பாக அமுல்படுத்தும்வகையில், வணிக சங்கங்கள், சுப்பர் மார்கட்கள், மருந்து விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், ஆபரணங்கள், மின்சார இலத்திரனியல் பொருட்கள், கட்டடப் பொருட்கள், ஆடை அலங்காரப் பொருட்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் இதில் தீவிரமாகப் பங்கேற்கவுள்ளன என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.
இந்த வாரத்தின் இன்னுமொரு முக்கிய அம்சமாக, இம்மாதம் 15ஆம் திகதி, கண்டியில் நுகர்வோர் உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் நுகர்வோர் அமைப்புகளின் அங்கத்தவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பப் பெண்கள், அரச அதிகாரிகள், மற்றும் பொதுமக்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஓர் அங்கமாக, வீதி நாடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் வழியாக நுகர்வோருக்கு விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், நுகர்வோர் உரிமை தொடர்பாக, தேசிய ரீதியில் மாணவர்களுக்கிடையிலான கட்டுரை மற்றும் சுவரொட்டிப் போட்டிகளை நடத்துவதற்கும் நாம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் எனக் கூறிய அமைச்சர் றிசாத், நுகர்வோர் வாரத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்னின்று உழைப்பவர்களுக்குத் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்படத்தக்கது.