Breaking
Sun. Apr 28th, 2024

மலையக மண்ணின் தோன்றி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பல்வேறுபட்ட கோணங்களில் அளப்பரிய பங்களிப்பைச் செய்தவராக மறைந்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோசப் முத்திரை பதித்திருப்பதாக அவரது மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலத்தில் வடக்கிலும்,கிழக்கிலும் ,மலையகத்திலும் தலைநகரிலும் புகழ் பூத்த இலக்கியவாதிகளை ஒவ்வொருவராக நாம் இழந்து கொண்டிருக்கின்றோம்.

மலையகத்தைப் பொறுத்தவரை எங்களது குடும்பத்தோடு தொடர்பைப் பேணி வந்து , நீண்ட காலத்திற்கு முன்னர் மறைந்த மூத்த எழுத்தாளர் என்.எஸ்.ஏ.ராமைய்யாவிற்குப் பிறகு நான் பெரிதும் மதிக்கும் இலக்கியவாதியாக மறைந்த தெளிவத்தை ஜோசப்பைக் காண்கின்றேன்.

சிறுகதை, நாவல், குறுநாவல் ஆசிரியராகவும், பத்தி எழுத்தாளராகவும், திரைப்பட கதை,வசன கர்த்தாவாகவும், தொகுப்பாசிரியராகவும்,நூல்களுக்கு அணிந்துரை எழுதுபவராகவும், கூட்டங்களில் நயவுரை நிகழ்த்துபவராகவும் தெளிவத்தை ஜோசப் தடம்பதித்துச் சென்றிருக்கிறார்.

இலங்கையில் மட்டுமல்லாது தமிழகம், மலேசியா,அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் வரை தமிழ் இலக்கியத்திற்குத் தம்மை அர்பணித்து அரும்பணியாற்றியவராக மறைந்த ஜோசப் பல்லாயிரக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பது அவரது சிறப்புக்குச் சான்றாகும்.

இலக்கிய நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அவற்றில் பேச்சாளராக அல்லது பார்வையாளராக அவர் அமர்ந்திருப்பதை நாங்கள் வழக்கமாகக் கண்டிருக்கின்றோம்.

வற்றாது ஓடிக் கொண்டிருக்கும் நதியைப் போன்று, தங்குதடையின்றி தனது 88 ஆவது வயதில் கூட அநேக விருதுகளுடனும்,புகழாரங்களுடனும் வாழ்ந்து மறைந்த தெளிவத்தை ஜோசப் பொதுவாக பெயருக்கும்,புகழுக்கும் ஆசைப்படாதவராக இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்திருந்தார்.

இலக்கியப் பரப்பில் புதிய பிரவேசங்கள் எவ்வளவுதான் நிகழ்ந்தாலும், இத்தகைய மூத்த எழுத்தாளர்கள் விட்டுச் செல்லும் இடைவெளியை இலகுவில் நிரப்பிவிட முடியாது.

மறைந்த தெளிவத்தை ஜோசப்பின் குடும்பத்தினருக்கும்,உறவினர்களுக்கும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுக்கும் சிறுபான்மை அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *